
தைப்பூசத் திருவிழா, அடுத்த ஆண்டு(2022) ஜனவரி 18-ஆம் நாள் மலேசியாவில் புகழ்பெற்ற பத்துமலைத் திருத்தலத்தில் நடைபெறுவது ஏறக்குறைய உறுதியாகிறது. இதன் தொடர்பில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா முன்னிலையில் ஹலிமா தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் பத்துமலை தேவஸ்தான அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு மன்றம், சுகாதாரத் துறை, செலாயாங் நகராண்மைக் கழகம், தேசிய போலீஸ் படைத் தலைமையகமான புக்கிட் அமான், செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமை அலுவலுகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் தேவஸ்தான பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் ரத ஊர்வலத்தில் பங்குபெறும் பக்தர்களைக் கட்டுப்படுத்துவது, முடி இறக்கும் கடைகளை அனுமதிப்பது, காவடியை அலங்கரிக்கும் ஆற்றோரப் பகுதியின் தூய்மையைப் பராமரித்தல், கடைகளுக்கான அனுமதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டன. மொத்தத்தில் 2022 தைப்பூசத் திருவிழா உறுதியானாலும் இதற்கான நடைமுறை, தேவஸ்தான தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறை, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விதிமுறை யாவும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலாலம்பூர் துன் எச்.எஸ். லீ சாலையில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து பத்துமலை திருத்தலம் நோக்கி புறப்படும் இரத ஊர்வலம் பத்து இடங்களில் மட்டும் நிறுத்தப்படுவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
