
🔊To listen to this news in Tamil, Please select the text.
இடைநிலைப் பள்ளியில் படிக்கின்ற இந்திய மாணவியர், தங்களின் பாரம்பரிய உடையான சேலையை அணிந்ததற்காக ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி இருக்கும் செய்தி மிகுந்த வருத்தத்திற்கு உரியது என்று மலேசிய இந்த சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
பள்ளியில் பாடம் நடைபெறும் வார நாட்களில் எந்த மாணவியும் சேலை அணிந்து பள்ளிக்குச் செல்வதில்லை. பொது விடுமுறை அணுசரிக்கப்படும் நாட்டின் தேசிய தினத்தில் காஜாங்கில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள், பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலை அணிந்து சென்றுள்ளனர்.
அதனால், சம்பந்தப்பட்ட பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியர், சேலை அணிந்து பள்ளிக்குவந்த மாணவிகளின் பெயரை பதிவுசெய்து ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
ஆரம்பக் கல்வியைக் கடந்து இடைநிலைப் பள்ளிகளில்தான் பொதுவாக மாணவர்கள் செப்பம் பெறுவர். பல இன பண்பாடு, பன்மொழித் தன்மை, பல்சமய தெளிவு உள்ளிட்ட யாவற்றையும் அறிந்து, எதிர்காலத்தில் அனைவருடனும் ஒன்றிணைந்து வாழும் தன்மையை மாணவர்கள் பெறுவார்கள்.
அந்த வகையில், மலாய், சீன மாணவியரைப் போல இந்திய மாணவிகளும் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் பங்குபெறும் நோக்கில், தங்களின் பாரம்பரிய உடையில் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
இதற்காகத்தான், அந்தப் பள்ளியின் ஆசிரியர் இப்படியான கீழான செயலை மேற்கொண்டிருக்கிறார்.
குறிப்பாக, ‘மதானி மலேசியா’ என்னும் முழக்கத்துடன் ஒற்றுமை அரசு நாட்டை வழிநடத்தும் இந்த வேளையில், இப்படிப்பட்ட குறுமதி படைத்த ஆசிரியர்களும் இருப்பது கல்வித் துறைக்கு பாதகமானது.
சம்பந்தப்பட்ட மாணவிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை எச்சரிக்கவும் கல்வி அமைச்ச உரிய நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்வதாக தங்க கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



