
நாட்டில் நிலவும் ஊழலுக்கு காரணமே மலாய்க்காரர் அல்லாதவர்கள்தான் காரணம் என்றும் அவர்களே அதிகமாக ஊழலில் திளைத்திருப்பதாகவும் பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் திருவாய் மொழிந்துள்ளார்.
முகநூலில் பதிவிட்டிருக்கும் அவர், ஊழல் என்பது குட்டையில் இருக்கும் நீரில் கொசுக்கள் வாழ்வது போன்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் மூல காரணத்தைக் கண்டறிந்து நீக்கா விட்டால், அது தொற்றுநோய் போல பரவும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மலாய்க்காரர் அல்லாதோரும் பூமிபுத்ரா அல்லாதோரும் நாட்டின் பொருளாதாரத்தை வளைத்துப் போடவும் அரசியலை ஆக்கிரமிக்கவும் ஊழலில் ஈடுபடுவதாக ஹாடி அவாங் குற்றம் சாட்டினார்.
2016இல் ஹாடி அவாங் நஜிப்பிடமிருந்து 90 மில்லியன் ரிங்கிட்டை கையூட்டாகப் பெற்றதாக சரவாக் ரிப்போர்ட் செய்தி வெளியிட்ட பின்னர், ஹாடி அவாங் அந்தப் பத்திரிகை மீது இழப்பீடு வழக்கைத் தாக்கல் செய்து, பின்னர் அதனை மீட்டுக் கொண்டார்.
அந்த வழக்கை மீட்டுக் கொள்ள நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் காணப்பட்டதாகவும், அதற்குக் கணிசமான தொகை செலுத்தப் பட்டதாகவும் சொல்லப்பட்டது.



