29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர்சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பவர்கள்

🔥 Views : 6
👁 Reading Now : 34

சமய ஊர்வலத்தில் கேளிக்கை உல்லாசக் கூத்து இடம்பெறுவது
நம் பாரம்பரிய சமயத்திற்கு களங்கம் விளைவிக்கும்

-இந்து சங்கத் தலைவர் எச்சரிக்கை

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசியாவில் அனைத்து மக்களும் தத்தம் சமயத்தைப் பின்பற்றவும் தற்காக்கவும் அரசியல்சாசனப்படி முழு உரிமை இருக்கிறது. அதன்படி தங்கள் சமயத்தை வளர்ப்பதை விட்டுவிட்டு, ஒருசில தரப்பினர் நலிந்த நிலையில் இருக்கும் எளிய மக்களின் வறுமை மற்றும் இயலாமையைப் பயன்படுத்தி தங்களின் மதத்திற்கு மாற்றும் குதர்க்க வேலையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது அனைத்து இனங்களிலும் எல்லா இடங்களிலும் காணக்கூடியதுதான். இதை ஒரு சாக்காகவும் வாய்ப்பாகவும் கருதும் தரப்பினர், எளிய மக்களுக்கு உதவும் போர்வையில் தங்களின் மதத்திற்கு இழுக்கும் போக்கு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உண்மையில் இப்படிப்பட்டவர்கள், மலேசியாவின் பல்லின கலாச்சாரத்திற்கும் சமய நல்லிணக்கம் மற்றும் இன ஒருமைப்பாட்டிற்கும் கேடு செய்பவர்கள். இதுபோன்ற மோசமான நடவடிக்கையை இந்தத் தரப்பினர் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் கண்டனத்தையும் தெரிவிப்பதாக அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அதைப்போல, கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் உள்ள ஓர் அம்மன் ஆலய ஆண்டுத் திருவிழா தொடர்பில் நடைபெற்ற ஊர்வலத்தில், ஆண்களும் பெண்களும், குறிப்பாக சிறுவர்கள் கூட இதுவொரு சமய ஊர்வலம்; பல இன மக்களும் மதிக்கும் வகையில் சமய ஊர்வலத்தில் பங்குகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் சிறிதும் இல்லாமல், ஏதோ உல்லாச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைப்போல தன்னிலை மறந்து கும்மாலம் போட்டிருப்பது மிகவும் அருவருக்கத்தக்கது.

நம் சமயத்தின் மாண்பைக் கெடுக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட ஆலய நிருவாகத்தினர் எப்படி அனுமதித்தனர் என்பது தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் மற்ற இனத்தினர் மட்டுமல்ல; நம் சொந்த மக்களும் சமய அன்பர்களும்கூட முகம் சுழிக்கும் அளவுக்கு இதுபோன்ற அறுவறுக்கத்தக்க நடனக் கூத்துகளுக்கு எந்த ஆலயமும் எந்த சந்தர்ப்பத்திலும் இனி இடம் அளிக்கக்கூடாது என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles