28.8 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

அடுத்த பிறந்த நாளின்போது பிரதமராக இருப்பார்!
டத்தோஸ்ரீ அன்வாருக்கு டாக்டர் குணராஜ் வாழ்த்து!

கோலாலம்பூர், ஆக. 10:
பாஸ் கட்சியில் அரசியல் புடம் பெற்றிருந்தாலும் ஜனநாயகப் பண்பும் பன்முக அரசியல் கூறுகளும் நிறைந்திருந்ததால், அந்தக் கட்சியில் இருந்து விலகி அமானா என்னும் தனிக் கட்சியை உருவாக்கியவரும் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சருமான முகமட் சாபு இரு நாட்களுக்கு முன் வெளிப்படுத்திய நம்பிக்கையின்படி, வரும் 15-ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி 122 இடங்களைக் கைப்பற்றினால் அடுத்த பிறந்த நாளைக் கொண்டாடும்போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமராக இருப்பார் என்று இந்த பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் பிரிட்டிஷ் மலாயாவில் பிறந்த அன்வார், இன்று ஆகஸ்ட் 10-ஆம் நாளில் 76-ஆவது வயதை எட்டுகிறார். அவருக்கு, ஏஎஸ்டி செய்தித் தளம் 75-ஆவது பிறந்த நாள் வாழ்த்தைப் பதிவு செய்கிறது.

பிரதமர் வேட்பாளராக கால் நூற்றாண்டாக மலேசிய அரசியலில் பவனி வரும் அன்வார் இப்ராகிமின் அரசியல் பயணம், கரடுமுரடானது; அந்த அளவுக்கு மலையைக் கடக்க வேண்டி இருந்தது; மடுவையும் தாண்ட வேண்டிய சூழலை அவரின் அரசியல் எதிரிகள் உருவாக்கினர். மலேசியாவில் வேறு எந்த அரசியல் தலைவரும் எதிர்கொள்ளாத வகையில் கொடிய வஞ்சகத்தையும் உடனிருந்து இழைத்த துரோகத்தையும் எதிர்கொண்டவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

பின்னடைவோ முன்னடைவோ எதுவாயிலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்; அரசியலில் இதுதான் அடிப்படை என்பது உண்மைதான்; அமெரிக்காவின் இன்றைய அதிபர் ஜோ பைடனும் ஏறக்குறைய கால் நூற்றாண்டு போராட்டத்திற்குப் பின்னர்தான் இந்த நிலையை எட்டி இருக்கிறார். இவரைப் போல, அமெரிக்காவின் 16-ஆவது குடியரசுத் தலைவராக இருந்த ஆப்ரகாம் லிங்கனும் ஏறக் குறைய கால் நூற்றாண்டு போராட்டத்தைக் கடந்தபின்னர்தான் அந்த உயர்ந்த நிலையை எட்டினார்.

ஜோ பைடன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்; லிங்கனோ குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். லிங்கன் காலத்து குடியரசுக் கட்சி இன்றில்லை; இன்றைய குடியரசுக் கட்சி டோனால்ட் டிரம்ப் போன்ற வலச்சாரி கொள்கையாளர்களின் கூடாரமாகிவிட்டது.

லிங்கனைப் போல அன்வாரும் பொருளாதாரத்தில் தாராளமயத்தை விரும்பாதவர். கட்டுசிட்டாக இருந்து தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறியாக கொண்ட அன்வாரின் கொள்கை, இன்றைய சூழலுக்கு ஒத்துவராது என்பதை அரைமனதுடன்தான் இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

கரைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரரான அன்வாரை, அம்னோ தலைவர்களும் பாஸ் தலைவர்களும் வெறுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்; அரசியலில் வெற்றுத் தூய்மை பற்றி பேசும் டாக்டர் மகாதீர் பெர்வாஜா நிறுவனத்தைப் பற்றி மட்டும் வாயேத் திறக்க மாட்டார். காரணம், அது அவரின் குடும்பம் சம்பந்தப்பட்டது.

டத்தோஸ்ரீ அன்வாரின் இறுக்கமான பொருளாதார கொள்கையைத் தவிர, பல இன அரசியல், மொழி-பண்பாடு குறித்த பரந்த நோக்கம் யாவும் எல்லா இன மக்களுக்கும் ஏற்புடையவை; குறிப்பாக இந்தியர்களுக்கு; இதனால்தான் அன்வார் தலைமை வகிக்கும் மக்கள் நீதிக் கட்சியில் அதிகமான இந்தியர்கள் உறுப்பியம் பெற்றுள்ளனர்.

அன்வாருக்கு எப்போதெல்லாம் பிரதமர் வாய்ப்பு வருகிறதோ அப்பொழுதெல்லாம் குறுக்கே வந்து சதி செய்பவர் துன் மகாதீர். இதை வாழ்நாள் இலட்சியமாகவேக் கொண்டுள்ள மகாதீரின் சூழ்ட்சியை வரும் 15-ஆவது பொதுத் தேர்தலில் அன்வார் முறியடித்தால், அவர் பிரதமர் ஆவது உறுதி.

டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மூலம் கொல்லைப்புற ஆட்சி என்னும் புதிய கறுப்பு அத்தியாயத்தை உருவாக்கிய மகாதீர், முகைதீன் பிரதமராக இருந்தபோது இரு தடவை அன்வாருக்கான வாய்ப்பு உருவான நேரத்தில் ஷாஃபி அப்டால், துங்கு ரசாலி போன்றவர்களை ஏவிவிட்டு சதி செய்தார். இப்பொழுது வலதுசாரி புத்தியுடன் ‘Gerekan Tanah Air’ என்ற பெயரில் மலாய் முஸ்லிம் இயக்கங்களை அணிதிரட்டப் பார்க்கிறார் மகாதீர்.

மகாதீரின் முயற்சி பகல் கனவாக முடியும் வகையில், இன்றைய அரசியல் சதுரங்கத்தில் அன்வார் அடித்து ஆடினால், வரும் தேர்தலில் பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஆனால், வரும் பொதுத் தேர்தல் எப்பொழுது என்பது நாடாளுமன்றம் களைக்கப்பட்டால்தான் உறுதியாகும்.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைப் பொறுத்தவரை, பலித்தவரை லாபம் என்ற மனப்போக்கில் இருப்பதால், இந்த 14-ஆவது நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முழுவதும் பிரதமராக நீடிப்பதையே விரும்புவார்.

பிரதமர் வேட்பாளர் இஸ்மாயில் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சொல்வதை யெல்லாம் இஸ்மாயில் நம்பத் தயாராக இல்லை. அண்மைய ஜோகூர் மாநிலத் தேர்தலின்போது, மக்களிடம் வாக்கு கேட்பதற்காக காட்டிய முகம் வேறு; வென்றபின் மந்திரி பெசாராக ஆக்கியது வேறு முகம்.

அதனால், ஜாஹிட் ஹமிடியை நம்பி நாடாளுமன்றத்தை இஸ்மாயில் களைப்பார் என்று கருதுவதற்கு இடமில்லை என்பதால், அடுத்த ஆண்டில்தான் அடுத்தப் பொதுத் தேர்தல் நடைபெறும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் பொதுவான அவதானமாக இருக்கிறது.

இடைப்பட்ட காலத்தில், நம்பிக்கைக் கூட்டணியை இன்னும் வலுப்படுத்தும் அதேவேளை, ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால், சாத்தியமான பிற கட்சிகளையும் இணைத்துக் கொண்டு 15-ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொண்டால் அன்வார் அடுத்தபிரதமர் ஆவது உறுதி என்று பிகேஆர் கோத்தா ராஜா தொகுதி பொறுப்பாளரும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியுமான டாக்டர் குணராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles