29 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

சீ ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயம் புத்தெழுச்சி:
இந்து சங்கத் தலைவர் தங்க. கணேசன் வாழ்த்து

🔥 Views : 8
👁 Reading Now : 70

மலாயா தோட்டப் பாட்டாளிகளின் ஆன்மிகப் பயணத்தின் அடையாள-மாகவும் பாரம்பரிய வழிபாட்டு தளமாகவும் விளங்குகின்ற சீ ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலயம் புத்தெழுச்சியுடன் புதிய பயணத்தை மேற்கொண்டிருப்பதற்கு மலேசிய இந்து சங்கத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் மையப் பகுதியான கிள்ளான் பள்ளத்தாக்கில் 1860-ஆம் ஆண்டு முதல் சுற்றுவட்டார தோட்ட மக்களுக்கு காவல் அன்னையாகவும் சக்தி வடிவமாகவும் விளங்குகிறது அன்னை உமையவள் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயம்.

அண்மைய சில ஆண்டுகளாக பல வகையான குழப்பங்கள் இந்த ஆலயத்தைச் சூழ்ந்திருந்தது உண்மைதான்; அதனால் ஆன்மிகத்தில் ஆழ்ந்த பற்றுகொண்ட மெய்யன்பர்களுக்கு ஏற்பட்டிருந்த வருத்தம் யாவும் இப்பொழுது ஒருசேர தீரும்வகையில் இரண்டு பிரிவாகப் பிரிந்து செயல்பட்ட அதன் பொறுப்பாளர்கள் இன்று ஒன்றிணைந்து ஒருமுகமாக செயல்பட முன்வந்திருப்பதற்கு மலேசிய இந்து சங்க தேசியப் பேரவையின் சார்பில் முதற்கண் வாழ்த்து தெரிவிக்கிறேன்.

குறிப்பாக, இந்த பாரம்பரிய வழிபாட்டு தலத்தை வேற்று இடத்திற்கு மாற்றிச் செல்ல மேற்கொண்ட முயற்சியும் முனைப்பும் அன்னை பராசக்தியின் அருளாலும் எல்லாம் வல்ல பரம்பொருளின் துணையாலும் தடைபட்டு இதே இடத்தில் தொடந்து நிலைபெறும் நல்வாய்ப்பு கிட்டியுள்ளது.

இந்த ஆலயத்தின் வளர்ச்சியிலும் சுற்று வட்டார இந்து மக்களுக்கு ஆன்மிக சேவை ஆற்றுவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட கே.கே.செல்லப்பா, எம்.நாகராஜு ஆகிய இருவரும் தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைந்து கரம் கோத்திருப்பது, காலத்தால் நிகழ்ந்த சக்தியின் திருவிளையாடல் என்பது புலப்படுகிறது.

இந்த ஆலயம் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட பொழுது, முறையான ஆகம விதிகளை பின்பற்றி யந்திரம்-மந்திரம்-தந்திரம் அடிப்படையில் விக்ரகம் நிறுவப்பட்டு, அதன் பின்னரே கோபுரமும் எழுப்பப்பட்டது. இவ்வாறு ஆகம முறைப்படி நிறுவப்பட்ட ஆலயத்தை அவ்வளவு எளிதில் அகற்றவோ மாற்றவோ முடியாதவாறு சக்தி துணை நிற்கும் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

திருப்பணி ஆற்றுவதில் சளைக்காத செல்லப்பா, நாகராஜு இருவரையும் ஒன்றிணைக்க நற்பாடாற்றிய டத்தோ அ.சந்திரகுமணன், முரளி ஆகிய இருவருக்கும் மலேசிய இந்து சங்க புதிய நிருவாகக் குழுவின் சார்பிலும் மலேசிய இந்துப் பெருமக்களின் சார்பிலும் நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

சீ ஃபீல்ட் அருள்மிகு மாரியம்மன் ஆலய நிருவாக மட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால், இனி ஆலயம் புத்தெழுச்சி பெறும்; ஆலயம் என்பது சுற்று வட்டார மக்களின் சமூக மையமாகத் திகழவேண்டும் என்னும் சிந்தனைக்கு ஏற்ப, இந்த பாரம்பரிய வழிபாட்டுத் தலம், சுற்று வட்டார மக்களுக்கான கல்வி-ஆன்மிக-சமூக நல மையமாகத் திகழும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

மலேசிய இந்து சங்க தேசியப் பேரவையும் இந்த ஆலயத்திற்கு எல்லா வகையிலும் துணை நிற்கும்.

அனைத்திற்கும் மேலாக, இந்த ஆலய சுற்று வட்டார பக்த பெருமக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் வழக்கம்போல தொடரவேண்டும் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்க கணேசன் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles