32.8 C
Kuala Lumpur
Thursday, December 12, 2024

Vetri

அடுத்த பிரதமரை நிர்ணயிக்கும்ஐந்தாவது வேட்டி கட்டிய தமிழர்: -முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

🔊To listen to this news in Tamil, Please select the text.

-நக்கீரன்

கோலாலம்பூர், பிப்.29:
2024, மார்ச் திங்கள் முதல் நாளில் 72-ஆவது அகவையை எட்டுகின்ற தமிழக முதல்வர், திமுக தலைவர், ‘இந்தியா’க் கூட்டணியின் தமிழக தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இந்த மலையகத்து புலம்பெயர் தமிழர்கள் சார்பில் முதற்கண் 71-ஆவது பிறந்த நாள் வாழ்த்து உரித்தாகட்டும்.

வாழ்க தமிழக முதல்வர்!
வளர்க திமுக!!
வளம்பெறுக தமிழ்நாடு.

திமுக, ஆட்சிக் கட்டிலில் அமரும்பொழுதெல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் சூழ்ச்சியை எதிர்கொள்வதுண்டு. பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரைக் காட்டிலும் அதிக அரசியல் நெருக்கடியை எதிர்கொள்பவர் இன்றைய தமிழக முதல்வர்.

சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக ஒரு மண்டலக் கட்சி சார்பில் ஒரு மாநில ஆட்சியை நிருவிய பேரறிஞப் பெருந்தகை அண்ணாவின் அரசியலால், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி உறக்கமில்லா இரவுகளை எதிர்கொண்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் நிக்சன் போன்றவர்களையே மிகவும் இலாவகமாகக் கையாண்டு, உலக அரசியல் அரங்கில் செம்மாந்து நடைபயின்ற இந்திராவிற்கு, நாட்டின் தென் கோடி முனையில் காங்கிரஸ் ஆட்சியை அரசக் கட்டிலில் இருந்து அகற்றிய அறிஞர் அண்ணாவின் புதுமை அரசியலும் மக்கள்நல சார்பும் வெளிப்படை நிருவாகமும் பிரதமர் இந்திரா காந்தியை எரிச்சலின் எல்லைக்கும் கோபத்தின் உச்சிக்கும் அழைத்துச் சென்றன.

இதை வெளிப்படையாக காட்டிக் கொள்ள முடியாத இந்திரா, திமுக-விற்கு எதிரானது எனக் கருதி மேற்கொண்ட ஒருசில நடவடிக்கைகள், தமிழ் நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக அமைந்தன.

அதன் பாரதூர விளைவுகளை இன்றளவும் எதிர்கொள்கின்றனர் தமிழ் நாட்டு மக்கள். தவிர, 1967 மார்ச் 6-ஆம் நாள் தமிழக முதல்வராக பேரறிஞர் அண்ணா பொறுப்பேற்றுக் கொண்ட அடுத்த ஒரு சில மாதங்களிலேயே கடுமையான உடல் நல பாதிப்பிற்கு ஆளானார்.

இதனால், ஆட்சியிலும் கட்சியிலும் அவரின் ஆளுமை, மேகம் மறைத்த சூரியனின் கதிர்க்கற்றையைப் போலானது. அவரின் ஆட்சிக் காலத்தில் தஞ்சை வேளாண் மண்டலத்தைச் சேர்ந்த சிறுபட்டினம் வெண்மணியில் நலிந்த வேளாண்குடிமக்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிருடன் எரிக்கப்பட்டது குறித்து அண்ணா மிகுந்த வேதனைக்கும் மாளாத் துயருக்கும் ஆளானார். தவிர, அந்தச் சம்பவம்கூட திமுக ஆட்சிக்கும் முதல்வர் அண்ணாவிற்கும் எதிராக அரங்கேற்றப்பட்ட ஒரு சதியாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.

அண்ணாவிற்குப் பின் அரியணையில் அமர்ந்த முத்தமிழ் அறிஞராம் கலைஞரைப் போல வஞ்சகத்தையும் ஊடக துரோகத்தையும் எதிர்கொண்ட தலைவர் அரசியலில் இல்லை என்றே கூறலாம்.

ஆனாலும் பகுத்தறிவுக் கடப்பாரையை மூன்றே விரல்களில் பேனா வடிவில் ஏந்தியிருந்த அவர், அதன்வழியே அத்தனை இடரையும் எதிர்கொண்டார்; சமாளித்தார். அவர் அடைந்த அத்துணை மாண்பிற்கும் மேன்மைக்கும்கூட, அந்தக் கடப்பாரைதான் காரணம்.

குழந்தை பிறந்தபொழுதே வாலோடும் கொம்போடும் பிறந்த கதையைப் போல ஜவஹர்லால் நேரு பிரதமராக பொறுப்பேற்றபொழுதே காஷ்மீரத்துச் சிக்கல் இந்தியாவை தொற்றிக்கொண்டிருந்தது; அதைப்போல கலைஞர் முதல்வரானபொழுதே சில வால்கள் ஆடின; கொம்புகள் சிலிப்பின.

அமைச்சர் பதவிக்குப் பதிலாக அவைத் தலைவர் பதவி பெற்ற கே.ஏ.மதியழகன், நடித்துக் கொண்டே சுகாதார அமைச்சர் ஆக விரும்பிய தறிகெட்ட எம்ஜிஆர், தான் முதல்வராக உதவாத எம்ஜிஆருக்கு எதிராக இதுதான் சமயம் என கட்சிக்குள் சண்டித்தனம் புரிந்த நாவலர் போன்றோர் கட்சியில் இருந்துகொண்டே கலைஞருக்கு எதிராக கமுக்க நடவடிக்கையில் ஈடுபட்டது; நாணம்- நாநயம்-நாணயம் ஆகியவற்றைத் தொலைத்த கூட்டத்தைச் சேர்ந்த ‘சோ’ ராமசாமி போன்றோர் அச்சு ஊடகத்தின்வழி ஊற்றிய அழுக்கு மை, பிரதமர் இந்திரா காந்தி டில்லியில் இருந்து கலைஞருக்கு எதிராக வரிசையாக கமுக்கமாக ஏவிய நஞ்சம்புகள் என தடைக்கற்களை இடைநில்லாது எதிர்கொண்டார் கலைஞர்.

ஆங்கிலேயரின் ஆதிக்க ஆட்சியால், ‘தமிழ் நாடு’ என்ற கட்டமைப்பு சிதைந்தாலும் சில-பல நன்மைகள் விளைந்தன என்பதை மனசான்றுடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இடையில் 20-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் திராவிட நாட்டிற்கான கட்டமைப்பை சுயசிந்தனையாளர்-பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் அடியொற்றி சர் ஏ.டி. பன்னீர்செல்வம் மேற்கொண்டிருந்தார்.

பன்னீர் செல்வத்தின் சட்ட அறிவையும் நிருவாக ஆளுமையையும் நன்கு அறிந்திருந்த ஆங்கில ஆட்சியாளர்களும் பாகிஸ்தான் பாணியில் தனி திராவிட நாட்டுக் கொள்கைக்கு இசைவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், 2-வது உலகப் போரின்போது பிரிட்டன் அரண்மனையின் போர் ஆலோசகராக பதவியேற்க இலண்டன் மாகருக்குச் சென்றபோது ஏமன் நாட்டு வான்வெளியில் ஐயத்திற்கு இடமான வகையில் பன்னீர் செல்வம் காணாமல் போனார்.

ஆதித்த கரிகால சோழன், நந்த நாயனார், வள்ளலார் சுவாமிகள், திருநெல்வேலி ஆளுநர் ஆஷ் துரை, சுபாஷ் சந்திரபோஸ், அண்ணல் காந்தி அடிகள் வரிசையில் இணைந்த பன்னீர் செல்வத்தின் இறுதிநேரம் குறித்து எதிர்காலத்தில் நிச்சயம் தெரியவரும்.

இவையாவும் ஒருபுறம் இருக்க, ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சென்னை மாகாணத்திற்காக மேட்டூர் நீரணையும் மைசூர் மாகாணத்திற்காக கிருஷ்ண ராஜ சாகர் அணையும் கட்டப்பட்டு 1924-இல் ஈரணைகளும் ஒருசேர திறக்கப்பட்டன.

அந்த வேளையில் இரு மாகாணாங்களுக்கு இடையில் ஓர் ஒப்பந்தமும் உருவானது. இன்னும் 50 ஆண்டுகள் கழித்து, அப்போதைய மக்கள் தொகை, பாசன பரப்பு, மழை வளம் குறித்த அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த இரு அணைகளுக்கு இடையேயான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஆங்கிலேயர் வகுத்த 1924 மேட்டூர்-கிருஷ்ணராஜ சாகர் நீரணை ஒப்பந்தம்.

இதைத்தான் புதுப்பிக்க விரும்பிய முதல்வர் கலைஞரின் எண்ணற்ற வேண்டுகோல், நினைவூட்டு கடிதம் உள்ளிட்ட அத்தனையும் அலட்சியம் செய்த பிரதமர் இந்திரா காந்தி, காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்த தன் கட்சி முதல்வர் தேவராஜ் அர்சை கமுக்கமாக ஏவிவிட்டு, காவிரியின் கிளை நதிகளான கபினி, சுவர்ணமுகி, சாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட ஐந்து நதிகளிலும் அணைகளைக் கட்டவைத்து தமிழ் நாட்டை பாலவனமாக்கி வேளாண்தொழிலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் காரியத்தை செய்தார்.

இதற்கிடையில், முதல்வர் கலைஞர் காவிர் நீர் மறுஒப்பந்தம் குறித்து அலட்சியம் காட்டும் கர்நாடக மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை எதிர்பாராத இந்திரா, அப்போதும் ஒரு தந்திரம் புரிந்தார். பேசி தீர்வு காண்போம்; அதனால், வழக்கை திரும்ப பெறுங்கள் என்று முதல்வர் கலைஞரிடம் கேட்டுக் கொண்டார். பிரதமர் என்னும் வகையில் இந்திரா காந்தியின் வாக்குறுதியை நம்பி, முதல்வர் கலைஞரும் வழக்கைத் திரும்பப் பெற்றார்.

அவ்வளவுதான், அந்தச் சிக்கல் இன்றளவும் தொடர்கிறது. அதைப்போல தமிழ் நாட்டுக்கு சொந்தமான கச்சத் தீவை, தமிழ் நாட்டு அரசின் ஒப்புதல் இன்றி இலங்கைக்கு தாரை வார்த்த இந்திரா, சிரிமாவோ பண்டார நாயகேவுடன் அன்று கொஞ்சி குலாவினார். அதன் விளைவு, இந்த ஆண்டு அந்தோணியார் ஆலயத் திருவிழாவை கன்னியாகுமரி மீனவர்கள் புறக்கணிக்கும் நிலையென தொடர்கிறது; ஆனால், இதன் தொடர்பில் கலைஞர்மீது இன்றுவரை பழி சுமத்தப்படுகிறது.

இவ்வாறெல்லாம் மாநில அளவிலும் தேசிய அளவிலும் வஞ்சகத்தையும் சூழ்ச்சியையும் எதிர்கொண்டே ஆட்சியை வழிநடத்தினார் கலைஞர்.

இரண்டு முறை ஆட்சிக் கவிழ்ப்பிற்கு ஆளான பெருந்துயரையும் எதிர்கொண்டார் கலைஞர்.

“I’ll crush the DMK” என்று இந்திரா கொக்கரித்தபோதும், அஞ்சாமல் அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் முதல்வர் கலைஞர். அதற்காக, 1976 ஜனவரி மாதத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

அதைப்போல, 1991-யிலும் ஜெயலலிதாவிற்கு கொள்ளைப்புற வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக, ஆர்.வெங்கட்டராமன், சந்திரசேகர், சுப்பிரமணிய சாமி ஆகிய மூவரும் கூட்டுசேர்ந்து ஆளுநர் எஸ்.எஸ். பர்னலா-வின் கருத்தையும்மீறி திமுக ஆட்சியைக் கலைத்தனர்.

சதாமை வீழ்த்த அவர் இரசாயன ஆயுதம் வைத்திருக்கிறார் என்று பொய்க்குற்றம் சாட்டி, அதன் அடிப்படையில் ஈராக்மீது அமெரிக்கா போர் தொடுத்ததைப் போல, திமுக ஆட்சியை இரண்டாவது முறையாக கலைத்தபோது, ‘தமிழ் நாட்டில் திமுக ஆட்சியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டமும் செயல்பாடும் அதிகம் இருக்கிறது’ என்று பொய்க்குற்றம் சுமத்தப்பட்டது.

இவ்வளவையும் மீறித்தான் கலைஞர் அடுத்த ஆட்சியை அமைத்தார்; ஐந்தாவது முறையாக 1996-இல் மீண்டும் முதல்வரானார்.

ஆனால், திமுக-வின் மூன்றாம் கட்ட ஆட்சியை இப்போது நிறுவியுள்ள மு.க.ஸ்டாலின், கலைஞர் காலத்தைவிட மிக அதிக நெருக்கடியை உள்ளும் புறமுமாக எதிர்கொண்டு வருகிறார்.

தமிழ் நாட்டு மாணவர்களின், குறிப்பாக மருத்துவத் துறை மாணவர்களின் கல்விப் பயணத்தை தடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் சூழ்ச்சிமிகு ‘நீட்’ தேர்வுக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஒருவார்த்தை பேசாத அடிமை அரசியல்வாதி இடைப்பாடி பழனிச்சாமி, ஒலிவாங்கிமுன் அன்றாடம் வாயாடும்-பொய்யாடும் ஜெயக்குமார் மற்றும் இவர்களைச் சேர்ந்த தமிழ்த் துரோகக் கூட்டம், ‘நீட்டைத் தடுப்போம்’ என்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின்மீது பொருந்தா குற்றம் சுமத்துகின்றனர்.

புதுடில்லியிலோ மதவாத அரசும் ஆட்சியும் ஆடும் அக்கிரமக் கொட்டத்திற்கு அளவே இல்லை.

பேறறிஞர் அண்ணாவும் முத்தமிழ அறிஞர் கலைஞரும் சந்தித்திராக நெருக்கடிகள் இவை.

தமிழ் நாட்டின் நிதிவளம் புது டில்லியால் சுரண்டப்படுகிறது; பிரதமர் மோடி பத்து ஆண்டுகளாக தமிழ் நாட்டை வஞ்சிப்பது ஒருபுறம் இருக்க, இப்பொழுது நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை யெல்லாம் தேடியெடுத்து திமுக அமைச்சர்கள் குறிவைக்கப்படுகின்றனர்.

வேளாண் தொழிலைக் கெடுக்க, காவிரிப் படுகையை சிதைக்கின்ற புது டில்லி, மீன் வளத்துறையைக் கெடுக்க தமிழக கடற்கரை முழுவதையும் சிங்கள ராணுவத்திற்கு குத்தகை விட்டுள்ளது.

இன்றைய தமிழ் நாட்டு திமுக அரசும் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலும் எதிர்கொள்ளும் தடைக் கற்களை சொல்லியும் எழுதியும் மாளாது.

எல்லாவற்றையும் எதிர்கொண்டு, இளஞ்சூரியன் உதயநிதி ஸ்டாலின் பக்கபலத்துடன் இந்தியாவின் அடுத்த பிரதமரை உறுதிசெய்யும் ஐந்தாவது வேட்டி கட்டிய தமிழராக, முதல்வர் ஸ்டாலின் திகழ்வார் என்று அயலகத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles