டான்ஸ்ரீ சோமா அரங்கில் இலக்கியத் தேனீக்களுக்கு தேன் உறுதி!!

🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூலை 02:
பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், உடுமலை நாராயண கவி போன்ற தமிழகத்து கவிப்பெருமக்கள் வரிசையில் இந்த மலையகத்திலும் ஊர்ப்பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்ட கவிவாணரான பங்சார் எ.அண்ணாமலையின் கவிதை நூல் வெளியீட்டு விழா, இன்று மாலையில் அனைவருக்கும் அறிமுகமான தலைநகரத்து டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் நடைபெறுகிறது.
அண்மையில் நேதாஜி அரங்கில் ஆளும் தோளும் தாளாமல் மலைமாலையில்
சிக்கி மஇகா-வின் அரசியல் மையமாக உருவெடுத்துள்ள சொல்வேந்தரும் எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணைவேந்தருமான டத்தோஸ்ரீ மு.சரவணன் தலைமையில் இந்த இலக்கிய சங்கமம் இடம்பெற இருப்பது, சிறப்பு.

சென்னையைச் சேர்ந்த நூற்பதிப்பாளர் முனைவர் மோ.பாட்டரசன் முன்னிலை வகிக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் ‘பாவரசி’ முனைவர் மனோண்மணிதேவி அண்ணாமலை, செந்தூல் வட்டாரத்தில் இலக்கிய மையமாக பரிமாணமுற்றுள்ள முத்தமிழ்ப் படிப்பகத் தலைவர் இராமன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள்-இந்நாள் தலைவர்களும் அன்புச் சகோதரர்களுமான பெ.இரேஜேந்திரன்-பெ.மோகனன், டத்தோ பிரகாஷ் லெட்சுமணதாஸ் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விழையும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் தமிழன்பர்களுக்கும் ஏமாற்றம் இருக்காது என்று எண்ணுகிறேன்.
வில்லேந்தி போர்முனைக்குச் செல்லும் மறவனைப் போல சொல்லேந்தி கவிதையுடன் மல்லுக்கட்டும் இந்த சந்தக் கவிஞரான பங்சார் எ.அண்ணாமலை, இன்று நடத்தும் வெளியீட்டு விழாவிற்கும் மலேசியத் தமிழ் ஊற்று சங்கமம், மலேசியத் தமிழ்ப் பாவலர் மன்றம், சிலாங்கூர்- கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் போன்ற அமைப்புகளை படைதிரட்டிக் கொண்டு வருகிறார்.
மரபுக் கவிஞரும் சந்தப் பாவலருமான பங்சார் அண்ணாமலை இன்று வெளியீடு செய்யும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் குறித்து ஒன்றும் தெரியவில்லை. இருந்தாலும் பல்சுவையும் பன்முகக் கருத்தும் இடம்பெற்றிருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனாலும், இங்கே ஒரு கருத்தைப் பதிவிட வேண்டியுள்ளது. பெயரில்தான் ஊர்ப் பெயர் ஒட்டிக் கொண்டுள்ளது என்றால், நூற்தலைப்பிலும் ஊர்ப்பெயர் தொற்றிக்கொண்டு முகப்பிலேயே குந்தியுள்ளது.
பொதுவாக தாளையும் கோலையும் ஏந்தும் எழுத்தாளர்கள்-புலவர்களின் சிந்தனையும் பார்வையும் விசாலமானது; நுட்பமானது; வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்ட்டிருப்பதைப் போல ‘அற்றம் காக்கும் கருவி’யைப் போன்றது; வருமுன் உரைக்கும் வல்லமை பெற்றது என்றெல்லாம் கருத இடமுண்டு.
அதனாற்றான், மன்னராட்சி காலத்தில் அரசருக்கு அருகில் அமைச்சரையும் முந்திக் கொண்டு அமர்ந்தவர்களாக தமிழ்ப் புலவர் பெருமக்கள் விளங்கியுள்ளனர். இதை அடிப்படையாக வைத்துதான், ‘நினைவில் வாழும்’ கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், கணியன் பூங்குன்றனாரை செல்லமாக ஒருமுறை விமர்சனம் செய்திருந்தார்.
அந்தக் கருத்து அடிப்பதைப் போலவும் அதேவேளை தாய்மாமன் மறுமகவை மலர்ச்செண்டாலே பதம்பார்த்ததைப் போலவும் வெகுநுட்பமாக அமைந்திருந்தது.
‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று உலக சகோதரத்துவத்தை பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன கணியன் பூங்குன்றனாரின் பார்வை தாய்மொழியான தமிழை, சொந்த இனத்தை, நிலத்தை, நீர்வெளியை மட்டுமல்ல; வான்வெளியையும் கடந்து இருந்தது.
அப்படிப்பட்ட பெருங்கவிப்பெருமகனான கணியன், தன் பெயருடன் பூங்குன்றம் என்ற ஊர்ப் பெயரையும் ஒட்டிவைத்தது சரியா என எண்ணிடத் தோன்றுகிறது என்பதுதான் கலைஞரின் அந்த விமர்சனம்.
டான்ஸ்ரீ சோமா அரங்கின் இன்றைய இலக்கிய நாயகனான பங்சார் அண்ணாமலையைப் பார்த்து, அந்த விமர்சனத்தைத் திருப்பிவிட விரும்பவில்லை. இருந்தாலும், உச்சி மரத்து இலை, இலேசாக அசைவதைப் போல தமிழ் மொழியில் பொருளே இல்லாத ஒரு சொல்லான ‘சும்மா’ என்ற சொல்லை துணைக்கழைத்து ‘சும்மா குறிப்பிட்டுள்ளேன்’.
மலேசியாவில் தலைமைத்துவ பயிற்சி நடத்தி, நடத்தி ஏராளமான தலைவர்களை உருவாக்கி விட்டோம்; இன்றைய நிகழ்ச்சியிலும் ஏராளமான தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இனி தொண்டத்துவப் பயிற்சியை நடத்தி ஏராளமான தொண்டர்களை உருவாக்குவோம்.
