
🔊To listen to this news in Tamil, Please select the text.
தனது மகனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரை விடுவித்ததற்கு எதிராக சட்டத்துறை தலைலர் அலுவலகம் மேல்முறையீட்டு நோட்டீஸ் தாக்கல் செய்ததை அறிந்த டி. நவீனின் தாயார் கண்ணீர் விட்டார். இது தொடர்பான மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்ததாக சட்டத்துறை அலுவலகத்தின் அதிகாரி ஹஸ்மிசா ஹுசைன் கூறியதைத் தொடர்ந்து அந்த அலுவலகத்திலிருந்து வெளியேறிய சாந்தி கண்ணீர் விட்டு அழுதார். சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு ஆதரவளிக்க அங்கு 300 பேர் கூடியிருந்த வேளையில் அருண் துரைசாமி, சாந்திக்கு ஆறுதல் படுத்தினார்.
இதற்கு முன்னதாக, சாந்தி தனது மகன் நவீனின் வழக்கு தொர்பில் சட்டத்துறை தலைவரின் அலுவலகம் மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்யவேண்டும் என கோரி சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தில் மகஜர் கொடுக்க வந்திருந்தார். அந்த மகஜரை பெற்றுக்கொண்ட அதிகாரி ஐந்து நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அங்கு வந்து மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு 18 வயதான நவீனைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரை அக்டோபர் 3ஆம் தேதியன்று பினாங்கில் உள்ள ஜார்ஜ் டவுன் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதனிடையே நவீன் மேல்முறையீட்டில் அரசு தரப்பில் வழக்கில் ஆஜராகுவதற்கு வழக்கறிஞர் வி. சிதம்பரத்தை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு குடும்பத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அருண் துரைசாமி பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேல்முறையீடு முடிவடையும் வரை, குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் கைது செய்வதற்கான வாரண்டிற்கு விண்ணப்பிக்குமாறு நவீன் குடும்பத்தினர் சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
