
தமது தலைமையிலான அமைச்சரவையில் இருந்துவரும் நான்கு முதன்மை அமைச்சர்களும் துணைப்பிரதமர் பதவிக்கு இணையானவர்கள்தான் என்பதால் துணைப்பிரதமராக ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லையென பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். பெர்சத்துவைச் சேர்ந்த ஒருவரை துணைப்பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நெருக்குதல் அளிப்பதற்கு தம்மை சந்திப்பதற்கு பெரிக்காத்தான் நேசனல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் இவ்வேளையில் இஸ்மாயில் சப்ரி இதனை தெரிவித்தார். எனக்கு உதவக்கூடிய நான்கு முதன்மை அமைச்சர்களை நான் கொண்டுள்ளேன். துணைப்பிரதமருக்கு சமமாக அவர்களது நியமனம் இருக்கிறது. துணைப்பிரதமர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படாவிட்டாலும் ஒரு துணைப்பிரதமருக்கான அனைத்து வசதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. . அந்த நான்கு முதன்மை அமைச்சர்களும் தற்போது இருந்துவரும் அரசியல் கட்சியை பிரதிநிதிக்கின்றனர் என்றும் இஸ்மாயில் சப்ரி சுட்டிக்காட்டினார்.



