
தமிழீழத்தின் 4-ஆவது கட்டப் போர் முடிவுக்கு வந்த நாள் மே 17; இலட்சக் கணக்கான ஈழத் தமிழ் மக்கள், உலக போர் நடைமுறைக்கு மாறாக இரசாயன குண்டுகளுக்கும் கொத்து கொண்டுகளுக்கும் ஆளாகி தம் இன்னுயிரை இழந்த ஈழப் போர், முள்ளி வாய்க்காலில் நிலைகுத்திய நாள், 2009-ஆம் ஆண்டு இதே நாள்!
உலக நாடுகளும் உலக அரசியலும் இன்னும் கண் திறந்து பார்க்காத இந்த இனப் படுகொலைக்கு கணக்கு தீர்க்கும் காலம் எப்போது என்று தெரியாமல், காலம் கரைகிறது.
இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் எதிரி நாடுகளாக இருந்தாலும் தமிழரை அழிப்பதில் ஒருமுகப்பட்டு இலங்கைக்கு உதவின; ரஷ்யா, கியூபா, இரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் இலங்கை பக்கம் அணிவகுத்தன. இதைவிட, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இவர்களின் அரசியல் ஆலோசகர் கேரளத்து நாராயணன் ஆகியோரெல்லாம் இன்ப வெள்ளத்தில் திளைத்த நாள் இன்று.

இவற்றுக்கெல்லாம் பதில் தெரிய வேண்டிய வரலாற்றுத் திருப்புமுனையும் இராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய பன்னாட்டு சதியும் எதிர்-காலத்தில் உலக அம்பலத்தில் அரங்கேறியேத் தீரும் ஒரு நாளில்.. .;
இராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர்தான், விடுதலைப் புலிகளின் நிலை இறுகியது என்று, இன்றளவும் சொல்லப்படுகிறது.
1991 மே 21-இல் நடைபெற்ற அந்தச் சம்பவத்தில் படம்பிடிக்கச் சென்ற பாப்பா சுந்தரம் என்பவரின் புகைப்படக் கருவிக்கு மின்கலம் வாங்கிக் கொடுத்தார் என்ற சில்லறைக் காரணத்திற்காக பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கிரார். இப்பொழுது பரோல் விடுமுறையில் தாய் அர்ப்புதம் அம்மாளின் அரவணைப்பில் இருக்கிறார் அந்த சர்க்கரை நோயாளி!
பேரறிவாளனிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த அதிகாரி, கள்ளத்தன-மாகவும் திட்டமிட்டும் அதை மாற்றிப் பதிவுசெய்து, வேண்டுமென்றே அவரை சிறையில் தள்ளி, பேரறிவாளனின் இளமை வாழ்வை கொள்ளை அடித்த கொடுமை நடந்துள்ளது.
ராஜிவ் காந்தியைக் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட இடைவார் வெடி-குண்டில் 2மி.மீ. விட்டம் கொண்ட 2,000 Steel ரவைகள் பயன்படுத்தப்-பட்டன. அந்த வெடிகுண்டை இடுப்பில் அணிந்தபடி ராஜீவ் காந்திக்கு மாலையிடச் சென்றப் பெண் தாணு, ஒரு தமிழீழப் பெண்.

பல்லாயிரக் கணக்கில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் திரளும் அந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மாலையிட வேண்டிய அவசியம் தானுவுக்கு இருந்திருக்கலாம்; ஆனால், தாணுவை ராஜீவ் காந்தியிடம் அழைத்துச் சென்று, ராஜீவ் காந்திக்கு அறிமுகமும் செய்துவைத்து மாலையிடவும் அனுமதி வாங்கித் தந்த காங்கிரஸ் புள்ளி யார்?
கடைசிவரை அந்த நபர் விசாரணை வளையத்தில் சிக்காமல் தப்பித்தது எப்படி?
அந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது திருப்பெரும்புதூரில்; திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி இன்னமும் தனித் தொகுதி. அங்கு, தாழ்த்தப்பட்டப் பிரிவினர்தான் போட்டியிட முடியும்.
1967 முதல் திமுக 8 முறை அந்தத் தொகுதியைக் கைப்பற்றி உள்ளது. இப்பொழுதும் திமுக வசம்தான் அந்தத் தொகுதி உள்ளது. இடையில், அதிமுக-வும் 3 தடவை அங்கு வென்றுள்ளது. இந்த இரு கட்சிகளும் மாறிமாறி வென்ற இந்தத் தொகுதி, ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுயாகவும் விளங்கியது.
1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மூன்ற பொதுத்தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் மரகதம் சந்திரசேகர் என்பவர்தான் தொடர்ந்து வென்றார்.
இந்த மரகதம் சந்திரசேகரின் மகளான லதா பிரியகுமாரின் வீட்டில்தான் தாணு தங்கி இருந்தார். லதாவின் கணவர் ஒரு சிங்களர். புகைப்படக் கலைஞருக்கு மின் கலம் வாங்கிக் கொடுத்த பேரறிவாளனைத் திட்டமிட்டு சிக்கவைத்த இந்திய புலனாய்வுப் பிரிவு, லதா பிரியகுமாரையும் அவரின் கணவரையும் ஏன் விசாரிக்கவில்லை?.

இந்த இருவரும்தான் தானுவுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் அல்லாமல், உள்ளூர் காங்கிரஸ் தலைவருக்கு தாணுவை அறிமுகப்படுத்தி, அவர் மூலமாக, ராஜீவ் காந்தி அருகில் தாணு மாலையுடன் செல்வதற்கான ஏற்பாட்டையும் செய்தனர்.
அந்தத் தேர்தலில், தமிழ் நாட்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்திருந்தன. ராஜீவ் காந்தியும் ஜெயலலிதாவும் எவ்வளவு நெருக்கம் என்பது அந்நாளைய அரசியல் வட்டத்தினருக்குத் தெரியும்.
எம்ஜிஆர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு, செயல்படாத நிலைக்கு ஆளான நேரத்தில், ஜெயலலிதா ராஜிவ் காந்திக்கு கடிதம் எழுதி, அதில், எம்ஜிஆரால் செயல்பட முடியவில்லை; செயல்படுவது இருக்கட்டும் ஒருபுறம்; அவரால் பேசவே முடியவில்லை. அதனால், நிருவாகமும் தேக்கம் கண்டுள்ளது. இதை யெல்லாம் கருத்தில் கொண்டு நான் முதல்வராக உதவி செய்யுங்கள். நீங்கள் சொன்னால் எம்ஜிஆர் கேட்பார் என்று இரகசியமாக கடிதம் எழுதினார் ஜெயலலிதா.
இதை எப்படியோ தெரிந்துகொண்ட எம்ஜிஆர், அதன் பிறகுதான் ஜெயலலிதாவுடன் ஒருவரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாதென்று உத்தரவு இட்டார்.

அந்த அளவுக்கு நெருக்கம் உடைய ராஜிவ் காந்தி, புது டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக தமிழகத்திற்கு வருகிறார். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கூட்டணித் தலைவர் ஜெயலலிதாதான். அப்படிப்பட்ட ஜெயலலிதா, ராஜீவ் காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வராமல் ஒதுங்கிக் கொண்டது ஏன்?
அந்த நேரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தி. அவரும் கூட்டத்திற்கு வரவில்லை.
மாநிலத் தலைவர்களும் கூட்டணித் தலைவர்களுமான ஜெயலலிதாவும் இராமமூர்த்தியும் அந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வராததன் காரணத்தைப் பற்றி, ராஜீவ் காந்தி கொலையை விசாரித்த கார்த்திகேயன் தலைமையிலான குழுவினார் கடைசிவரை கண்டுகொள்ளவே இல்லை.
ஆனாலும், இவை யாவும் உலகின் கண்களையும் கருத்தையும் இன்னமும் உறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

சம்பவத்தன்று, ஆந்திரப் பிரதேத்தின் ஹைதராபாத் நகரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, தமிழ் நாட்டுக்கு புறப்பட்ட நேரத்தில், தேர்தல் பிரச்சாரத்திற்காக அமர்த்தப்பட்டிருந்த தனியார் விமானம் பழுதடைந்து விட்டது.
அரை மணி நேரம் வரை காத்திருந்த ராஜிவ் காந்தி, “பரவாயில்லை; இன்றைய தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளை இத்துடன் முடித்துக் கொண்டு, நாளை மீண்டும் தொடங்கலாம்; இதற்கிடையில் விமானத்தை முறையாக பழுதுபார்த்து வையுங்கள்” என்று சொன்னதுடன், அவர் விமானி எனபதால் என்னென்ன சிக்கல் என்பதை சரியாக அடையாளம் கண்டு பழுதான விமானத்தை அனுப்பிய தனியார் நிறுவனத்திற்கு அங்கிருந்தே ஒரு மின்னஞ்சலையும் அனுப்பிவிட்டு ஒய்வெடுப்பதற்காக பெங்களூருவிற்கு சென்றுவிட்டார்.
இதற்கிடையில், பழுதப்பட்ட விமானம் அவசரம் அவசரமாக சீர்செய்யப்பட்டு மீண்டும் ராஜீவ் காந்தி பயணத்திற்காக தயார்ப்படுத்தப்பட்டது. எல்லாம் மின்னல் வேகத்தில் வழக்கத்திற்கு மாறாக சட்டுசட்டென நடைபெற்று முடிந்தன.
விமானம் தயாரானதும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ்-க்கு தகவல் பரந்தது. தவிர, ஆஸ்கார் ஃபெனாண்டஸ் ஒரு மாநிலத் தலைவராக இருந்தாலும் அவர் சொல்வதை ராஜிவ் காந்தி கேட்பார், என்பதால், தேர்தல் பிரச்சாரத் திட்டக் குழுவினர் அவரை ஏவிவிட்டனர்.
இதற்கிடையில், சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக பலமுறை தொலைபேசி வழியாக ராஜீவ் காந்தியை அழைத்துள்ளனர். அவரோ, களைப்பினாலும் அயர்வினாலும் தொலைபேசி இணைப்பை யெல்லாம் நிறுத்திவிட்டு, தன்னை எழுப்ப வேண்டாம் உதவியாளர்களிடமும் சொல்லிவிட்டு உறங்கச் சென்றுவிட்டார்.
அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்த ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ், இராஜீ காந்தியை எழுப்பும் விதமாக அறைக் கதவை தட்ட முனைந்தபோது தடுத்த உதவியாளர்களையும் மீறி, இராஜீவ் காந்தியை எழுப்பியிருக்கிறார் ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ்.

தூக்கக் கலக்கத்தோடு வந்து கதவைத் திறந்த ராஜீவ் காந்தியிடம், தமிழ் நாட்டுக்குப் புறப்படுங்கள். திருப்பெரும்புதூர் கூட்டத்திற்கான எல்லா ஏற்பாடும் முழு வீச்சில் நடைபெற்றுள்ளன என்று தெரிவித்திருக்கிறார்.
சீற்றமடைந்த இராஜிவ் காந்தி, நான்தான் ஹைதராபாத்திலேயே அனைத்தையும் தெளிவாக சொல்லிவிட்டேனே; தமிழ் நாட்டு நிகழ்ச்சிகளை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றதும், தன்னை மாற்றிக் கொண்ட ஆஸ்கார் ஃபெர்னாண்டஸ், சற்று தணிந்து “தமிழ் நாட்டில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை யெல்லாம் திருப்பெரும்புதூருக்கு அழைத்து வந்துவிட்டார்களாம்; இன்று அந்தக் கூட்டத்திற்குப் போகாவிட்டால், நாளை இதேப் போன்ற எழுச்சியைக் காண முடியாமல் போகலாம்” என்றெல்லாம் பௌவியமாக சொல்லி ராஜீவ் காந்தியை சமாதானப்படுத்தி திருப்பெரும்புதூருக்கு, அதாவது கொலைக் களத்திற்கு தந்திரமாக அனுப்பி வைத்திருக்கிறார்.
அந்த ஆஸ்கார் ஃபெர்னாண்டசிடமோ, ஹைதராபாத்தில் இருந்து அவரைத் தூண்டிவிட்டவர்களிடமோ கடைசிவரை விசாரணை நடைபெற வில்லை.
இதுமட்டுமல்ல; ராஜீவ் காந்தி கொலைத் தொடர்பான சதிவலை எங்கெங்கோ விரிகிறது. ஹவாலா நிதிமோசடிக்காரர் சந்திரசாமி, அமெரிக்காவின் சிஐஏ முகவர் சுப்பிரமணியன் சாமி உட்பட ஏராளமானோர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திட்டமிட்டே ஒதுக்கப்பட்டு, இதை விடுதலைப் புலிகளின் பக்கம் மட்டுமே மிகத்த்ந்திரமாக திருப்பிவிட்டனர்.
இதற்கெல்லாம் ஒரு நாள் தீர்வு கிட்டாமலா போகும்?

தமிழர்களுக்கும் ஈழத் தமிழ் மண்ணுக்கும் சாதகமான சூழலை தமிழன்னை ஏற்படுத்துவாள் என்பது திண்ணத்திலும் திண்ணம்.
