
இசையமைப்பாளர் இளையராஜா, சரிகமா (Saregama) நிறுவனத்துக்குச் சொந்தமான திரைப்படப் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
சரிகமா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘கவிக்குயில்’, ‘முள்ளும் மலரும்’, ‘ராஜபார்வை’, ‘நெற்றிக்கண்’, ‘கல்யாணராமன்’ உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கான காப்புரிமை தங்களுக்கே சொந்தமானது என்றும், அந்தப் பாடல்களை இளையராஜா பயன்படுத்துவது காப்புரிமை மீறலாகும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடில்லா, கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி, சரிகமா நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற பாடல்களை இளையராஜா பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, அந்த இடைக்கால தடையை நீக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவை மீண்டும் விசாரித்த நீதிபதி துஷார் ராவ் கெடில்லா, இடைக்காலத் தடையை நீக்க மறுத்தார்.
இதனால், வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை சரிகமா நிறுவனத்தின் காப்புரிமைக்கு உட்பட்ட பாடல்களை பயன்படுத்துவதற்கான இடைக்காலத் தடை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.



