
நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் தடுப்புக் காவல் மரண சம்பவங்களை தடுப்பதற்கு கைது செய்யப்படும் சந்தேக நக்பார்கள் மீது உடனடி மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென போலீசார் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.விசாரணை அதிகாரிகள் மற்றும் போலீசார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்து கொண்டு வரும் போது,அவரின் சுகாதார நிலை குறித்து குடும்பத்தாரிடம் விசாரித்துக் கொள்ள வேண்டுமென தேசியக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார்.
தடுப்புக் காவலில் நிகழும் மரணச் சம்பவங்களை கடுமையாக கருத வேண்டும் என கூறிய அவர்,இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதையும் விரும்பவில்லை என்றார்.
மேலும் தடுப்புக் காவலில் சந்தேக நபர்களின் கண்காணிப்பு முறைகளும் அவ்வப்போது மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
அண்மையில் தடுப்புக்காவலில் சிலர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் புலன் விசாரணை நடத்தும்படி மலேசிய போலீஸ் படைக்கு உள்துறை அமைச்சு உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.



