
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், செப்.05–
கோலாலம்பூரில் தொல்.திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்த துணை அமைச்சர் சரசுவதி கந்திசாமி, பேராசிரியர் மு.இராஜேந்திரனைப் போல சென்னையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
க.சரசுவதி, மு.இராஜேந்திரன், அமித் ஷா, தமிழிசை உள்ளிட்டோருக்கு ஆர்.எஸ்.எஸ். பித்தம் தலைக்கேறியுள்ளதால், இந்து சமயம் அதன் அடிநாதமான சனாதனக் கொள்கை ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை பகுத்துப்பார்க்கத் தெரியவில்லை.
இந்து சமயம், ஐக்கிய அரசாங்கத்தின் அதிகார மையமான பங்கிங்ஹாம் அரண்மனையில் ஒற்றை உத்தரவால், 19-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் உருவானது என்பதை எவராவது ஏற்க மறுத்தால், அவருக்கு உண்மை தெரியவில்லை என்று பொருள்.

நாங்கள் வணிகத்திற்காக மட்டுமே வந்துள்ளோம்; வேறு எந்த நோக்கமும் இல்லை; டில்லி பாதுஷாவுக்கு வரி கட்டவும் தயாராக இருக்கிறோம் என்று கூறிய ஆங்கிலேயர்கள், தாங்கள் கொண்டு வந்த அழகான மதுப் புட்டிகளை எடுத்து மொகலாய ஆட்சியாளர்களின்முன் அடுக்கிவைத்து, அருள்மிகு முனியாண்டி சாமிக்கு படையலிட்டு வரம் கேட்பதைப்போல மண்டியிட்டு கெஞ்சினர்.
அப்படி நுழைந்த ஆங்கிலேயர்கள், 1858-ஆம் ஆண்டில் கடைசி சுல்தான் பகதூர் ஷாவை இன்றைய மியன்மாரான அன்றைய பர்மாவிற்கு நாடு கடத்தியதன் மூலம், முன்னூறாண்டு முகலாய சாம்ராஜ்யத்திற்கு முடிவு கட்டினர்.
தைமூர், செங்கிஸ்கான் ஆகியோர் ஏற்படுத்திய தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, முதலில் இருக்க கொஞ்சம் இடத்தைக் கேட்டு, பின்னர் மடத்தையே அபகரிக்கும் ஆக்கிமிப்பாளர்களைப் போல, முதலில் மொகலாயர்கள் எப்படி செய்தார்களோ, அதைப்போலவே ஆங்கிலேயர்களும் அந்நிய மண்ணில் தங்களின் ஆட்சியை நிறுவினர்.
எல்லாமும் நிறைவேறியபின், மக்கள் தொகை கணக்கை மட்டும் அவர்களால் எடுக்க முடியவில்லை. முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை துல்லியமாகக் கிடைத்தநிலையில், பௌத்தர்கள் எத்தனை பேர், சமணர்கள், சீக்கியர்கள், வைணவத்தினர், திருமுருக வழிபாட்டினர், சாளுக்கிய மரபினர், எதிலும் சேராமல் சிறுதெய்வ வழிபாட்டு முறையான பத்ரகாளி, ஐயனார், காட்டேறி சாமிகளைக் கும்பிடுபவர்கள், உலகின் அத்தனை உயிர்களுக்கும் ஆதரவாக வெம்மை-தண்மையுடன் இரவு-பகலையும் அளிக்கும் கோளான சூரியனை வணங்கும் மக்கள் எத்தனைபேர் என்றெல்லாம் மக்கள் தொகைக் கணக்கை எடுக்கமுடியாமல் ஆங்கிலேய நிருவாகம் தடுமாறிக் கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் பகதூர் ஷாவும் நாடுகடத்தப்பட்டார்.
இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று வரலாற்றில் இடம்பெற்றுள்ள சிப்பாய்க் கலகம் நடைபெற்று ஈராண்டுகளுக்குப் பின்னர்தான் மொகலாய ஆட்சி முடிவுக்கு வந்தது. அதுவரை இந்து சமயம் கட்டமைக்கப்படவில்லை.
அதேவேளை, பக்தி மார்க்கம் செழித்த பூமியில், சைவம் உள்ளிட்ட ஏராளமான ஆன்மிகக் கொள்கைகளின் மூலம் மக்கள் பன்முகசமயப் பயிர்களை வளர்க்கத் தவறவும் இல்லை.
இதேக் காலக்கட்டத்தில் மராத்திய சித்பவன பிராமணர்கள் இன்னொரு முன்னெடுப்பை மேற்கொண்டிருந்தனர்.
அது, தெரிந்தோ தெரியாமலோ, பிரிட்டிஷ் அரண்மனைக்கு தோதாக அமைந்துவிட்டது. மூவேந்தர்கள் ஆண்ட தமிழர் நிலம், சத்ரபதி வீர சிவாஜி ஆட்சிபுரிந்த மராட்டியம், இடையில் கிருஷ்ண தேவராயர் ஆண்ட தெலுங்கு மண்டலம், ராஜபுத்திரர்கள் கோலோச்ச்சிய ராஜஸ்தான் மண்டலம் உள்ளிட்ட ஏராளமான நாடுகளை இணைத்து இந்தியா என்ற கட்டமைப்பை உருவாக்கிய ஆங்கிலேயர்கள், மக்கள் தொகைக் கணக்கை எடுக்க முடியாமல் சுணக்கமாக இருந்த நேரத்தில்,

இந்திய விடுதலைப் போராட்டத்தில் அண்ணல் காந்தி முன்னெடுத்த அகிம்சைவழி போராட்டத்திற்குப் பதிலாக, வன்முறைவழி சுதந்திரப் போராட்டத்தை மடைமாற்ற முயன்ற பாலகங்காதர திலகர் உள்ளிட்ட பார்ப்பனர்கள், சவைம்-வைணவம்-சாக்தம்-கணபதியம்-கௌமாரம்-சௌரம் ஆகிய ஆறு கொள்கைகளை உள்ளடக்கிய இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள்தான் இங்கு அதிகம்; எனவே, அரசாங்க வேலைவாய்ப்பில் கிறிஸ்துவர்களைவிடவும் இஸ்லாமியர்களை விடவும் எங்களுக்குத்தான் அதிகமாக, அதாவது பார்ப்பனர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
அந்தக் காலத்தில் படித்தவர்களாக பெரும்பாலும் பார்ப்பனர்களே இருந்ததால், இந்துக்கள் என்ற பெயரில் தங்களுக்குத் தாங்களே வெள்ளையர்களிடம் வேலைவாய்ப்பு கோரிக்கையை மதத்தின் பெயரால் முன்வைத்தனர்.
இந்தக் கோரிக்கையை சற்று வித்தியாசமாக எதிர்கொண்ட ஆட்சியாளர்கள், பிரச்சினையை பிரிட்டிஷ் ராணி பக்கம் திருப்பிவிட்டனர்.
தொடக்கத்தில் முகச் சுளிப்புடன் இதை அணுகிய பிரிட்டிஷ் ராணி, நிருவாக மேலாண்மை மிக்கவர் என்பதால், அதைத் தங்கள் பக்கத்திற்கு சாதமகாமத் திருப்பினார்.
அடுத்தக் கப்பல்மூலம் வந்த தகவலால் திலகர் தரப்பினர் ஆனந்தக் கூத்தாடினர்.
இந்தியாவில், யாரெல்லாம் கிறிஸ்துவர்கள் இல்லையோ; எவரெல்லாம் முஸ்லிம்கள் அல்லரோ மற்ற அனைவரும் பௌத்தவர்கள்-சீக்கியர்கள்-ஜைனர்கள் உட்பட அனைவரையும் இந்துக்கள் என்று அறிவித்தது பிரிட்டிஷ் அரண்மனை.
இதுதான் இந்து சமயம் உருவான வரலாறு; ஆதியும் அந்தமும் இல்லாதது இந்து சமயம் என்று இந்தக் கலவை மதத்தைக் கூறுபவர்களுக்குத்தான் ஆதியும் தெரியவில்லை; அந்தமும் புரியவில்லை.
ஆக, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் முழுமுதல் கடவுளான அம்பலத்தே யாடும் சிவனார், திருமால், உமையவள், விநாயகர், திருமுருகன், சூரியக் கடவுள் ஆகியவர்களை மட்டும் வணங்காமல் ஆஞ்சநேயர், ஐயப்பன், ஸ்ரீடி சாய்பாபா உள்ளிட்ட தெய்வங்களையும் வணங்கி வருகின்றனர்.
நல்ல வேளை, ஆங்கிலேயன் நமக்கெல்லாம் இந்து என்று பெயர் வைத்தான்; அதனால் நாம் தப்பித்தோம்; இல்லையென்றால் சிவனடியார்களும் வைணவ பக்தர்களும் அடித்துக்கொள்வது ஒருபக்கம் இருக்கட்டும்; வைணவர்களே வடகலை உயர்ந்ததா இல்லையில்லை சிவகலை மேலானதா என்றெல்லாம் தங்களுக்குள்ளே மோதிக்கொள்வார்கள்; இதையெல்லாம் தீர்த்துவைத்த அவாளுக்கு நாமெல்லாம் நன்றி சொல்வதுதான் இந்த லோகத்தில் ஷேமமானது என்று சங்கராச்சாரியார் சொன்னதை எவராலும் மறுக்க முடியாது.
சுறுக்கமாக, இதுதான், இந்து சமய தோற்றமும் வரலாறும்.
இதில் சனாதனம் இணைந்தது எப்படி?
இந்து சமயத்தைக் கட்டமைத்த பார்ப்பனர்கள், இந்து சமயத்தில் தங்களை மேலானவர்களாக கட்டமைக்கவும் காட்டிக்கொள்ளவும் செய்த இடைச்செறுகல்தான் சனாதனக் கொள்கை என்னும் வர்ணாசிரமக் கொள்கை; அதாவது சாதிக்கொரு நீதி என்பது.
மகாபாரதக் கதையில், கர்ணன் எத்துணை ஆற்றல்பெற்ற போர்வல்லானாக இருந்தபோதும் அவனது சாதியின் அடிப்படையில் ஓட்டுநர் வேலைதான் கொடுக்கப்பட்டது.
அதைப்போல இராமாயணக் கதையில் ஏழிசை வேந்தன்-சிவநெறி சிந்தனையார்-நீதிவழுவா ஆட்சியாளர் என்றெல்லாம் புகழத்தக்க இராவணனை பெண்பித்தனாகவும் அரக்கனாகவும் சித்தரித்துள்ளனர்.
தானாக வில்கலை பயின்ற ஏகலைவனின் கட்டை விரலை காவு வாங்கியதற்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது சனாதனம்தான்.

இறைவன் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன்; மந்திரம் பார்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டது; அதனால்தான் பார்ப்பனர்கள் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் என்றதுடன் அல்லாமல், மூன்று-நான்கு வயது சிறுமியருக்கு திருமணம் செய்தது; பெண்களை ஒதுக்கிவைத்து கல்வி மறுக்கப்பட்டது; கணவன் இறந்துவிட்டால் மனைவியை உடன்கட்டை ஏறவைத்தது; பிராமணர்களுக்கு கணக்கில்லாமல் தானம் கொடுத்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது; பெண்கள் சபல குணம் கொண்டவர்கள் என்பதால் அவர்களுக்கு அதிகாரமோ சொத்துரிமையோ கூடாது என்பதெல்லாம் சனாதனம் வலியுறுத்தும் கொள்கையாகும். பொட்டுகட்டும் வழக்கத்திற்கு துணைபோனதும் சனாதனமே!
இதே சனாதனக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டுதான், பார்ப்பனர்கள் பழனி கோயில் நிருவாகத்தை பண்டாரத் தமிழர்களிடம் இருந்து பறித்துக் கொண்டனர்; சிதம்பரத்து தமிழர் நிருவாகத்தை நம்பூதிரிப் பார்ப்பனர்களின் ஒரு பிரிவினர் பறித்துக் கொண்டனதுடன் தில்லைவாழ் அந்தனர்களான தமிழர்களின் பெயரையும் தங்களுக்கு மடைமாற்றிக் கொண்டனர்.
தவிர, அறிவாளிகள் மற்றும் திறமையானவர்களை தங்கள்வீட்டு பெண்களின் மூலம் பார்ப்பனர்கள் வசப்படுத்துவதும் உண்டு; அரசியல் மேதை முரசொலி மாறன், நடிகர் ரஜினி காந்த் ஆகிய சூத்திரர்களை மணந்துகொண்ட பிராமணப் பெண்களுக்கு, பிராமண வட்டத்தில் ஒரு தனி மரியாதையே உண்டு.
சூத்திரர்கள் கல்வி கற்றால் அவர்களின் நாக்கை அறுக்க வேண்டும்; நன்மொழியை சான்றோரிடம் இருந்து கேட்டால்கூட அத்தகைய சூத்திரர்-களின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்பதெல்லாம்கூட சானதனக் கொள்கைதான்.
இந்த சனாதனக் கொள்கையைப் பற்றித்தான் 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தொடக்க நாளான ஜூலை 21-இல் தொல்.திருமாவளவன் பேசினார்.
யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்னும் கணியன் பூங்குன்றனாரின் வரியை எல்லோரும் கொண்டாடி மகிழ்ந்தாலும், உண்மையில் அந்த நிலை நடைமுறை வாழ்க்கையில் இல்லை; காரணம், 21-ஆம் நூற்றாண்டிலும் சனாதனக் கொள்கை உக்கிரமாக இருப்பதால் சாதிய ஏற்றத் தாழ்வு முன்னிலும் அதிகமாக இருக்கிறது என்ற பொருளில் தொல்.திருமாவளவன் பேசினார்.
