
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், அக்.30:
மலேசியத் திருநாட்டின் மிகமூத்த அரசியல் இயக்கமான மலேசிய இந்தியர் காங்கிரஸ்-மஇகா வரலாற்றில், இன்றைய நாள் ஒரு பொன்னாள்.
22 ஆண்டுகளுக்கு முன்னம், இதே அக்டோபர் 30-ஆம் நாளில்தான் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்-Asian Institute of Medicine, Science and Technology, 55 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. ஆல்போல் தழைத்து விழுதுவிட்டுள்ள இந்தத் தனியார் உயர்க்கல்வி நிறுவனத்தில் தற்பொழுது மாணவர் எண்ணிக்கை நான்காயிரத்தை எட்டுகிறது.
மஇகா-வின் அந்நாளையத் தலைவர் ‘நினைவில் வாழும்’ துன் ச.சாமிவேலு, இன்பத்தின் எல்லையில் திளைத்திருந்த நாட்களில், இந்த நாளும் ஒன்று. நாட்டின் வடபுலத்தேயுள்ள கெடா மாநிலம், மலேசியாவின் நெற்களஞ்சியம் என கருதப்படுகிறது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நெல் விளைச்சலில், 70 விழுக்காடுவரை இங்குதான் அறுவடை செய்யப்படுகிறது.
நாளையத் தலைவர்களை உருவாக்கும் பல்கலைச்சாலையான ‘ஆசிய மருத்துவ, அறிவியல், தொழில்நுட்ப உயர்க்கல்வி நிறுவனமும்-AIMST இங்கே அமைந்திருப்பது பொருத்தமுடையது.
நாட்டின் மையப்பகுதியில் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ரவாங் பட்டணத்தை ஒட்டித்தான் இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவ தொடக்கத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், கடைசியில் தாய்லாந்து நாட்டை ஒட்டியுள்ள செமிலிங் கிராமத்திற்கு இது நகர்த்தப்பட்டது.
கடந்த 22 ஆண்டுகளில் தொடர்ந்து அடைவு நிலையை மேம்படுத்தி தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகின்ற எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், மலாயா அடிமைப்பட்டிருந்த காலத்தில் விடுதலை வேட்கையுடன் தொடங்கப்பட்ட அரசியல் இயக்கமான மஇகா-வின் மகுடத்தில் பதிக்கப்பட்ட வைர மணியாகத் திகழ்கிறது.

மலேசிய தரநிர்ணய முகாமையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள புகுமுகக் கல்வி (Foundation), இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம், பட்டயக் கல்வி, முனைவர் படிப்பு என 32-க்கும் மேற்பட்ட பிரிவுகளின்வழி நாளையத் தலைவர்களை அனுதினமும் உருவாக்கிவரும் இந்த உயர்க்கல்வி நிலையத்தை, சாமிவேலு ஒரு சிற்பியைப் போல பார்த்துப்பார்த்து உருவாக்கினார்.
அதன் இன்றைய வேந்தராக மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் துணை வேந்தராக பேராசிரியர் ஜான் அந்தோணி சேவியரும் திகழ்கின்றனர்.
பீடோங், செமிலிங் பகுதியில் 230 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்வியை வழங்குவதில் நாட்டில் முதல் நிலை பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது.
மலேசிய உயர்க்கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த உயர்க் கல்வி நிலையம், 1997 ஆகஸ்ட் திங்களில் நடைபெற்ற மஇகா-வின் 51-ஆவது தேசியப் பேரவையில் உறுதிசெய்யப்பட்டபின், மஇகா தேசிய தலைமை, மாநில பொறுப்பாளர்கள், தொகுதித் தலைவர்கள், கிளைப் பொறுப்பாளர்கள் என தேசிய அளவில் அந்தக் கட்சியினரை முடுக்கிவிட்டு நிதியைத் திரட்டினார் சாமிவேலு.
துன் மகாதீர் தலைமையிலான மத்தியக் கூட்டரசும் கெடா மாநில தேசிய முன்னணி அரசும் சாமிவேலுவிற்குத் துணை நல்கின; குறிப்பாக அன்றைய ஆட்சிக் குழு உறுப்பினர் ‘நினைவில் வாழும்’ டத்தோ வி.சரவணன்; அவரினும் மேலாக அன்றைய மந்திரி பெசார்(மாநில முதல்வர்) டத்தோஸ்ரீ ஹஜி சைட் ரசாக் பின் சைட் ஜைன் இருவரும் நிலத்தைக் கையகப்படுத்தும் நாவடிக்கைக்கு பெரும்பங்கு ஆற்றினர்.
மஇகா-வின் கல்விக்கரமான MIED-இன் பராமரிப்பில் உள்ள எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், 2024 மைப்பகுதியில் நடைபெறவுள்ள அதன் 15-ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு இப்பொழுதிருந்தே அணியமாகிவருகிறது; இந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகளுக்கான பாடத் திட்டங்கள் பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் இருந்து வரையப்பட்டுள்ளன. இது, வெளிநாட்டு மாணவர்கள் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் சேரவும் இங்கு படிக்கும் உள்நாட்டு மாணவர்கள் வெளிநாட்டிற்குச் செல்லவும் தோதாக அமைந்துவிட்டது.
நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான மற்றும் தேவைப்படும் மாணவர்களின் கல்வித் தேவையைக் கருத்தில் கொண்டு 1984இல் Maju Institute of Educational Development-MIEDஐத் தொடங்கியதும் இதே துன் சாமிவேலனார்தான்.
எய்ம்ஸ்ட், மருத்துவ-அறிவியல்-தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்பதால், இங்கு மொழியியல் புலமோ அல்லது பண்பாட்டுக்கூறோ இல்லை; அதனால்,
தமிழ்மொழி, பண்பாடு, அறிவியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழ்வழி ஆய்வு மேற்கொள்ளப்படும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் கடந்த 2017 தொடக்கத்தில் சென்றனர்.

அதன்பின்னர் தொடர் நடவடிக்கைக் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை; இந்த நல்ல அம்சம் குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அன்றைய துணை வேந்தர் முனைவர் க. பாஸ்கரனுடன் தொடர்புகொண்டபோது, “தமிழ் மொழியின் தலைநிலத்தில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைகத்திற்கு புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் தமிழ் மாணவர்களும் அவர்களுடன் இணைந்து கல்விப் பயணம் மேற்கொண்டுள்ள பிற இன மாணவர்களும் வருகை மேற்கொண்டால், அது இரு நிலத்திற்குமான பண்பாட்டு-கலை-கலாச்சார பரிமாற்றத்திற்கு உதவும் எனக் கருதி இந்தத் திட்டம் உருவானது. இதற்கான முன் முனைப்பைத் தொடங்கியதும் தான்தான்” என விவரித்த பாஸ்கரன், தான் பதவி ஓய்வுபெற்ற பின், இரு துணைவேந்தர்கள் பொறுப்பிற்கு வந்துள்ளதாகவும் அதன் தற்போதைய நிலவரம் தெரியவில்லை என்றும் சொன்னார்.
இதனால், தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய வேந்தர் முனைவர் வி.திருவள்ளுவனைத் தொடர்புகொண்டபோது, “
“ஆமாம், இதுவொரு நல்லத் திட்டம்தான். இதுகுறித்த கோப்புகளை அண்மையில் காண நேர்ந்தது. ஆனாலும், தனக்கு முன் பொறுப்பு வகித்த துணைவேந்தர் காலத்தில் அது ஏன் தொடரவில்லை என்று தெரியவில்லை; மலேசியாவின் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் இருந்தும் எந்தத் தகவலும் இல்லை. தஞ்சைப் பல்கலைக்கழக மாணவர்கள் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கும் அங்கு பயிலும் மாணவர்கள் இங்கும் வருகை மேற்கொண்டால் இரு உயர்க்கல்வி நிலையங்களின் மாணவர்களுக்கிடையில் புவிசார் பண்பாடு, கற்றல் வகை, கலை வெளிப்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பரிமாற்றம் ஏற்படும்’ இது எதிர்கால சமூக மறுமலர்ச்சிக்கு வித்திடும் என்பதால், இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.
இதுமட்டுமல்ல; இந்துஸ்தான் கலை-அறிவியல் கல்லூரி மற்றும் Hindustan Institute of Advance Studies ஆகிய உயர்க்கல்வி நிறுவனங்களுடனும் எய்ம்ஸ்ட் ஒப்பந்தம் கண்டுள்ளது.
இதில், எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஹர்ச்சரன் சிங் இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் நிருவாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஸ்பிரபு ஆகியோரின் சார்பாக இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி கையெழுத்திட்டார்.

மேம்பட்ட ஆய்வு, கற்பித்தல், பன்முனை பரிமாற்றம், கூட்டுக் கற்பித்தல், மாணவர்களுக்கான இணைந்த தொழில்முறைப் பயிற்சி, ஆய்வு நிபுணத்துவ பரிமாற்றம், இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வு மாணவர்களுக்கான மேலாய்வு குறித்து துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு சிறப்புரை வழங்குதல், இணைந்த மாநாடுகள், கருத்தரங்குகள், பட்டறைகள் அகியன குறித்தும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாக வரையறுக்கப் பட்டுள்ளன.
2020 தொடக்கத்தில் உருவான இந்த ஒப்பந்தத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகளும் தெரியவில்லை. இவை குறித்தெல்லாம் மேல்தகவல் அறிய எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்துடன் தொடர்புகொண்டால், தோல்விதான் மிஞ்சியது.
எது எவ்வாறாக இருந்தாலும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் இன்னும் வளர்ச்சி அடைந்து மலேசியாவில் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட வாழ்த்துவோம்; ஒரு மருத்துவ மனையை உருவாக்க வேண்டும் என்ற எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஆவல் நிறைவேற ‘ஏஎஸ்டி’ செய்தித்தளம் வாழ்த்துகிறது.
