
நாட்டில் தற்போது புதிதாக காஜாமூவ் விநியோகச் சேவை செயலி நேற்று அறிமுகம் கண்டது. கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு 5,000 புதிய வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளது என இந்நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி விஷால் ஆத்மலிங்கம் கூறினார். மளிகைப் பொருட்கள், உணவு, மருந்துகள் போன்றவைகளை வாடிக்கையாளர்களின் வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்க்கும் சேவையை இது வழங்குகிறது. பொருட்களை நமக்கு விருப்பமானக் கடைகளில் வாங்கி அதனை காஜாமூவ் விநியோகச் சேவை மூலம் நமது வீட்டிற்கே கொண்டு சேர்க்க முடியும். மேலும், நாம் யாருக்காவது பொருட்கள் அனுப்பவும் நமது வீட்டிற்கே வந்து அதனைப் பெற்றுக் கொண்டு அனுப்பவேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாய் அனுப்பும் சேவையும் வழங்குகிறார்கள். அடுத்த ஆண்டு காஜாமூவ் நாடு தழுவிய அளவில் தங்களின் சேவையை விரிவுபடுத்த உள்ளது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தடம் பதித்துள்ள காஜாமூவ், இந்தோனேசியா இந்தியா, வியட்னாம், கனடா, வங்காளதேசம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இருப்பதாகவும் விஷால் குறிப்பிட்டார்.
