
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், நவ.22:
பெருங்கவிப் பெருமகன் பாரதியார் பிறந்த நாள் விழாவை 26-ஆம் ஆண்டாக ஈரோட்டு மக்கள் சிந்தனைப் பேரவையினர் பரந்த அளவில் ஏற்பாடு செய்துள்ளனர்.
வார நாட்கள், வார விடுமுறை நாட்கள் என்றெல்லாம் பாராமல் பார்புகழ் கவியாம் பாரதியார் பிறந்த நாளான டிசம்பர் 11-ஆம் நாளில் பாரதியார் விழாவை தொய்வின்றி நடத்தி வருகின்றனர் பாரறியும் வண்ணம் செயல்படும் ஈரோட்டு மக்கள் சிந்தனைப் பேரவையினர்.
பொதுவுடைமைச் சிந்தனையால் புடம்பெற்றிருந்தாலும் பொதுமைப் பண்பு நலம், தமிழிலக்கிய தாகம், தமிழிய தாக்கம் ஆகியன மிகப்பெற்றிருப்பதால் இந்த சிந்தனைப் பேரவையை சிந்தாமல் சிதறாமல் வழிநடத்தி வருகிறார் இதன் தலைவர் ஸ்டாலின் த. குணசேகரன்.
கொரோனா தாக்கம் உலக அளவில் பரவியிருந்த காலத்தில்கூட பாரதி விழாவை இடைநில்லாமல் இந்தப் பேரவையினர் ஏற்பாடு செய்துள்ளனர். காலத்தால் விளைந்த நற்கோலமாக இணைய ஊடாக பாரதி விழாவை நடத்தியதால், இது ஈரோட்டு எல்லை மட்டுமல்ல; தமிழக எல்லையையும் கடந்து, வானவீதிவழியே உலகத் தமிழர்களை எட்டியது.
வழக்கமாக பல நூற்று பேர் கலந்து கொள்ளும் இந்த பாரதி விழா, கொரோனா காலத்தில் கட்டுப்பாட்டு விதிகளுடன் இணைய வசதியுடனும் நடத்தப்பட்டதால், உலகின் பல பகுதிகளிலும் வாழும் பல்லாயிரக் கணக்கான தமிழ் நெஞ்சங்களை இவ்விழா ஆட்கொண்டது; இதனால், உலக அளவில் அறியப்பட்ட இலக்கிய விழாவாக, ஈரோட்டு மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விழா உருமாறி விட்டது.
பாரதி விழாவை வெள்ளி விழா ஆண்டாக கடந்த ஆண்டு கொண்டாடிய ஈரோட்டு மக்கள் சிந்தனைப் பேரவையினர், தற்பொழுது 26-ஆவது ஆண்டாக பாரிய அளவில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்தப் பாரதி விழாவில் ஆண்டுதோறும் தமிழ் நாட்டின் இலக்கிய ஆளுமையருள் ஒருவரைத் தெரிவு செய்து அவருக்கு பாரதி விருது வழங்குவதுடன், நினைவில் வாழும் தமிழிலக்கியவாணர் ஒருவரின் திருவுருவப் படத்தைத் திறந்துவைத்து விழா நடத்துவது, இப்பேரவையின் மரபாகத் தொடர்கிறது.

தவிர, பாரதியார் நிறைவாக உரை நிகழ்த்திய கருங்கல்பாளையம் நகரில் உள்ள வாசக சாலையில் இருந்து பாரதி உருவம் பொறித்த மஞ்சள் சட்டை அணிந்து நூற்றுக் கணக்கான இளைஞர்கள் பாரதி சோதியை ஏந்திய வண்ணம் ஈரோட்டு நகரின் முக்கிய வீதிகளைக் கடந்து விழா அரங்கைச் சேர்வது இந்த விழாவின் இன்னொரு சிறப்பு மட்டுமல்ல; காண்போரின் உள்ளத்தை அள்ளும் தெள்ளுதமிழ்ப் பாங்காகவும் அமையும். மாகவி பாரதி விருதைப் பெறுபவர், சோதி ஊர்வலத்தை எதிர்கொண்டு, சோதியைப் பெற்று ஏறக்குறைய 100 அடிகளைக் கடந்து விழா அரங்கை அடைவது இன்னும் எழுச்சியாக அமையும்.
ஈரோடு என்றாலே சிந்தனைச் சுரங்கம்தான் போலும்;
ஒரு வர்த்தக நகரில் இந்த விழா நடைபெற்றாலும் மாநிலந்தழுவிய அளவில் இலக்கிய வாணர்கள், கவிப் பெருமக்கள், உரைஞர்கள், வர்த்தகப் பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள், மாணவர்கள், பொதுமக்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் அரசியல் எல்லையைக் கடந்து இதில் பங்குபற்றுவதால், தமிழகமே சங்கமிக்கும் தினமாக டிசம்பர் 11-ஆம் நாளை ஈரோட்டு நகரம் ஆண்டுதோறும் எதிர்கொள்கிறது.
இதற்கெல்லாம் தகைமைசால் தலைமையும் தலைமைக்கு இசைவாக காலம் கருதாமல் கடமையாற்றும் குழுவினருந்தான் காரணம்.



