
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூலை 30:
மலேசிய இந்து சங்கத்திற்கு கடந்த 2020, 2021-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டங்களில் டத்தோ மோகன் சண்முகம் என்னும் மோகன்சான் எப்படி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அதே முறைப்படி, அதே சட்டதிட்டத்தின்படி, அதுவும் அவரே வழிநடத்திய ஆண்டுக் கூட்டத்தில் புதிய தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது 100 விழுக்காடு சட்டப்பூர்வமானது; நியாயமானது; உண்மையானது என்பதால், மலேசிய இந்து சங்கத்தின் சட்டப்பூர்வமான தலைவர் தான்தான் என்று ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் மலேசிய இந்து சங்க உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், குறிப்பாக மலேசிய இந்து சமுதாயத்திற்குத் தெரிவித்துள்ளார்.
இந்து சங்க மத்தியப் பேரவையின் இணை உறுப்பினர்களான மாநிலத் தலைவர்களும் வாக்களித்துதான் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், கடந்த இரு ஆண்டுகளாக அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படாத மோகன் சன்முகம் மலேசிய இந்து சங்கத்திற்கு சட்டவிரோத தலைவராக செயல்பட்டிருக்கிறார். அதன்படி, கடந்த இரண்டு வருடங்களில் மோகன் சண்முகம் எடுத்த அனைத்து முடிவுகள், கையொப்பங்கள் மற்றும் பிற நிர்வாக விவகாரங்கள் அனைத்தும் இந்து சங்க சட்டதிட்டத்திற்கு முரணானவை; செல்லாதவை சட்டவிரோதமானவை என்று தங்க கணேசன் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இந்து சங்க சட்ட விதி 11, துணை விதி 11.1-இன்படி, இந்து சங்க மத்தியப் பேரவை என்பது இந்து சங்க உறுப்பினர்கள் வாக்களிக்கும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 27 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட அமைப்பாகும். இப்படி உருவாகும் மத்தியப் பேரவைக்குத்தான், சங்கத்தின் நிருவாக மேலாண்மை இருக்கிறது.
அதேவேளை, 2020 ஜூலை 20-இல் திருத்தப்பட்ட விதி, 11.1.4-இன் படி, இந்து சங்க மாநிலத் தலைவர்கள் மத்தியப் பேரவைக்குள் வாக்களிக்கும் இணை உறுப்பினர்கள் ஆவர். இந்த இணை உறுப்பினர்களுக்கு, சங்கத்தின் மத்தியப் பேரவையில் எந்த மேலாண்மையும் இல்லை.
மாநிலத் தலைவர்கள், இந்து சங்க நிர்வாகத்தின் கீழுள்ள ஏதேனும் துணைக் குழுக்களில் வாக்களிக்கும் உரிமையுடன் செயல்படும் தகுதி பெற்றவர்களேத் தவிர, இணை உறுப்பினர்களான இவர்கள், சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியப் பேரவை உறுப்பினர்களுக்கு இணையாக கருதப்பட மாட்டார்கள்.
காரணம், இந்த இணை உறுப்பினர்கள் இந்து சங்க சட்டவிதி 11, துணைவிதி 11.1-இன்படி ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கபடுவதில்லை. எனவே, மத்திய பேரவை உறுப்பினர்கள் என்போர், ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்தியேழு (27) உறுப்பினர்களை மட்டுமே குறிப்பிடுகின்றது.
இதன் அடிப்படையில், இணை உறுப்பினர்களான இவர்கள், சங்கத்தின் உயர்நிலை பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற கருத்து முற்றிலும் அடிப்படையற்றது; நியாயமற்றது; நிறுவன சட்டம் 2016-இன் நோக்கத்திற்கும் எதிரானது.
இந்து சங்க சட்டம், துணைவிதி 11.2-இன்படி, ஆண்டு பொதுக் கூட்டம் முடிந்தவுடன் உடனடியாக கூட்டப்படும் மத்திய பேரவை கூட்டத்தில் மத்திய பேரவை உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், இரண்டு உதவித் தலைவர்கள், ஒரு கௌரவ பொதுச் செயலாளர், ஒரு கௌரவ உதவிச் செயலாளர், ஒரு கௌரவ பொருளாளர் மற்றும் ஒரு கௌரவ உதவிப் பொருளாலர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்தியப் பேரவை என்பது, சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ‘27 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும்; இதில், இணை உறுப்பினர்கள் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை என்பதை மேற்குறிப்பிட்ட துணைவிதி தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற 45-ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில், மத்தியப் பேரவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்ற பின், 2022-2023ஆம் ஆண்டிற்கான முதல் மத்திய பேரவைக் கூட்டம், இந்து சங்க சட்டம் துணைவிதி 11.2-இன்படி, அப்போதைய கௌரவச் செயலாளர் கௌரி தங்கையாவால் கூட்டப்பட்டது. அதில், தலைவர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு 16-11 என்ற வாக்குகளின் அடிப்படையில் கணேசன் தங்கவேலு என்னும் நான் தலைவராக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டேன்.
ஆண்டுக் கூட்டத்தை யொட்டி நடைபெறும் முதல் மத்திய பேரவை கூட்டம் தொடர்பில், எழுத்துப்பூர்வ அறிவிப்பு 21 நாட்களுக்கு முன் அனுப்பப்பட வேண்டும் என்ற விதிமுறையை பூர்த்தி செய்யமுடியாது; ஏனெனில் முதல் மத்திய பேரவைக் கூட்டத்தை ஆண்டு பொதுக் கூட்டம் முடிந்த உடனேயே நடத்த வேண்டும், 21 நாட்களுக்குப் பிறகு அல்ல; மேலும், நடப்பில் உள்ள மத்திய பேரவை உறுப்பினர்களில் 9 பேர் ஓய்வு பெறுவதால், ஆண்டு பொதுக் கூட்டத்தின்போது புதிய 9 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால், இந்த அறிவிப்பை முன்கூட்டியே வழங்க முடியாது. எனவே, ‘ராஜ் & சாச்’ என்ற சட்ட நிறுவன வழக்கறிஞர் எழுப்பிய கருத்து நியாயமற்றது; ஆதாரமற்றது.
24.07.2022-இல் ஆண்டு பொதுக் கூட்டம் முடிந்த உடன், அன்று மாலையே நடைபெற்ற 27 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய பேரவை, தன் கடமையை இந்து சங்க சட்ட முறைப்படி முழுமையாக நிறைவேற்றியுள்ளது. அந்தக் கூட்டத்தில், தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் பதவி விலகிய மோகன் சண்முகம், மத்திய பேரவையில் இருந்தும் விலகினார். அவரைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களும் மத்தியப் பேரவையில் இருந்து விலகுவதாக மேடையிலேயே அறிவித்தனர்.
இவ்வளவும் இந்து சங்க உறுப்பினர்களின் கண்ணெதிரே நடைபெற்று முடிந்தன. இப்பொழுது, இந்து சங்கத்தில் நடைபெற்ற புதிய தலைவர் தேர்தல், இந்து சங்க சட்டத்திற்கு புறம்பானது; செல்லாதது, சட்டவிரோதமானது என்று மோகன் சண்முகம் கூறுவாரேயானால், கடந்த 43 மற்றும் 44-ஆம் ஆண்டுப் கூட்டங்கள் முடிந்தபின் நடைபெற்ற முதல் மத்திய பேரவைக் கூட்டங்களும் செல்லாவை; அதன்படி, 2020, 2021 ஆம் ஆண்டுகளில் மோகன் சண்முகம் மலேசிய இந்து சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாதது; சட்டவிரோதமானது. அப்படியானால், கடந்த ஈராண்டுகளாக, மலேசிய இந்துப் பெருமக்களின் பாரம்பரிய சமய அமைப்பான இந்து சங்கத்தை முன்னாள் தலைவர் மோகன் சண்முகம் சட்டவிரோதமாக வழிநடத்தி இருக்கிறார் என்றாகும்.
இப்படிப்பட்ட மோகன் சண்முகம், மீண்டும் தலைவர் பதவிக்கு குறிவைத்து செயல்படுவது இரட்டை சட்டவிரோதம். இந்து சங்க சட்டத்திற்கு முரணான இந்த முயற்சி, சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
இருந்தபோதும், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் என்றெண்ணி, இந்து சங்கத்தையும் மலேசிய இந்து சமுதாயத்தையும் முற்போக்காகவும் விவேகமான முறையிலும் வழிநடத்த தீர்மானித்துள்ள புதிய தலைமைக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அதற்கு இசைவாகத்தான் இந்து சங்க உறுப்பினர்களும் மாற்றத்தை விரும்பிய அணிக்கு தெளிவான ஆதரவை வழங்கி உறுதியான வெற்றியை அளித்துள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, சமயம் தழைக்கவும் சமுதாயம் செழிக்கவும் நாம் ஆற்ற வேண்டிய கடமையும் திட்டங்களும் வரிசையாக காத்திருக்கும் நிலையில், பதவி மோகம் கொண்டவர்களின் சுயநல எண்ணத்திற்கு ஆட்பட்டு, இந்து சங்கத்தை நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறவைக்க விரும்பவில்லை என்பதை மலேசியாவில் வாழ்கின்ற இந்துப் பெருமக்களுக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் நிறைவாக, இந்து சங்க உறுப்பினர்களும் மலேசிய இந்து சமுதாயமும் தன்னுடைய தலைமையிலான புதிய வெற்றி அணிக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும்படிகேட்டுக் கொள்வதாகவும் தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
