30.1 C
Kuala Lumpur
Friday, July 3, 2026

Vetri

🛕 வரலாற்றுச் சிறப்புமிக்க உஞ்சனை திருவோண சக்கரவர்த்தியார் ஆலயத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

🔥 Views : 3,047
👁 Reading Now : 26

செய்தி / படங்கள் : எம்.முருகன்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள உஞ்சனையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருவோண சக்கரவர்த்தியார் ஆலயத்தை உடனடியாக சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல நூற்றாண்டுகள் பழமையான இந்த ஆலயம் தற்போது செடி, கொடிகள் மற்றும் புதர்களால் சூழப்பட்டு பராமரிப்பின்றி காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆலயத்தை சீரமைக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர்கள் மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரிடமும் பலமுறை கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் இருந்து பசும்பால் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அது இத்தலத்தின் பெருமையை எடுத்துக்காட்டுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆலயத்தின் முன்புறத்தில் திருக்குளமும், பின்புறத்தில் மயானமும் அமைந்துள்ளதுடன், ஆலயத்தைச் சுற்றி முருகன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் சிலைகளும் காணப்படுகின்றன. தற்போது அவை அனைத்தும் புதர்களால் மூடப்பட்டு பராமரிப்பின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஞ்சனை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருவதால், இந்த ஆலயத்தை சீரமைத்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், கண்டதேவி ஆலயத்தைப் போல இத்தலமும் புகழ்பெற்ற ஆன்மிக மையமாக உருவெடுக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எனவே, தமிழக முதலமைச்சரும், இந்து சமய அறநிலையத் துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க திருவோண சக்கரவர்த்தியார் ஆலயத்தை பாதுகாத்து, முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று உஞ்சனை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles