
சிலாங்கூர் மாநில செந்சோசா சட்டமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் ஜூனியர் சூப்பர் சிங்கர் பாடல் திறன் போட்டியில் கீர்த்திகா ராமலிங்கம் வாகை சூடி இரண்டாயிரம் வெள்ளி பரிசு தொகையை தட்டிச்சென்றார். நேற்று கிள்ளான் டேவான் ஹம்சா மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிச் சுற்றில் 10 போட்டியாளர்கள் பங்குபெற்றனர். இதில் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்ற அபிஷேகப்பிரியன் 1,500 வெள்ளி பரிசு தொகையை வென்றார்.. மூன்றாம் நிலையை T. கலைமதி வென்று, ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை தட்டிச் சென்றார். கே. அபிராமி மற்றும் பாவினா பூபாலன் 4,5ஆவது இடங்களைப் பிடித்தனர். வெற்றியாளர்களுக்கான பரிசு தொகையை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகோவும், கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியுமான மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோரும் எடுத்து வழங்கி பாராட்டினார். இந்த போட்டியின் வழி திறமையான இளம் பாடகர்கள் அடையாளம் காணப்பட்டதாக டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார். போட்டியில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட இளம் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியது பாராட்டுக்குரியது என்றார் அவர்.



