
கட்சியில் ஏற்பட்ட உட்பூசல்களால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நானே மைபிபிபி கட்சிக்கு அதிகாரப்பூர்வத் தலைவர் என சங்கப் பதிவகம் உறுதிப்படுத்தியுள்ளது என்று டான்ஸ்ரீ கேவியஸ் தெரிவித்தார். கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சங்கப் பதிவகம் வெளியிட்டக் கடிதத்தை ஊடகவியலாளர் சந்திப்பில் காட்டிய டான்ஸ்ரீ கேவியஸ், இனி எந்தவிதக் குழப்பமும் இல்லை என்றார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே கட்சியின் தலைமைப் பதவிக்கும் கட்டடத்திற்கும் குறி வைத்து பல பிரச்சனைகள் ஏற்பட்டன, அந்தக் காலக் கட்டத்திலும் சங்கப் பதிவகம் தம்மையே மைபிபிபி கட்சியின் தலைவராக உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், அதனை கட்சியில் இருக்கும் இன்னொரு தரப்பு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இருப்பினும் அந்த தரப்புடன் ஒற்றுமை பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்றார் அவர். இதனிடையே மைபிபிபி கட்சியின் மூத்த துணைத் தலைவராக டத்தோ ஶ்ரீ காந்தி முத்துசாமி •உதவித் தலைவர்களாக டத்தோ ஸக்காரியா, டத்தோ சந்திரகுமணன், டத்தோ சோமசுந்தரம், டத்தோ கில்பர்ட் கோ கியான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். செயலாளராக டத்தோஸ்ரீ ரோஜர் லி பொருளாளராக டத்தோ ஜேசன் லாவ் பெங் வெய், துணைப் பொருளாளராக கங்கா தேவி, மகளிர் தலைவியாக ஜெனிபர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