சாதிக் கொடுமைக்கு ஆளாகி நிற்கும் சூத்திர மக்களின் பிரதிநிதி தொல். திருமாவளவன், சமூக ஏற்றத்தாழ்வுக்கு வித்திட்டுள்ள சனாதனக் கொள்கை பற்றித்தான் பேசினாரேத் தவிர, இந்து சமயக் கொள்கைபற்றியோ வழிபாடு பற்றியோ ஏதும் பேசவில்லை.
ஆனால், மலேசிய அரசாங்கத்தில் சம்பளம் வாங்கும் ஓர் ஊழியர், திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபொழுதே ‘போதும் நிறுத்துடா’ என்று கத்தி அவமானப் படுத்தியது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

தமிழ் நாட்டு குப்பைகளை இங்குவந்து கொட்ட வேண்டாம் என்று திருமாவளவன் பேசியதைக் குறிப்பிட்ட பேராசிரியர் மு. இராஜேந்திரனும் அதற்கு கைத்தட்டியவர்களும், ஒரேயொரு நாள் பட்டியலின மக்களின் வாழ்க்கையை வாழ்ந்துபார்த்து சாதிக்கொடுமைக்கு ஆளானால் இப்படி நடந்துகொண்டிருக்க மாட்டார்கள்.
அதைப்போல, அதேமேடையில் அதேநாளில் பேசிய துணை அமைச்சர் சரசுவதியும் இந்து சமயத்திற்கும் இந்து சமயத்தில் பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு கட்டியம்கூறும் சனாதனக் கொள்கைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளாமல், திருமாவளன் இந்து சமயத்திற்கு எதிராகப் பேசியதாக வீணாக அங்கலாய்த்துக் கொண்டதுடன், தமிழ் நாட்டில் அனாதையாகக் கிடந்த ஒரு வெறுங்கோலான செங்கோலை இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் வைத்ததை பெறுமையாகக் குறிப்பிட்டார்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தமிழர்கூட புதுடில்லியில் கேபினட் அமைச்சராக இல்லாததுபற்றியோ புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் எழுத்தைப் பொறிக்காததைப் பற்றியோ அக்கறைப்படவில்லை.
தமிழுக்கும் தமிழருக்கும் இன்னல் விளைவிப்போருக்கு வால்பிடிக்கும் அளவுக்கு சரசுவதியின் கண்களை, ஆர்.எஸ்.எஸ். பித்து மறைத்துவிட்டது.
தற்பொழுது மூன்று தினங்களுக்குமுன் சென்னையில் முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஏற்பாடு செய்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாட்டு இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
அந்த நிகழ்ச்சியின் தலைப்பு தன்னைக் கவர்வதாகக் குறிப்பிட்டார். சாதி பார்த்து நியாயம் சொல்லும் சனாதனைக் கொள்கையை எதிர்ப்பதற்குப் பதிலாக அதை அழிக்க வேண்டும் என்று தலைப்பு வைத்திருப்பது மிகப் பொருத்தம் என்றதுடன், கொரோனா, சிக்குன் குனியா போன்ற நோய்க் கிருமிகள் எப்படி அழிக்கப்பட வேண்டுமோ அதைப்போல மனித குலத்தில் சாதியின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தும் சனாதனக் கொள்கையும் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.
சனாதனக் கொள்கையை நம்மீது திணித்த பார்ப்பனர்கள்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்; அவர்கள் எல்லாம் அமைதிகாக்க, பிராமண அடிமைகளான அமித் ஷா, தமிழிசை சௌந்தரராஜன் போன்றவர்கள் கொக்கரிப்பது எதற்காக?
அதுதான் பார்ப்பன அடிமை என்று தெரிந்துவிட்டதே.
அசலைவிட நகல் என்றும் ஆபத்தானது; பிராமணர்களைவிட பிராமண அடிமைகள் மிகவும் ஆபத்தானவர்கள்.

பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள், திமுகவைப் பற்றி, கும்முடிப்பூண்டியைத் தாண்டினால் எவருக்கும் தெரியாது என்றவர்கள், இன்று புதுடில்லி, ராஜஸ்தான் போன்ற இடங்களில், குறிப்பாக பாஜக தேசியத் தலைவர்களான அமித் ஷா, நட்டா போன்றவர்களே பல்வேறு திரிபு வாதங்களுடனும் வன்போக்குடனும் பேசி, மத உணர்வைத் தூண்டி வருகின்றனர்.
இந்துப் பெருமக்கள், தாம் இந்து என்ற உணர்வுடன் சமய நெறியை முன்னெடுப்பதை விட்டுவிட்டு சனாதனத்திற்கு குரல்கொடுத்து தங்களை பார்ப்பன அடிமையராக பிரகடனம் செய்வது, பிராமண மேலாக்கத்திற்கு இன்னும் வலுசேர்க்கும் என்பதை உணராததனமாகும்.
