
🔊To listen to this news in Tamil, Please select the text.
பீசிக்கு அருகே உள்ள கம்போங் உடாராவில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உடைக்கப்படுவதிலிருந்து தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி. குணராஜ் தெரிவித்தார்.
பல ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தை மேம்பாட்டுப் பணிகளுக்காக அகற்றுவதற்கு மேம்பாட்டாளர்கள் நோட்டிஸ் வழங்கியிருந்த நிலையில் நேற்று அவ்வாலயத்தை உடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
இத்தகவலை அறிந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், இந்து சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளோடு தாமும் அங்கு விரைந்ததாக இந்திய சமூகத்திற்கான மந்திரி பெசாரின் சிறப்பு பிரதிநிதியுமான அவர் தெரிவித்தார்.
மாவட்ட போலீஸ் தலைவர் மற்றும் மேம்பாட்டாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் பலனாக இந்த ஆலயத்தை அகற்றும் பணியை ஒரு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க சம்பந்தப்பட்டத் தரப்பினர் ஒப்புக் கொண்டனர் என்றார் அவர்.
இந்த ஆலயம் பழைய கிள்ளான் சாலையில் கிராமப் பகுதியில் வசித்தவர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கிய இந்த ஆலயம் அங்கு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்ட போது கம்போங் உடாராவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டது.
இங்கு பண்டார் மலேசியா திட்டம் அமல்படுத்தப்படும் காரணத்தால் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தோடு சிவன் ஆலயம் ஒன்றும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அந்த ஆலயம் பற்றியும் சம்பந்தப்பட்டத் தரப்பினருடன் பேசினோம் என்று அவர் சொன்னார்.
இந்த ஆலயம் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. மாறாக இந்து சங்கத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது சற்று சிக்கலாகத்தான் இருக்கும். இருந்த போதிலும் ஆலயத்தை காப்பற்றுவது நமது கடமையாகும். இதற்காக சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.



