
🔊To listen to this news in Tamil, Please select the text.
அடுத்து உருவாக இருக்கின்ற பினாங்கு சட்டமன்றத்தில் மஇகா இடம்பெறுவது ஏறக்குறைய உறுதியெனத் தெரிகிறது. பினாங்கு சட்டமன்றத்திற்கு விரைவில் நடைபெற இருக்கின்ற தேர்தலில் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான மஇகா, 1970ஆம் ஆண்டுகளில் இருந்து தன்வசம் வைத்திருந்து, பின் 2008-யிலிருந்து நம்பிக்கைக் கூட்டணியிடம் இழந்துள்ள பாகான் டாலம், பிறை சட்டமன்றத் தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட நம்பிக்கைக் கூட்டணியுடன் பேச்சு நடத்துகிறது. மஇகா பினாங்கு மாநிலத் தலைவர் ஜே. தினகரன் குழுவினர் ஜசெக தலைவர் லிம் குன் எங்கை நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர். இது தொகுதி குறித்த பேச்சல்ல; கட்சித் தலைமைதான் இதை முடிவு செய்யும் என்று தினகரனும் தொகுதி குறித்த பேச்சு கட்சிகளுக்கு இடையே நடைபெறாது; மாறாக கூட்டணித் தலைமை மட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்று ஜசெக பினாங்கு தலைவரும் முதல்வருமான சௌ கான் இயூ-வும் மறுத்தாலும் இது தொகுதி குறித்த தொடக்கப் பேச்சாகத்தான் பார்க்கப்படுகிறது.



