
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் கடந்த வாரம் மேற்கொண்ட தெரு நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக முதியவர் ஒருவர் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை பெட்ரிக் கூ கியான் வூய் (வயது 69) என்ற முதியவர் மறுத்து விசாரணை கோரினார்.
மார்ச் 22ஆம் தேதி இரவு 9.00 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, தாமான் கனகபுரத்தில் உள்ள வீடொன்றில் மாநகர் மன்ற ஊழியரான அஜிசுல் அஸிம் நோரேஹான் என்பவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பெட்ரிக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 186வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை 5,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஃபர்ஹானா புவாட் பரிந்துரைத்தார். எனினும், தனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் அருகில் அதாவது நான்கு கிலோ மீட்டர் தொலைவில் வசிப்பதோடு விசாரணையின் போது காவல் நிலையத்திற்கு தாமே சுயமாக வந்து ஒத்துழைப்பு நல்கியதால் அவரை குறைவான ஜாமீன் தொகையில் விடுவிக்குமாறு பெட்ரிக்கின் வழக்கறிஞர் ராஜ்சூரியன் பிள்ளை நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
பெட்ரிக்கை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 2,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி மாஜிஸ்திரேட் ஷாரில் அனுவார் அகமது முஸ்தாபா, இந்த வழக்கின் மறு விசாரணையை ஜூன் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.



