
2025ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதார மதிப்பு 460.1 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்து, 28 பில்லியன் ரிங்கிட் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மலேசிய புள்ளியியல் துறை (DOSM) வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி, சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்த வளர்ச்சி, மலேசியா புத்ரா பல்கலைக்கழகம் (UPM) மற்றும் சிலாங்கூர் ஆராய்ச்சி நிறுவனம் (Selangor Research Institute) இணைந்து கணித்திருந்த RM455.3 பில்லியன் என்ற மதிப்பீட்டையும் தாண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன் மூலம், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சிலாங்கூரின் பங்களிப்பு 26.2 சதவீதத்திலிருந்து 26.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் பொருளாதார அளவு கோலாலம்பூரை விட 1.7 மடங்கும், ஜொகூரை விட 2.7 மடங்கும் அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் சிலாங்கூர் 6.3 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளர்ச்சி விகிதமான 5.2 சதவீதத்தை விட குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்ததாகும்.
சேவைத் துறை RM15.9 பில்லியன், உற்பத்தித் துறை RM5.3 பில்லியன், கட்டுமானத் துறை RM3.7 பில்லியன் என்ற அளவில் வளர்ச்சியடைந்ததே இந்த சாதனைக்கான முக்கிய காரணம் என அமிருடின் ஷாரி விளக்கினார்.
மேலும், நாட்டின் கட்டுமானத் துறையில் 35.9 சதவீதம், உற்பத்தித் துறையில் 32.8 சதவீதம், சேவைத் துறையில் 27.1 சதவீதம் என்ற அளவில் சிலாங்கூர் தொடர்ந்து முன்னணி பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
2021 முதல் 2025 வரை செயல்படுத்தப்பட்ட முதல் சிலாங்கூர் திட்டம் (RS-1) மாநிலத்தின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், அந்த காலகட்டத்தில் மாநிலத்தின் பொருளாதாரம் RM343.5 பில்லியனிலிருந்து RM460.1 பில்லியனாக, அதாவது 33.94 சதவீதம் அல்லது RM116.6 பில்லியன் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த வெற்றி அரசின் கொள்கைகளால் மட்டுமல்ல, PLATS திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கிய சிறு வணிகர்கள், JobCare மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்கள், IC Design Park-இல் பணிபுரியும் பொறியாளர்கள், மின் மற்றும் மின்னணு உற்பத்தித் துறையினர், தொழில்துறை நிறுவனங்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த பங்களிப்பாலும் சாத்தியமானது என்று அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.



