
🔊To listen to this news in Tamil, Please select the text.
–நக்கீரன்
கோலாலம்பூர், செப்.02
தமிழர்கள் அதிகமாக வாழும் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் இன்றைய சூழலில் தமிழர்கள் முக்கியமாக அரசியல் பொறுப்பு ஏதும் வகிக்காத சூழலில், மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிதானது என்பதைப் போல சின்னஞ்சிறு தீவு நாடாக இருந்தாலும் உலக அளவில் பென்னம்பெரிய மாண்புடன் திகழும் சிங்கப்பூரின் 9-ஆவது அதிபராக தர்மன் சண்முகரத்தினம் என்னும் தமிழர் தேர்வு பெற்றிருக்கிறார்.
ஈழத் தமிழர் மரபினரான இவர்தம் குடும்பத்தார், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
பத்து ஆண்டுகளாக இந்தியாவின் அமைச்சரவையில் ஒரேயொரு தமிழர்கூட முழுஅமைச்சராக பொறுப்பு வகிக்காத நிலையில், தமிழினத்திற்கு நேர்ந்து உள்ள இந்த அவமானக் காயத்திற்கு மருந்திடும் வகையில், தர்மன் சண்முகரத்தினத்தை குடியரசுத் தலைவராக சிங்கைவாழ் வாக்காளர்கள் பெருவாரியான வாக்குகள் பெரும்பான்மையில் தேர்ந்தெடுத்துள்ளனர்.

சிங்கப்பூர் குடிமக்களில் முக்கால் பங்கிற்கும் அதிகமாக சீனர்களாக இருந்தாலும் அந்த நாட்டை வழிநடத்தும் மக்கள் செயல் கட்சி சார்பில் களமிறங்கிய ஒரு தமிழர் வென்றிருக்கிறார். இவரை எதிர்த்து களம் கண்ட மற்ற இருவரும் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரை ஆண்டுவரும் மக்கள் செயல் கட்சியின் அடித்தளம் வலுவானது; சிங்கப்பூரின் தந்தையும் சிற்பியுமான லீ குவான் இயூ-வின் பொன்னான ஆட்சிதான் இந்த அடித்தளத்திற்கு வித்திட்டுள்ளது.
அவரின் மகனார் லீ சியென் லூங்கும் சிறந்த ஜனநாயகவாதியாக இருந்தாலும், அவரின் தலைமையிலான இன்றைய மக்கள் செயல் கட்சிக்கு அண்மைக்காலமாக அவப்பெயர் ஏற்பட்டு வந்தது.
ஊழலை கடுகளவும் சகித்துக்கொள்ளாத சிங்கப்பூர் அரச நிருவாகம் தூய்மைக்கு பெயர்பெற்றது. அப்படி இருந்தும், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஈஸ்வரனும் ஓங் பெங் செங் என்னும் தொழிலதிபரும் ஊழல் காரணமாக பெரிதும் விமர்சிக்கப்பட்டனர்.
போதாக்குறைக்கு சிங்கை நாடாளுமன்ற சபாநாயகர் டான் சுவான் ஜின்-னிற்கும் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் செங் லீ ஹியூருக்கும் இடையில் இருந்த திருமணம் கடந்த உறவு, பச்சையாக சொல்ல வேண்டுமென்றால கள்ள உறவு, சிங்கைவாழ் மக்களை சங்கடப்படுத்தியது.
ஈஸ்வரன், டான் சுவான் ஜின், மணமாகாத செங் லீ ஹியூர் மூவருமே மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தக் கட்சி சார்பில் களமிறக்-கப்பட்ட தர்மன் சண்முகரத்தினத்திற்கான ஆதரவு பாதிக்கப்படுமோ என்ற அச்சம், மக்கள் செயல் கட்சித் தலைவரும் பிரதமருமான லீ சியென் லூங்கிற்கு இருந்தது.
தர்மன் சண்முகரத்தினம் சிங்கையின் பிரதமராக வேண்டும் என்று, பெரும்பாலான சிங்கை மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், தர்மன் சண்முகரத்தினம் சற்று அடக்கமாகவும் நிதானமாக்வும்தான் இருந்தார். சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த தாம் பிரதமர் ஆனால், அது, மிகப்பெரும்பான்மை சமுதாயத்தினருக்கு நெருடலாக இருக்கும் என்பதை அவதானித்திருந்தார் தர்மன் சண்முகரத்தினம்.
தருமன் சண்முகரத்தினத்தை நன்கு அறிந்த பிரதமர் லீ, அவரை அதிபராக ஆக்கி பெருமைப்படுத்த முனைந்தது, கடைசியில் வெற்றியாக அமைந்து விட்டது.
இந்த வெற்றி, 2025 நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கை மக்கள், மீண்டும் மக்கள் செயல் கட்சியைத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையை பிரதமர் லீ சியென்னுக்கு அளித்துள்ளது.
சிங்கையின் தற்போதைய அதிபர் ஹலிமா, வரும் 13-ஆம் நாள் ஓய்வுபெறுகிறார்.
தேசிய அளவிலும் உலக அளவிலும் பல பொறுப்புகளை வகித்தவரும் வகித்துவருபவருமான தர்மன் சண்முகரத்தினம், மிகச் சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல; பொருளியல் வல்லுநருமாவார்.
இப்படிப்பட்ட தமிழ்த் தலைவரின் தமிழியப் பாரம்பரியம், இவருடன் முற்றுபெறுமோ என்ற ஐயம் எழுகிறது.

தஞ்சையில் பிறந்து சிங்கையில் குடியேறிய தமிழவேள் கோ. சாரங்கபாணி, கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பரந்த அளவில் தமிழ்த் தொண்டாற்றியவர். இந்த இரு நாடுகளும் ஒன்றாக இருந்த காலத்தில் உருவான மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை உருவான நேரத்தில், சமஸ்கிருதம் குடிபுக முனைந்ததை முறியடித்த பெருமகன் தமிழவேள் ‘கோசா’.
அப்படிப்பட்டவருக்கு ஆறு மக்கள் பிறந்தாலும், அவர்களில் ஒருவர்கூட இன்று தமிழராக இல்லை; காரணம், அவர் தமிழச்சியை மணம் முடிக்கவில்லை. அதைப்போல, இளைய தமிழவேள் என்று பாராட்டப்படும் ஆதி. குமணின் ஒற்றை மகனும் இன்று தமிழ்ச் சமூகத்துடன் ஒட்டவும் இல்லை; உறவாடவும் இல்லை; தமிழுடனும் தமிழருடனும் அவர் அந்நியப்பட்டிருப்பதற்குக் காரணம், ஆதி. குமணன் தமிழச்சியை மணம் முடிக்கவில்லை என்பதே.
அதைப்போலவே, தர்மன் சண்முகரத்தினமும் தன் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால், அவர்தம் நான்கு மக்களிடமும் யாழ்ப்பாணத்து தமிழியக்கூறுகள் தொடருமா என்பதும் ஐயமே!
