
இவ்வாண்டு தைப்புசத் திருவிழாவை பக்தர்கள் மிதமான அளவில் கொண்டாடி கொரோனா தொடர்பிலான ‘தைப்பூச திரள்’ உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மலேசிய இந்து சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது. கோவிட்-19 ஆட்கொல்லி கிருமியின் புதிய திரிபான ஒமிக்ரோன் பரவல் நாட்டில் தலைதூக்க ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில், நாம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன்ஷான் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். தைப்பூச விழாவிற்கான நடமாட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகளை இன்னும் ஒரு சில நாட்களில் அரசு அறிவிக்க உள்ள நிலையில் அவற்றை அனைவரும் அக்கறையுடன் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
