
மலாக்காவில் சனிக்கிழமை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார். பக்கத்தான் ஹரப்பானை மீண்டும் அரியணையில் அமர்த்த மலாக்கா வாக்காளப் பெருமக்கள் தயாராகி விட்டதை கள நிலவரம் தெளிவாகக் காட்டுகிறது என்றார். தேசிய முன்னணி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் இடையே இப்போது உச்சக் கட்ட போர் முற்றியுள்ளது. மலாக்காவில் பக்கத்தான் ஹரப்பான் மட்டுமே மிகச்சிறந்த ஆட்சியை வழங்கும் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டிருக்கிறார் மத்திய அரசாங்கத்திலும் இந்த இரு கட்சிகள் பதவிக்காக சண்டையிட்டுக் கொண்டதால் இரு முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அம்னோவை எதிர்த்து உருவான பெர்சத்துக் கட்சி, கொஞ்சமும் தயக்கமின்றி பதவிக்காக மீண்டும் அம்னோவுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் இவர்களுக்கிடையிலான சண்டை மட்டும் ஓயவில்லை என்று அவர் சாடினார்.



