துணை வேந்தராக டத்தோஸ்ரீ சரவணன் மகுடம்
முதல் நாள் சாமிவேலு சிலை திறப்பு

🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், மே 23:
பல்கலைக்கழக உலகத் தர வரிசையில் உன்னத இடத்தை எட்டும் தனியாத தாகத்துடன் பன்முனைசார் கல்வி மறுமலர்ச்சியில் தன்னை முற்றும் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மே 25-ஆம் நாள் சனிக்கிழமை 15-ஆவது பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். ஏ. விக்னேஸ்வரன், இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராக மகுடம் ஏற்றபின் நடைபெறுகின்ற இந்த மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் சூடான மலேசிய அரசியல் களத்திலும் தண்மையான தமிழிலக்கிய தலத்திலும் ஒருசேர பயணிக்கும் டத்தோஸ்ரீ மு.சரவணன், எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மகுடம் சூட இருப்பது, இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவின் சிறப்பு அம்சம்.

23 ஆண்டுகளுக்குமுன் 55 மாணவர்களை மட்டும் கொண்டு தன் கல்விப் பயணத்தைத் தொடங்கிய இப்பல்கலைக்கழகம், தற்பொழுது உள்நாட்டு-பன்னாட்டு மாணவர்கள் என ஏறக்குறைய 3,500 பேரைக் கொண்டு செம்மாந்து விளங்குகிறது.
தங்களின் பட்டப் படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் அதேவேளை, சிறந்த அடைவு நிலையை எட்டியவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கும் நிகழ்வும் இதில் இடம்பெறுகிறது; தவிர, எய்ம்ஸ்ட் பல்கலைக்-கழகத்தின் மதிப்பிற்குரிய முன்னாள் மாணவர்களின் சிறந்த பங்களிப்பை பாராட்டும் முகமாக, அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

2001 அக்டோபர் மாதம் 30-ஆம் நாள் முறையாக தொடக்கம் கண்ட எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், உலக அளவில் 500 தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் ஆசிய மண்டல அளவில் 200 பல்கலைக்கழக பட்டியலிலும் இடம்பெறுவதற்கு ஏதுவாக தன்னை தக அமைத்துக் கொண்டுள்ளது.
புதுமையான கல்வி நடைமுறை, கல்வி எல்லையைக் கடந்த பொதுநோக்கு, புதுமைப் பாங்கு ஆகிய தன்மைகளுடன் மாணவர்களை உருவாக்கும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், உயர்கல்வியை நாடும் திறந்த நிலை மற்றும் தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கும் ஏற்ற நெகிழ்வான கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது.

எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், நாட்டின் தேசிய கல்விக் கொள்கையில் இருந்து சிறிதும் வழுவாமல், குறைந்த செலவில் தரமான இளங்கலை மற்றும் முதுகலைக் கல்வித் திட்டங்களை வழங்குவதில் உறுதியுடன் உள்ளது; அதற்கேற்ப, முன் அனுபவ கற்றலுக்கான அங்கீகாரம்-APEL உள்ளிட்ட அம்சங்களையும் இந்தப் பல்கலைக்கழகம் கைக்கொண்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் வளமான-நலமான கல்விச் சூழல் நிலவுகிறது. இங்கு, மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல், உயர் தொழில்நுட்பத் துறை, பட்டயக் கணக்கியல், செய்யறிவு-AI, இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட 41 துறைகளின் மூலம் பன்முனைசார் கல்வி வழங்கப்படுகிறது. இங்கு செப்பம்பெறும் பட்டதாரிகளும் நாளைய உலகிற்கேற்ற பன்முகத்தன்மையப் பெறுகின்றனர்.

பட்டம்பெறும் மாணவர்கள், பெற்றோர்-குடும்பத்தினர், கல்வி ஆர்வலர்கள் பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கில் திரள்வதால், எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் விழாக்கோலம் காண்கிறது.
இதற்கிடையே, பட்டமளிப்பு விழாவிற்கு முதல் நாள், மே 24-ஆம் நாள் மாலை 6:00 மணி அளவில் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு அடியும் ஆதரமுமான துன் சாமிவேலனாரின் திருவுருவச் சிலை, மஇகா தேசியத் தலைவரும் பல்கலைக்கழக வேந்தருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்து வைக்கப்படுகிறது
