
தமக்கு நெருக்கமான Athes (அத்தேஸ்) நிறுவனம், Beta Tegap (பெத்தா தெகாப்) ஆகிய நிறுவனங்கள் திவாலாகாமல் இருக்க பல கோடி ரிங்கிட் பெறுமான அரசின் குத்தகையை நஜிப் ரசாக் அளித்தார் என்று ஜசெக வின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார். அந்த இரு நிறுவனங்களுக்கும் இஎஸ் எனும் சமிஞ்சை விளக்கு ஒளிப்படக் கருவி திட்டக் குத்தகையை அளித்ததோடு, அத்திடத்தைத் தொடங்க எல்டிஏடி எனும் ராணுவ நிதியத்திலிருந்து 55.5 கோடி ரிங்கிட்டை நஜிப் வாறி வழங்கியதாக அந்தோணி லோக் மக்களவையில் தெரிவித்தார். தாம் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, இதனைக் கண்டுபிடித்து அந்த 55.5 கோடி ரிங்கிட்டை ராணுவ நிதியத்துக்குத் திருப்பித் தந்ததாக அந்தோணி லோக் தெரிவித்தார். இந்த விவரத்தை பொதுமக்கள் பொது கணக்குக் குழுவின் அறிக்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



