
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்ட கெஅடிலான் ஒன்றில் கூட வெற்றி பெறாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் மாச்சாப், ரெம்பியா மற்றும் கெலாபாங் தொகுதியில் கெஅடிலான் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை இந்த மூன்று தொகுதிகளில் கெஅடிலான் குறைந்த வாக்குகளில் தோல்வி கண்டுள்ளது பெரும் வேதனையாகும். அணி தாவியவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியதும் தோல்விக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஆகவே கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கெஅடிலான் கட்சியை மீண்டும் பழைய உத்வேகத்துடன் கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்தவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம். ஆகவே அவர் மீண்டும் உற்சாகத்துடன் அரசியல் களத்தில் இறங்கி பக்கத்தான் ஹரப்பானை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



