
வரும் ஜனவரி மாதம் 18 ஆம் தேதி நடைபெறும் தைப்பூசத்தை முன்னிட்டு இந்து பெருமக்கள் இப்போதே காணிக்கை செலுத்தும் வகையில் விரதம் ஏடுக்க தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் காரணம் காட்டி தைப்பூச ரத ஊர்வலம் மற்றும் தைப்பூச கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று அரசாங்கம் கூறுவது இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் தெரிவித்துள்ளார். தைப்பூசத்தில் தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு காணிக்கை செலுத்த இப்போதே இந்தியர்கள் தயாராகி விட்டார்கள். இன்னும் குறுகிய காலமே இருக்கும் வேளையில் ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா அடுத்த ஆண்டு தைப்பூசத்திற்கு அனுமதி இல்லை என்று கூறுவது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் தற்போது பல் நிகழ்வுகள் நடைபெற அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை கேஎல்சிசியில் ஒரே குடும்ப விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்கும் அரசாங்கம் தைப்பூசத்துக்கு தடை விதிப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். கடுமையான எஸ்ஓபி விதிமுறைகளுக்கு உட்பட்டு தைப்பூசம் ரத ஊர்வலமும் முருகப்பெருமான் பக்தர்கள் காணிக்கை செலுத்த அனுமதியும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
