
நாளை மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 28 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2018 இல் நடைபெற்ற தேர்தலில் மலாக்கா மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் நம்பிக்கை துரோகத்தால் 22 மாதங்களில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை பறிகொடுத்தது. இந்நிலையில் நாளை நடைபெறும் தேர்தலில் மலாக்கா மாநிலத்தில் மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பக்கத்தான் ஹரப்பான் சார்பில் முதல்வர் வேட்பாளராக அட்லி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் மிகச் சிறந்த தலைவராக இருப்பதால் மலாக்கா மாநில மக்கள் பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்காளர்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. காடேக் சட்டமன்ற தொகுதியில் ஜசெக வேட்பாளர் ஜி சாமிநாதன் மற்றும் ரிம் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் வேட்பாளர் பிரசாத் குமார் ஆகியோரும் வெற்றி பெறுவார்கள் என்று ஆணித்தரமாக கூறப்படுகிறது.



