
🔊To listen to this news in Tamil, Please select the text.
பத்துமலை, ஆக.24:
மக்களுக்கும் நாட்டுக்கும் சகல சௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் ஸ்ரீ சம்ரிதி மங்கள நவசண்டி மகா யாகம் பத்துமலையில் நடைபெற உள்ளது என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
நாட்டில் முதல் முறையாக இத்தகைய மகா யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்து ஆன்மிக மையமாக உருவாகிவரும் பத்துமலைத் திருத்தலத்தில் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் வரும் நவம்பர் மாதத்தில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதன் தொடர்பில் அனைத்து திருப்பணிகளும் சீராக நடைபெற்று வருகின்றன.
இந்தக் குடமுழுக்கு விழாவிற்குமுன், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சம்ரிதி மங்கள நவசண்டி மகா யாகம், மகா விஷ்ணு ஆலயத்திற்கு முன் மேடையும் கூடாரமும் அமைக்கப்பட்டு அக்டோபர் 23 & 24, திங்கள், செவ்வாய் இரு நாட்களில் காலை 6:00 முதல் 11.:30 வரை 54 ஹோம குண்டங்களுடன் ஐந்தரை மணி நேரம் நடைபெற உள்ளது. இரு நாட்களிலும் மகா யாகத்திற்குப் பின் அன்னதானம் இடம்பெறும்.
ஒவ்வொரு குண்டத்திற்கும் ஒவ்வொரு குருக்கள் என தனித்தனியாக அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு, ஏக காலத்தில் நடைபெறும் இந்த யாகத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்களின் ஆன்மிக வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள டான்ஸ்ரீ நடராஜா, இதில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்களுக்கு, வெ.11; வெ.21 என மிகக் குறைந்த அளவில் கட்டணம் விதிக்கப்படும் என்று இதன் தொடர்பில் பத்துமலை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்க் கூட்டத்தில் நடராஜா அறிவித்தார்.
இந்த மொத்த யாகமும் இந்தியாவைச் சேர்ந்த பிரபஞ்ச சக்தி வல்லுநரும் ஸ்ரீ சம்ருதி மற்றும் சித்தா தோற்றுநருமான ஸ்ரீ ஸ்ரீ டாக்டர் பலக்கல் தலைமையில் நடைபெறும். யாகத்திற்கு முதல் நாள், பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் மற்றும் அவரின் மகள் உத்தாரா ஆகியோரின் பக்தி இன்னிசைக் கச்சேரியும் பக்தர்களுக்காக நடைபெற இருக்கிறது என்று நடராஜா மேலும் சொன்னார்.
தொடர்ந்து, ஸ்ரீ ஸ்ரீ டாக்டர் பலக்கல், ஸ்ரீ சம்ரிதி மங்கள நவசண்டி மகா யாகம் குறித்து விளக்கம் அளித்தார்.
ஸ்ரீ சம்ரிதி மங்கள நவசண்டி மகா யாகத்தில் கலந்து கொள்ளும் அன்பர்களின் ஆன்மா சித்தி அடைவதுடன் இந்த மண்ணுலக வாழ்வின்போது மனமும் அதன்மூலம் உடலும் தூய்மை பெறும் என்று டாக்டர் பலக்கல் விளக்கம் அளித்தார்.
இந்த மகா யாகத்தின் ஒருங்கிணைப்பாளரும் கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானத்தின்கீழ் இயங்கும் மஹிமா அமைப்பின் செயலாளரும் ஸ்ரீ ஸ்ரீ டாக்டர் பலக்கலின் மாணவியுமான ஹேமலதா ஆறுமுகமும் செய்தியாளர்க் கூட்டத்தில் உடன் இருந்தார்.
