26.4 C
Kuala Lumpur
Wednesday, July 1, 2026

Vetri

இந்தியர்களின் வாக்கு இலவசம் அல்ல; கோல குபு பாரு வாக்காளர்களுக்கு எம்ஏபி நினைவூட்டல்!

🔥 Views : 12
👁 Reading Now : 32

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதிக்கு மே 11இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தங்களின் வாக்கு யாருக்கும் இலவசம் அல்ல என்பதை அத்தொகுதி இந்திய வாக்காளர்கள் உணர்த்த வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி மற்றும் ஹிண்ட்ராப் பேரியக்க ஜொகூர் மாநிலப் பொறுப்பாளர் மோகன் எல்லப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல்வாதிகள் பொதுமக்களிடையே உற்சாக உலா வருவதுடன் வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். இந்தக் கூத்து, கோல குபு பாருவில் மீண்டும் அரங்கேற உள்ளது.

அன்வார் பிரதமராக வந்தால் நம் பிரச்சினை யெல்லாம் தீர்ந்துவிடும் என்று இந்தியர்கள் நீண்டகாலமாக நம்பிக் கொண்டிருந்தனர். கடைசியில், இலவுகாத்த கிளியாக இந்திய சமுதாயம் மாறியது. அன்வாரின் அரசியல், மலாய் வாக்குகளை குறிவைத்தே நகர்கிறது. நியாயமான, ஜனநாயக, சமதரும மலேசிய சமுதாயத்தை உருவாக்குவேன் என்ற வாக்குறுதியை அன்வார் ஆழப் புதைத்து விட்டார்.

ஜசெக இந்தியர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றத்தையே அளித்து வருகிறது. ஜசெகவும் பிகேஆர் கட்சியும் கூட்டுசேர்ந்து பலவீனமான இந்தியத் தலைவர்களை நியமனம் செய்துவிட்டு, மடானி அரசில் இந்தியர்களின் பிரதிநிதிதுவம் இருப்பதாக அப்பாவி இந்தியர்களை ஏமாற்றி வருகின்றன. மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இந்த நிலையிலும்கூட இவ்விரு கட்சிகளும் மக்கள் பிரச்சினைகளைக் களைவதற்கான எந்தக் கொள்கையையும் உருவாக்க வில்லை என்பதுதான் உண்மை.

மலாய் உரிமைக்கு இயல்பாகவே முன்னுரிமை அளிக்கப்படும் நிலையில் சீனர்கள் அரசாங்கத்தில் வலுவான நிலையில் இருப்பதால் அவர்களின் நலனுக்கும் வர்த்தக வாய்ப்புக்கு எந்தத் தடையும் இல்லை. சிறுபான்மை இந்தியர்கள்தான் வாக்குப்பெட்டி அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டு, பின்னர் கறிவேப்பிலையைப் போல வீசப்படுகின்றனர்ர்.

எனவே, கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 18% இந்திய வாக்காளர்களும் நாட்டில் உள்ள அனைத்து இந்தியர்களின் ஆதங்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தத் தேர்தலில், நம்பிக்கைக் கூட்டணி, பெரிக்காத்தான் கூட்டணி ஆகிய இரு அணிகளுக்கும் வாக்களிக்காமல் பாடம் புகட்ட வேண்டும்.

இதன் மூலம் இவ்விரு கூட்டணிகளுக்கும் ஒரு தெளிவான தகவலை நாம் அனுப்ப முடியும்.

அப்பொழுதுதான், இந்திய சமுதாயம் அரசியல் விழிப்படைந்துள்ளது என்பதை இந்த இரு கூட்டணியைச் சேர்ந்தவர்களும் உணர்வதுடன் இந்தியர்களின் வாக்குகள் இலவசமாகக் கிடைக்காது என்பதையும் அறிவார்கள் என்று மோகன் மேலும் தெரிவித்துள்ளார்.

🔊To listen to this news in Tamil, Please select the text.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles