31 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

பொய் பேசி, அதட்டி மிரட்டும் அதிகாரிகள்; அடியாட்களாக பாதுகாவலர்கள்:
இந்தியத் தூதரகத்தில் சண்டித்தனம்!

🔥 Views : 23
👁 Reading Now : 50

கோலாலம்பூர், ஜூன் 01: -நக்கீரன்
மன்னராட்சியும் மக்களாட்சியும் இணைந்த மலேசியாவில் குடிநுழைவு உள்ளிட்ட சேவைகளுக்காக இங்கு இயங்கும் ஒரு வெளிநாட்டு அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், தூதரக சேவையை நாடிச் செல்லும் பொதுமக்களிடம் அநியாயமாக பொய் பேசுவதுடன் அதட்டல்-மிரட்டலுடன் செயல்படுகின்றனர். ஏதும் விளக்கம் கேட்டால், பொதுமக்களை பேசவிடாமல்
பாதுகாவலர் மூலம் மிரட்டி வெளியே விரட்டும் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுகின்றனர்.

கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தில்தான் இத்தனை கெடுபிடிகளும் மூர்க்கத்தனமும் இடம்பெறுகின்றன.

இந்திய அரசின் ஓசிஐ-அட்டைக்காக விண்ணப்பம் செய்ய, ஏற்கெனவே சந்திப்புறுதிக்கான ஒப்புதலைப் பெற்றதன் அடிப்படியில் நேற்று மே 31, மதியவேளையில், கோலாலம்பூர் இந்தியத் தூதரகத்திற்குச் சென்ற ஒரு விண்ணப்பதாரரிடம் அங்குள்ள அதிகாரிகள் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதுடன், அங்கு பணியில் இருந்த பாதுகாவலரையும் அடியாளைப் போல பயன்படுத்த முனைந்துள்ளனர்.

பெற்றோர் அல்லது முன்னோர் யாராவது இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அதன் அடிப்படையில் இந்திய அரசு வழங்கும் ‘ஓஐசி’(Overseas Indian Citizenship) அட்டை கிடைத்தால், இந்தியாவிற்கு விசா இன்றி சென்று வரலாம் என்பதால், அதற்கான விண்ணப்பப் படிவத்தை மலேசிய இந்தியத் தூதரகம் வடிவமைத்துள்ள இணையப் பக்கத்தில் கட்டம் கட்டமாக பூர்த்தி செய்துவிட்டு, அதில் கேட்கப்பட்டிருந்த பத்திரங்களையும் பதிவேற்-றம் செய்தபின், அந்த இணைய விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அசல் பத்திரங்கள், நகல்களுடன் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் சென்ற-போது, அங்கு வாடிக்கையாளர் ஒருவரும் இல்லை.

முகப்பிட சேவையில் இருந்த இரு ஆண் பணியாளர்கள் இருந்திருக்கின்றனர். ஏறக்குறைய 20 நிமிடங்கள் கழித்து, ஓஐசி சேவைக்காக ஒதுக்கப்பட்ட 4-ஆம் இலக்க முகப்பிடத்திற்கு விண்ணப்பதாரர் அழைக்கப்பட்ட நேரத்தில், அங்கிருந்த அதிகாரி, முகத்தை சிடுசிடுவென வைத்துக்கொண்டு என்னவென்று கேட்டிருக்கிறார்.

இணையதளத்தில் விண்ணப்பம் செய்த படிவத்தை சம்பந்தப்பட்டவர் கொடுத்தபோது அந்த அதிகாரி இடக்கையால் அலட்சியமாக் வாங்கிக் கொண்டு, “Documents எங்கே?” என அதட்டியிருக்கிறார்.

என்னென்ன பத்திரங்கள் வேண்டும் என்று விண்ணப்பதாரர் கேட்டதும் இருக்கின்ற எல்லாவற்றையும் கொடுக்கும்படி அந்த ஊழியர் கேட்டிருக்கிறார்; (இல்லை உத்தரவு இட்டிருக்கிறார்.) உடனே, தான் வைத்திருந்த பத்திரங்களை விண்ணப்பதாரர் எடுத்தபோது, “இங்கே நின்று கொண்டு எதையும் செய்யக்கூடாது; போய் உட்கார்ந்து மெதுவாக எடுத்துக்கொண்டு வரும்படி அந்த அதிகாரி மீண்டும் அதட்டிய நிலையில், இருக்கைக்கு திரும்பிய விண்ணப்பதாரரிடம் அடுத்த அதிரடியாக, இணைய விண்ணப்பத்தின்போது ஏன் எந்தப் பத்திரத்தையும் பதிவேற்றம் செய்யவில்லை என்று கேட்டிருக்கிறார்.

இப்படி அந்த அதிகாரி கேட்டது அக்கிரமமான பொய்; அளவுக்கு மீறிய சண்டித்தனம்.

காரணம், இந்தியத் தூதரகத்தின் இணையப் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விவரத்தையும் பத்திரங்களையும் வழங்காவிட்டால், விண்ணப்படிவத்தையும் பூர்த்தி செய்ய முடியாது; இந்தியத் தூதரகத்திற்கு நேரில் செல்வதற்கான சந்திப்புறுதியும் கிடைக்காது.

அப்படி இருந்தும், எந்தப் பத்திரத்தையும் பதிவேற்றம் செய்யவில்லை என்று பொய் சொன்ன அந்த அதிகாரி, வேண்டுமென்றே சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரை அலைக்கழித்திருக்கிறார்.

இருந்தபோதும் அந்த விண்ணப்பதாரர், இரு கைகளிலும் கடப்பிதழ், பிறப்புப்பத்திரம், திருமண சான்றிதழ் உள்ளிட்ட அசல் பத்திரங்கள், நகல்களை ஏந்தியபடியே நிதானமாக, “இந்தியத் தூதரகத்தின் இணையப் பக்கத்தில் எப்படி வழிகாட்டப்பட்டதோ அதன்படி கட்டம் கட்டமாக விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்ததுடன், அதில் கேட்கப்பட்ட படம், கையெழுத்து மாதிரி உட்பட அனைத்துப் பத்திரங்களையும் பதிவேற்றம் செய்துவிட்டேன்” என்று சரியாக பதில் சொன்னதை அலட்சியப்படுத்திய அந்த அலுவலர், “யாருடைய பெயரின் அடிப்படையில் முயற்சி செய்கிறீர்கள்? என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டுள்ளார்.

“ஓன்றும் புரியவில்லை; என்ன கேட்கிறீர்கள்” என்று விண்ணப்பாதாரர் வினவியதும், “யாரு ஊருல பொறந்தது? அப்பாவா, அம்மாவா என்று அந்த ஊழியர் அடுத்தக்கட்ட மிரட்டலை விடுத்திருக்கிறார்.

“அம்மாதான் தமிழ் நாட்டில் பிறந்தவர்; சிவப்பு ஐ.சி(Red Identity Card). வைத்திருந்தார்” என்று விண்ணப்பாதாரர் விளக்கம் அளித்ததும் அடுத்த விநாடியே, “அசல் பத்திரங்களை பதிவேற்றம் செய்யாமல், ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டதை ஏன் பதிவேற்றம் செய்தீர்கள்?” என்று சிடுசிடுப்புடன் அந்தப் பெண் ஊழியர் கேட்டிருக்கிறார்.

சற்றுமுன், எந்தப் பத்திரமும் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றவர், இப்போது, மலாய் மொழிப் பத்திரங்களை இணைக்காமல் ஏன் ஆங்கிலத்தில் உள்ள பத்திரங்களை பதிவேற்றம் செய்திருக்கிறீர்கள் என்று கேட்டத்தில் இருந்தே அவர் அப்பட்டமாக பொய்யுரைக்கிறார் என்பது தெளிவாகிறது.

தம்முடைய விண்ணப்பதைத் தட்டிக் கழிப்பதற்காக இந்த ஊழியர் வேண்டு-மென்றே அலைக்கழிக்கிறார் என்பதை உணர்ந்த விண்ணப்பதாரர், அந்த வேளையிலும் நிதானமாக.. .

“என் விருப்பத்திற்கு எதுவும் செய்ய முடியாது; மலாய் மொழியில் இருக்கின்ற பத்திரங்களை நீதிமன்ற பொழிபெயர்ப்பாளர் மூலம் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து, அதில் புத்ராஜெயா வெளியுறவு அமைச்சகத்தின் சான்று கையொப்பமும் முத்திரையும் பெற்றபின் அதன் நகலைத்தான் அனுப்ப வேண்டும் என்று தெளிவாக விளக்கம் அளீக்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்ததும் “ஒங்க அம்மாவோட பாஸ்போர்ட் எங்கே?” என்று அடுத்தக் கேள்வியை அந்தப் பணியாளர் கேட்டுள்ளார்.

“அம்மாவின் கடப்பிதழ் சம்பந்தமாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால்தான், புத்ராஜெயா தேசியப் பதிவு அலுவலகத்தில் அம்மாவின் சிவப்பு அடையாள அட்டைக்கான நகல் பத்திரத்தைப் பெற்று அதில் புத்ராஜெயா ‘Wisma Putra’-வின் சான்றையும் பெற்று அதன் நகலைத்தான் இணைய விண்ணப்பப் படிவத்துடன் இணைத்திருந்தேன். அதன் அடிப்படையில்தான், இன்றைய சந்திப்புறுதிக்காக எனக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது” என்று ஒவ்வொரு கட்டத்திலும் விண்ணப்பதாரர் முறையான விளக்கத்தை அளித்ததும் சீற்றம் அடைந்த அந்தப் பெண் ஊழியர்,

“அம்மாவோட பாஸ்போர்ட் இல்லாவிட்டால், இங்கே நிற்க வேண்டாம்; ஓஐசி கிடைக்காது; நாங்கள் கொடுக்க மாட்டோம்” என்று மூர்க்கத்தனமாகவும் முரட்டு சுபாவத்துடனும் சீறி விழுந்தார்.

நிலை தடுமாறிய விண்ணப்பதாரர், செய்வதறியாமல், அந்த ஊழியரைப் பார்த்தபொழுது, “ஏன் முறைக்கிறீங்க?; இனிமே இங்கு நிற்கக்கூடாது” என்று விரட்டினார்.

சரியான முன்னேற்பாட்டுடன், ஓஐசி தொடர்பாக இணையப் பக்கத்தில் வழிகாட்டியபடி சென்ற விண்ணப்பதாரர் சொன்ன எதையும் காதில் வாங்காமல், தட்டிக் கழிப்பதிலேயேக் குறியாக இருந்த சம்பந்தப்பட்ட பெண் ஊழியரைப் பார்த்து சளிப்படைந்த விண்ணப்பதாரர், “எங்களைப் போன்ற வாடிக்கையாளர்கள் இங்கு வராவிட்டால் உங்களுக்கெல்லாம் இங்கு வேலையே இல்லை; அப்படி இருந்தும், ஏன் இப்படி எரிச்சலுடன் நடந்து கொள்கிறீர்கள்”? என்று கேட்டதும் மேலும் சினமடைந்த அந்தப் பெண், “வெளியேறுங்கள், இல்லாவிட்டால் பாதுகாவலரை விட்டு வெளியேற்றுவேன்” என்று மிரட்டினார். உடனே பாதுகாவலரையும் அழைத்தார்.

“இந்திய தூதரகத்தில் இப்படியெல்லாம் நடைபெற்றால் நான் போலீசில் புகார் செய்வேன்; பத்திரிகைக்குச் செல்வேன்” என்று விண்ணப்பதாரர் சொன்ன மறுவிநாடியே “அதைப்பற்றி யெல்லாம் எனக்கு கவலையில்லை” என்று இறுமாப்புடன் அந்தப் பெண் பதில் சொன்னார்.

போதாக்குறைக்கு, வரவேற்பு முகப்பிட சேவையின் இருந்த இன்னொரு பெண், வெளியே ஓடி பாதுகாவலரை உள்ளே அழைத்தார்.

சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரருக்கு ஓஐசி அட்டை கிடைக்கிறதோ இல்லையோ என்பது அடுத்தக்கட்டம்; அத்துடன், ஒருவருக்கு அந்த அட்டையை வழங்குவது இந்தியத் தூதரகத்தின்-இந்திய ஒன்றிய அரசின் தனி உரிமை. அதைப்பற்றி யாரும் வினா எழுப்ப முடியாதுதான்.

ஆனால், அங்கு பணியில் இருந்த தேவி என்ற ஊழியர், தூதரக சேவையை நாடிவரும் பொதுமக்களிடம் இந்த அளவுக்கு பொய்ப் பேசுவதும் வேண்டுமென்றே தட்டிக்கழிப்பதும் அலட்சியமாக நடப்பதும் எரிந்து விழுவதும் எதற்காக?

இந்த தேவி, தன்னிச்சையாக இப்படி நடந்துகொள்கிறாரா அல்லது தூதரக உயர் அதிகாரிகளே இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவு இட்டிருக்கிறார்களா என்பது பொதுமக்களுக்கு தெரிந்தாக வேண்டும்.

ஆயிரக் கணக்கில் மலேசிய ரிங்கிட்டைப் பெற்றுக் கொண்டு ஓஐசி-கான விண்ணப்பப் படிவத்தை ஏற்பதற்குப் பதிலாக, என்ன விளக்கம் சொன்னாலும் செவிமடுக்காமல் மறுத்ததுடன், பாதுகாவலர் மூலம் விரட்டும் அளவுக்கு அகம்பாவமும் ஆணவமும் கொண்ட சம்பந்தப்பட்ட பெண் பணியாளரை கோலாலம்பூர் இந்தியத் தூதரகம் உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்.

முகப்பிட சேவையில் உள்ள ஒரு சாதாரண ஊழியருக்கு, பாதுகாவலர் மூலம் மிரட்டி தமிழரான ஒரு வாடிக்கையாளரை வெளியேற்றும் அளவுக்கு துணிவு எங்கிருந்து வந்தது?

பொதுவாக, மலேசியத் தமிழர்கள் என்றால் இந்திய அரசுக்கு ஒரு இளப்பமான பார்வை உண்டு.

மலேசிய இந்தியர்களில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் தமிழராக இருந்தும்
இந்தி மொழிக்காரர்களையும் மற்றவர்களையுமே இங்கு தூதராக அனுப்புவது இந்திய ஒன்றிய அரசின் வாடிக்கையாக இருக்கிறது. அத்துடன், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உள்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் தூதரக சேவையை நாடும்பொழுதெல்லாம் அவர்கள் இந்திய அதிகாரிகளால் இரண்டாம்பட்சமாக நடத்தப்படுகின்றனர்; காக்க வைக்கப்படுகின்றனர்; அலட்சியப்படுத்தப்படுகின்றனர்.

வெ.1,300 வருமானத்தைவிட ஒரு தமிழரை பாதுகாவலர் மூலம் விரட்டி அடிப்பது அவர்களுக்கு மேலாகத் தெரிவதை, இதன் வெளிப்பாடாகத்தான் பார்க்கவேண்டி இருக்கிறது.

அண்மையில், ஏதோ அதிசயமாக குருமூர்த்தி என்பவர் இங்கு தூதராக வந்தார். பெயரைக் கேட்டதும் மகிழ்ந்த மலேசியத் தமிழர்கள், எப்படி ஒரு தமிழரைத் மலேசியத் தூதராக அனுப்ப இந்திய ஒன்றிய அரசு சம்மதித்தது என்று பார்த்தால், கடைசியில் குருமூர்த்தி ஓர் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் என்ற உண்மை தெரியவந்தது.

கோலாலம்பூர் தூதரக சேவை முடிந்தபின் அவர் இப்பொழுது, ஐநா மன்றத்தில் தமிழர்களைப் புறக்கணிக்கும் பாஜக-இந்துத்துவ அரசின் நிரந்தர பிரதிநிதியாக இருக்கிறார்.

தலைநகர், பிரிக்ஃபீல்ட்சில் நேதாஜி மையத்தில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும், மலேசியத் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் அந்நியப்பட்டதாகவே இருக்கும்.

புது டில்லியில் இருக்கும் ஒன்றிய அரசு, பொதுவாக தமிழர்களுக்கு எதிராகத்தான் இருக்கும். இத்தகையப் போக்கு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைவிட, கடந்த 8 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மிக மோசமாக இருக்கிறது.

8 கோடி தமிழர்களைக் கொண்ட தமிழ் நாட்டிற்கு உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை; கேபினட் அமைச்சராக ஒரேயொரு தமிழர்கூட இல்லாமல், கடந்த 8 ஆண்டுகளாக ஒன்றிய அமைச்சரவையை மோடி நடத்துகிறார்.

ஆனால், மில்லியன் கணக்கில் வாழும் தமிழர்களை மதிக்கும் வகையில் மலேசிய அரசு, ஒரு தமிழருக்கு கேபினட் தகுதியில் அமைச்சர் பதவி வழங்கி இருக்கிறது. உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்ந்தாலும் மலேசியாவில் மட்டுமே ஒரேயொரு தமிழர் முழு அமைச்சராக இருக்கிறார்.

அத்துடன் பாஜக ஆட்சி அமைந்ததும் தமிழ் நாட்டில் மாணவர்கள், தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள், மீனவர்கள், வர்த்தகர்கள், வேளாண் குடிமக்கள் என்றெல்லாம் அனைத்துத் தரப்பினருக்கும் இடையூறு செய்யும் பாஜக-ஆர்எஸ்எஸ் மோடி அரசு, புதுடில்லியில் அமைந்தது முதல், மலேசியாவிலும் ஆர்எஸ்எஸ் இயக்க நடவடிக்கை அதிகரித்துவிட்டது.

மலேசியத் தமிழ்ப்பள்ளி பாட நூலில் பெரியாரைப் பற்றியும் பெருஞ்சித்திர-னாரைப் பற்றியும் சிறிய அளவில், ஒவ்வொரு பக்கத்திற்கு மட்டும் ஓர் அறிமுகம் என்ற மட்டத்தில் இடம்பெற்றிருந்ததைக்கூட பொறுக்க முடியாத இங்குள்ள ஆர்எஸ்எஸ் காரர்கள், மலேசியக் கல்வித் துறையில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகளையும் தமிழ்ப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரையும் ‘கால்நக்கி’கள் என்றனர்.

இதையெல்லாம் மலேசியக் கல்வித் துறையும் மத்தியக் கூட்டரசும் எப்படி பொறுத்துகொண்டுள்ளன என்பது வியப்பாக இருக்கிறது.

தவிர, புது டில்லியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி வந்தபின், மலேசியாவில் திருவள்ளுவர், பாரதியார், கண்ணதாசனுக்கெல்லாம் ஆர்எஸ்எஸ் காரர்கள் விழா எடுக்கின்றனர். மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் இதுவரை காணாத முகமெல்லாம், கேளாத பெயெரெல்லாம் அடிபடுகின்றன. நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் கழுத்தில் ருத்திராக்க மாலையும் காவி ஆடையும் அணிந்த திருவள்ளுவர் படத்தை முகப்பில் அச்சிட்டு திருகுறள் விளக்கா நூல் என்ற பெயரில் பத்துமலை திருமுருகன் திருத்தலத்தில் இலவயமாக வழங்குகின்றனர்.

மலேசிய இந்தியத் தூதரகத்தில் பாதுகாவலர் மூலம் தமிழரை விரட்டி அடிப்பதையும் இந்த சம்பவங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. மலேசிய இந்தியத் தூதரகத்தின் இத்தகைய அடாவடித்தனத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படும் காலம் வராமலா போகும்?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles