
இந்திய சமுதாயத்திற்காக இன்னொரு பெருந்திட்டம்(Blueprint) என்பது, ஏழை இந்தியர்களுக்கான அணுகூலங்களை இன்னும் தள்ளிவைக்கின்ற வஞ்சக நடவடிக்கை ஆகும்.
விளிம்பு நிலையில் உள்ள இந்தியர்கள் குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்காக ஒரு பெருந்திட்டத்தை வரைவதற்காக, சரவாக்கைச் சேர்ந்த பெமாண்டு அமைப்பை மித்ராவில் இணைத்துள்ளதாக ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது; நலிந்த இந்தியர்கள் வளர்ச்சியை முடக்குவதற்காக மதானி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படும் இன்னொரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் பொன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்திய சமுதாயத்தின் துயரம், இக்கட்டான நிலையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் பொருத்தமில்லாதவற்றைப் பேசி காலம் கடத்தினால், 2007 வரலாறு மீண்டும் திரும்பும் என்பதை பிரதமருக்கும் ஒற்றுமை அரசாங்கத் தலைவர்களுக்கும் நினைவுபடுத்த விரும்புவதாக மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்திய சமுதாய மீட்சிக்காக 2012-இல் விரிவான பெருந்திட்ட அறிக்கையை
தான் சமர்ப்பித்தேன். அதை நிறைவேற்றுவதில் நஜீப் தொடர்ந்து அலட்சியம் காட்டியதால், அவரின் அமைச்சரவையில் இருந்து விலக நேர்ந்தது.
இருந்தாலும் ஹிண்ட்ராஃப் குறித்த அச்சம் நீங்காத நஜீப், செடிக் அமைப்பை உருவாக்கினார்; மஇகா-வும் தன் பங்கிற்கு ஒரு பெருந்திட்டத்தை வரைந்தது. பொதுமக்களின் வரிப்பணத்தை மில்லியன் கணக்கில் விழுங்கிய அந்த அறிக்கை, 2012 ஹிண்ட்ராஃப் பெருந்திட்டத்தின்பெரும்பாலான அம்சங்களைக் கொண்டிருந்தது. குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்களை உள்ளடக்கிய அதையும் நஜீப் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால், அதை நிறைவேற்றியதா என்பதுதான் கேள்விக்குறி. திட்டங்கள் எத்தனைத் தீட்டினாலும் அவற்றை அரசு நிறைவேற்றாதபோது அவற்றால் எந்தப் பயனும் இல்லை.

2018-இல் தான் மித்ராவிற்கு பொறுப்பேற்றிருந்த சமயத்தில், உண்மையான இலக்குடன் சரியான திட்டங்கள் வகுக்கப்பட்டன. மத்திய அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் பிரதமர் துறையின் முழு கவனத்தைப் பெற்ற அந்தத் திட்ட அறிக்கைகள், 2020-இல் ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை பிரதமர் துறை அலுவலகத்தில் இருந்தன.
இப்பொழுது இன்னொரு பெருந்திட்டம் என்று பம்மாத்து காட்டும் ஒற்றுமை அமைச்சர், இந்திய சமுதாயத்தை ஏமாற்றப் பார்க்கிறார். இந்திய சமுதாயத்தின் பேரவலத்தையும் ஒற்றுமை அமைச்சரின் மூடத்தனத்தையும் கருத்தில் கொண்டு, அனைத்து எம்பி-க்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
இதற்குச் சரியான தீர்வு வேண்டுமென்றால், இந்திய ஏழைகளுக்கான நாயகனாக தன்னை அடிக்கடி காட்டிக் கொள்ளும் அன்வாரே, தன்னுடைய பிரதமர் துறையின்கீழ் மித்ராவைக் கொண்டுவர வேண்டும்; அல்லது தனி அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேதமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்
🔊To listen to this news in Tamil, Please select the text.



