
15ஆவது பொதுத்தேர்தல் பரப்புரைகள் தொடங்கப்பட்டதிலிருந்து, முதன்முறையாக நேற்று முன் தினம் கோலாலம்பூர் டானாவ் கோத்தாவில் நடைபெற்ற மெகா தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமும் அதன் துணைத் தலைவர் ரபிஸி ரம்லியும் ஒரே மேடையில் தோன்றி மற்ற கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
5,000க்கும் அதிகமானோர் கூடியிருந்த கூட்டத்தில் அவ்விரு தலைவர்களும் வரும்போது, கூட்டத்தினர் ‘ரிபோர்மாஸி’ என்றும் ‘அன்வாரே 10ஆவது பிரதமர்’ என்றும் முழக்கமிட்டனர்.
அன்வார் தமதுரையில், அரசின் ஊதாரித் தனத்தையும் மெத்தனப் போக்கையும் பொருளாதாரத்தை உயர்ந்த முடியாமல் தத்தளிப்பதையும் குற்றம் சாட்டி, நாட்டை வழிநடத்த வாய்ப்பு வழங்கப்பட்டால், நாட்டை மேம்படுத்த சிறப்பான திட்டங்களை வகுக்கப் போவதாகச் சூளுரைத்தார்.
ரபிஸி பேசும்போது, இன்று வந்திருக்கும் கூட்டமானது, 15ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் வெற்றியை ஈட்டித் தருவதையும் நாட்டில் மாற்றம் நிகழ்ந்தே ஆக வேண்டுமென்பதை வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
பக்காத்தானைப் போலல்லாமல், தேசிய முன்னணி, பெரிக்காத்தான் தலைவர்கள் உட்கட்சி மோதலில் ஈடுபட்டு மக்களைக் குழப்பி வருவதாகக் குற்றம் சாட்டினார்.



