32.8 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

ஆலயத்தை உடைத்தவர்மீதுஆயுதம் வைத்திருந்தார் என்றுமட்டும் குற்றப்பதிவா? சட்டத்துறைத் தலைவரின் இரட்டைநிலை! -எம்ஏபி-ஹிண்ட்ராஃப் சட்ட ஆலோசகர் கார்த்திகேசன்

🔥 Views : 9
👁 Reading Now : 40

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோலாலம்பூர், அக்.28:
தைப்பிங், மாச்சாங் பகுதியில் உள்ள இந்து ஆலயத்தில் வழிபாட்டு நேரத்தின்போது பட்டப்பகலில் உள்ளேபுகுந்து அங்கிருந்த சிலையை சேதப்படுத்திய நபர்மீது, ‘ஆயுதம் வைத்திருந்தார்’ என்று மட்டும் குற்றம் சுமத்தியுள்ள சட்டத் துறைத் தலைவர்-அட்டர்னி ஜெனரலின் இரட்டைநிலை குறித்து மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி மற்றும் ஹிண்ட்ராஃப் இயக்க சட்ட ஆலோசகர் கார்த்திகேசன் சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒரு வழிபாட்டுத் தலத்தின் சிலை உடைக்கப்பட்டால், அது சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதை சட்டத் துறை தலைவர் கொஞ்சமும் கருத்தில் கொள்ளவில்லை என்று கவலை தெரிவித்துள்ள கிரிமினல் வழக்கறிஞருமான கார்த்திகேசன், சம்பந்தப்பட்ட நபர்மீதான மற்றக் குற்றச் செயல்களையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமயம் தொடர்பான குற்றங்கள் பீனல் கோட் 15-ஆவது அத்தியாயம், குறிப்பாக 295-ஆவது பிரிவின்படி எந்தவொரு தரப்பினரின் மதத்தையும் அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலத்தை சிதைத்தல் அல்லது அசுத்தப்படுத்துதல் மற்றும் 297-ஆவது பிரிவின்படி அத்துமீறி நுழைதல் போன்றவற்றையும் சட்டத்துறைத் தலைவர் தீவிரமாகக் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, சட்டத்துறை அலுவலகம் இன-சமய எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் சமமாக சட்டத்தை அமுல்படுத்தும் அமைப்பு என்பதை அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் முஸ்லிமாக இருக்கும் பட்சத்தில் சட்டத்துறை அலுவலகம் பெரும்பாலும், சம்பந்தப்பட்ட குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றுகூறி தட்டிக்கழிக்கப் பார்க்கும் என்ற பொதுவான கருத்து, முஸ்லிம் அல்லாதவர்களிடையே நிலவுவதை அவர் புறக்கணிக்க முடியாது. இந்து மற்றும் முஸ்லிம் அல்லாத பிற சமயங்கள் சிறுமைப்படுத்தப் படும்பொழுதெல்லாம் பெரும்பாலும் சோம்பி இருக்கும் காவல் துறையும் சட்டத்துறை அலுவலகமும் இதேப்போன்ற சம்பவம் எதிர்மாறாக நடைபெற்றால், இவை உடனே உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதை பல சம்பவங்கள் உணர்த்தி உள்ளன.

எனவே, சம்பந்தப்பட்ட நபர் இழைத்த குற்றத்தின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு அவர்மீது தற்பொழுது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு சட்டத்துறைத் தலைவரைக் கேட்டுக்கொள்வதாக கார்த்திகேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles