
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டின் மகிழ்ச்சிகரமான பத்து நகரங்களில் ஒன்றாக அரச நகரான கிள்ளான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 20ஆம் தேதி நடத்தப்பட்ட ஊராட்சி மன்ற நிலையிலான மகிழ்ச்சிகர தின நிகழ்வில் கிள்ளான் நகருக்கு இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.
கிள்ளான் தவிர்த்து, பெட்டாலிங் ஜெயா, மஞ்சோங், குளுவாங், குவா மூசாங், கோல கிராய், கோல பிலா, குவாந்தான், ரொம்பின், அலோர் காஜா ஆகிய ஊராட்சி மன்றங்களும் மகிழ்ச்சிகரமான நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன
மகிழ்ச்சிக்கான குறியீட்டை அளவிடுவதில் ஊராட்சி மன்றங்களின் அடைவு நிலையை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சிகரமான நகருக்கான விருதளிப்பில் கிள்ளான் அங்கீகரிக்கப்பட்டதாக கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.
இந்நோக்கத்திற்காக நாடு முழுவதும் உள்ள 117 ஊராட்சி மன்றங்களில் உள்ள 42,000 பேரிடம் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக நகராண்மைக் கழகத்தின் மாதாந்திரக் கூட்டத்தையொட்டி வழங்கிய செய்தியில் அவர் குறிப்பிட்டார்.
இந்த கருத்துக் கணிப்பில் வாழ்க்கை, சுகாதாரம், குடும்ப உறவு, அண்டை அயலார், நிதி மேலாண்மை, சமூக நடவடிக்கைகள், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன என்றார் அவர்.
இது தவிர மக்களுக்கான வசதிகள், ஊராட்சி மன்றங்களின் சேவை, மக்கள் பிரதிநிதிகளின் சேவை மற்றும் சுற்றுச்சூழலின் தரம் ஆகியவற்றையும் அந்த கருத்துக் கணிப்பு உள்ளடக்கியிருந்தது என அவர் தெரிவித்தார்.



