32.8 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

இந்திய சமுதாயத்தின் கல்வி மறுமலர்ச்சிதான் முழு இலக்கு: -எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக வேந்தர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

🔥 Views : 9
👁 Reading Now : 50

🔊To listen to this news in Tamil, Please select the text.

-நக்கீரன்

கோலாலம்பூர், அக்.30:
இந்திய சமுதாய மறுமலர்ச்சிக்கும் மாணவர்களின் எதிர்கால மீட்சிக்கும் துணை நிற்பதுதான் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஒற்றை இலக்கு என்று அதன் வேந்தர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று அக்டோபர்த் திங்கள் 30-ஆம் நாள் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 22-ஆவது தொடக்க நாள். “இந்த உயர்க் கல்விப் பூங்காவை மஇகா உருவாக்கி இருந்தாலும், இது இந்திய சமுதாயத்திற்கு உரியது என்றும் இந்த உயர்க்கல்வி நிறுவனத்தின் அடியும் உச்சியுமாக இருக்கின்ற பெரியவர்(துன் ச.சாமிவேலு) கண்ட கனவை நினைவாக்குவதுதான் தன் முதன்மைப் பணி” என்றும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் 23-ஆவது ஆண்டை எட்டுவதன் தொடர்பில் விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த உயர்க்கல்வி நிறுவனத்திற்கு அரசு ஆண்டுக்கு வெ.25 மில்லியன் நிதி வழங்கினாலும், அதை அப்படியே சிந்தாமல் சிதறாமல் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இனம்-மொழி-சமயம் பாராமல் கடனாகவும் உதவி நிதியாகவும் ஆண்டுதோறும் அளித்து வருகிறோம்.

இது தவிர, பல்வேறு சந்தர்ப்பங்களில் கல்வி உதவி நாடி வரும் அனைவருக்கும் இல்லையென்று சொல்லாமல், இந்திய சமுதாயத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தனிப்பட்ட முறையில் நாங்கள் உதவி வருகிறோம்.

எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்காக வெ.500 மில்லியன் நிதி திரட்டியது போதாமல் வெ.240 மில்லியன் கடன் வாங்கி, கடனுக்கு வட்டியும் சேர்த்து வெ.450 மில்லியனை கட்டி முடித்துள்ளோம். துன் சாமிவேலு, 80 விழுக்காட்டு கடனை அடைந்திருந்த நிலையில் அவருக்குப் பின் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் வேந்தராகவும் பொறுப்பேற்ற தான் மீதி 20% கடனை கட்டி முடித்ததாக மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்காக ஒரு மருத்துவமனையையும் ‘Diagnostic’ மையத்தையும் உருவாக்க வேண்டும் என்பது எனக்கு மட்டுமல்ல; மஇகா கல்விக் கரமான ‘எம்.ஐ.இ.டி’-யின் இலட்சியமாகவும் உள்ளது. இதையும் விரைவில் நிறைவேற்ற எல்லாம்வல்ல பரம்பொருளின் துணையை நாடி நிற்கிறேன்.

ஒன்றுமட்டும் உறுதி; ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்திய சமுதாயத்தின் மீட்சியும் மாணவர்களின் மறுமலர்ச்சியும்தான் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் என்று நாடாளுமன்ற மேலவை மேநாள் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles