
🔊To listen to this news in Tamil, Please select the text.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் தாம் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்திற்கு அரசாங்கப் பணம் பயன்படுத்தப்படவில்லை என்று மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் கூறியுள்ளார்.
மாறாக அந்த பயணத்திற்கு உண்டான அனைத்து செலவுகளையும் தாமே ஏற்றுக் கொண்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.
பிரதமரின் பெய்ஜிங்கிற்கான அதிகாரப்பூர்வ பயணத்தில் பங்கேற்குமாறு நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். அந்த பயணத்திற்கான செலவுகள் அனைத்தையும் நானே ஏற்றுக் கொண்டேன். ஒரு காசுகூட மக்களின் பணம் பயன்படுத்தப்படவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.
பிரதமரின் அதிகாரபூர்வ பயணத்தில் வீ கா சியோங் பங்கேற்றது குறித்து சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ தெங் சாம் கிம் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
பிரதமரின் அதிகாரப்பூர் பயணத்தில் பங்கேற்றதன் மூலம் வீ அரசாங்கப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று தெங் தனது பேஸ்புக் பதிவில் குற்றஞ்சாட்டியிருந்தார்.



