
🔊To listen to this news in Tamil, Please select the text.
இதுவரை ஆங்கிலத்தில் உள்ள அரசமைப்பு விதியே நாட்டில் அதிகாரத்துவமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில், அதற்குப் பதிலாக மலாய் மொழி பெயர்ப்பில் உள்ள மற்றொரு சாசனத்தைப் பயன்படுத்த சட்டத்துறை அலுவலகம் முனைந்து வருகிறது.
அது சம்பந்தமாகக் கவலை தெரிவித்திருக்கும் The Global Human Rights Federation (GHRF) உலகளாவிய மனித உரிமை கூட்டமைப்பின் தலைவர் எஸ். சசிகுமாரும் மலேசிய சர்வ சமய ஆலோசனை மன்றமும் மலாய் மொழியில் உள்ள அரசமைப்பு மொழி பெயர்ப்பில் உள்ள பிழைகளை முதலில் திருத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
ஆங்கில மொழியில் உள்ள அரசமைப்பு விதியில், Parent (பெற்றோர்) எனும் வார்த்தை கணவன், மனைவி இருவரையும் குறிப்பிடும்போது, மலாய் மொழியில் உள்ள மொழிப் பெயர்ப்பில், கணவன், மனைவி இருவரில் ஒருவரை மட்டுமே குறிக்கும் என பொருள் படுவதோடு இஸ்லாத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் அதனையே வலியுறுத்துகின்றன.
இந்தத் தவறான மொழி பெயர்ப்பால் இந்திரா காந்தி மற்றும் லோ சியூ ஹோங் ஆகியோரின் பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றிய பிரச்சினையில் பெரும் சிக்கல் எழுந்துள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.
எனவே, இந்தச் சிக்கலை முதலில் சரி செய்த பின்னர், மலாய் மொழியிலான அரசமைப்பு விதியை அதிகாரப்பூர்வமானதாக அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.



