
நாட்டில் ஏற்பட்ட நோய்த்தொற்று காலக்கட்டத்தில் மலேசியர்கள் மத்தியில் மன அழுத்தம் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருப்பதாக மலேசிய மனநல சங்கத்தின் தலைவர் டத்தோ அண்ட்ரு மோகன் ராஜ் தெரிவித்தார். இந்த இரண்டு ஆண்டு காலகட்டத்தில் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. வேலை வாய்ப்புகள் இல்லை, நிரந்தர சம்பளம் இல்லை, வருமானம் பாதிப்பு, வீட்டில் குடும்ப பிரச்சினை, தொழில் பாதிப்பு உட்பட பல பிரச்சினைகள் காரணமாக இவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இதே காலகட்டத்தில் பள்ளி மாணவர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே மலேசியர்கள் இதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். இது சற்று காலம் பிடித்தாலும் மன அழுத்தத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள மலேசியர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
