
🔊To listen to this news in Tamil, Please select the text.
இந்து சமயத்தில் முதன்மை ஆன்மிக நெறியான சைவ சமயத்தின் வழிபாட்டு நாயகன் சிவபெருமானின் அருவுருவத் திருவுருவான சிவலிங்கத்தை சிறுமைப் படுத்தியுள்ள மதவெறுப்புப் பிரச்சாரகர் ஸம்ரி வினோத்திற்கு மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்துவாகப் பிறந்து இந்துவாக வாழ்ந்து இடையில் மதம் மாறிய ஸம்ரி வினோத், தொடர்ந்து இந்து சமயத்தை சிறுமைப்படுத்தி கருத்து தெரிவித்து வருகிறார். இப்பொழுது சிவலிங்கத்தை அவமதிக்கும் வகையில் பேசி இருக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகிறது.
சைவ சமயத்தில் உருவ வழிபாடு உள்ளதைப் போல, அருவ வழிபாடும் உள்ளது. சோதி வழிபாடு என்பது அருவுருவ வணக்க முறைதான். அதைப்போல சிவபெருமானின் அருவுருவ வடிவம்தான் சிவலிங்கம்.
சிவலிங்கத்தின் அடித்தளம் உயிர்கள் வாழும் பூமியையும் மேற்பகுதி வானுலகையும் குறிக்கிறது. மொத்தத்தில் மண்ணையும் விண்ணையும் ஆளும் பரம்பொருளான சிவபெருமானின் அருவுருவக் கோலம்தான் சிவலிங்கம் என்னும் திருவுருவம்.
ஒரு மொழியில் எந்தச் சொல்லுக்கும் பல்வேறு பொருட்கள் உள்ளதென்பது அனைவரும் அறிந்தது. இதை அறியாத ஸம்ரி வினோத், சிவலிங்கத்திற்கு சிறுமையான முறையில் விளக்கம் அளித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர் தொடர்ந்து இதுபோன்ற வேலையைச் செய்து இந்துப் பெருமக்களுக்கு இன்னல் விளைவிப்பதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது; அதைப்போல, காவல்துறையும் செயல்படுகிறது.

உலகெங்கும் வாழும் இந்துக்கள், அண்மையில்தான் சிவராத்திரி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில், மலேசியாவின் மாண்புக்கு பெருமை சேர்க்கும் சமய நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வேளையில் தொடர்ந்து ஈடுபடும் வினோத்மீது காவல்துறை இப்பொழுதாவது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்வதாக இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஶ்ரீகாசி-சங்கபூசன் தங்க கணேசன் வலியுறுத்தி உள்ளார்.



