
🔊To listen to this news in Tamil, Please select the text.
அரசு சார்பு நிறுவனங்களில் அரசியல் தலைவர்களை வாரியத் தலைவர்களாக நியமிப்பதை பக்காத்தான் ஹராப்பான் கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், அதே செயலை அக்கூட்டணி தற்போது பின்பற்றுவது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
அம்னோ மகளிர் தலைவியும் பாரிட் சூலோங் எம்பியுமான Noraini Ahmad (நோரைனி அமாட்) ரப்பர் சிறு தோட்டக்காரர்களின் அமைப்பான ரிஸ்டாவின் தலைவராக நியமிக்கப்பட உள்ளதை நம்பத் தகுந்த வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. இந்தச் செய்தியானது பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது.
இரு வாரங்களுக்கு முன்னர் அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் Asyraf Wajdi Dusuki (அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி) மாராவின் தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற அவர், தலைவர் ஸாஹிட் ஹமிடியின் அணுக்க ஆதரவாளர் என்பதால் அவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, காப்பார் எம்பி Abdullah Sani Abdul sani (அப்துல்லா சானி அப்துல் ஹமிட்) தெக்குன் நேஷனலின் தலைவராகவும் உலு லங்காட் எம்பி Sani Hamzan (சானி ஹம்ஸான்) அதே நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், சபாவின் முன்னாள் முதலமைச்சராகவும் மத்திய அரசில் பல காலம் அமைச்சராகவும் இருந்த Bernard Dompok (பெர்னார்ட் டோம்போக்) SME (எஸ்எம்இ கார்ப்பரேஷன்) தலைவராகவும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனங்களை அடுத்து இன்னும் பல அரசியல்வாதிகள் ஜிஎல்சி தலைவர்களாக நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிகிறது. இவையெல்லாம் பாக்காத்தான் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்படுகிறது.



