27.5 C
Kuala Lumpur
Tuesday, June 30, 2026

Vetri

மஇகா தேர்தல்-2024; நெல்சன் முந்துகிறார்! சிவசுப்பிரமணியம் இடம் பிடிக்கிறார்

🔥 Views : 11
👁 Reading Now : 40

🔊To listen to this news in Tamil, Please select the text.

-நக்கீரன்

கோலாலம்பூர்:
இன்று ஜூலைத் திங்கள் 6-ஆம் நாள் நடைபெறும் மஇகா-வின் மூன்று உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் முந்துவதாகத் தெரிகிறது.

அதைப்போல 21 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயலவையில் சிவசுப்பிரமணியமும் இடம்பெறுவார் என கள நிலவரம் சுட்டிக் காட்டுகிறது.

புத்தெழுச்சிபெறும் மஇகா-வில் அடுத்த மூன்றாண்டுகளுக்கான அதிகார மையம் ஏறக்குறைய முடிவாகிவிட்டது;

ஜெமினி பொம்மையைப் போன்ற இருவர் பாரம்பரிய வரலாற்றுப் பெருமைமிக்க இந்த அரசியல் பேரியக்கத்தின் தேசியத் தலைவராகவும் துணைத் தலைவராகவும் போட்டியின்றி முரசுகொட்டி கொலுவேற்றப்பட்டு விட்டனர்.

பிரித்தானிய ஆதிக்க ஆட்சிக்கு எதிரான விடுதலை வேட்கையில் மஇகா முகிழ்ந்த அதே காலக்கட்டத்தில் உதயமான மலேசிய திராவிடர்க் கழகத்தில், அடுத்த தலைமையை உறுதிசெய்து கொண்டு இன்றைய தலைமை பயணிக்கிறது;

ஏறக்குறைய இதைப்போலவே, நாட்டின் மூத்த சமய இயக்கமான மலேசிய இந்து சங்கத்திலும் அடுத்த தலைமையை உறுதிசெய்தபடி இன்றைய தலைமை செயல்படுகிறது.

அதனாற்றான், மலேசிய இந்திய சமுதாயத்திற்கு நன்கு பரிச்சயமான இந்த சமூக இயக்கமும் சமய அமைப்பும் இன்று அமைதிப் பூங்காவாகத் திகழ்கின்றன.

ஆனால், இந்த இரு இயக்கங்களும் தங்களுக்கு கிடைக்கும் நிதி ஆதாரங்களை நீதிமன்ற படிக்கட்டுகளில் சிதறவிட்டுவிட்டு பலவீனமாக இருக்கும் நிலை, இனியாவது மாறவேண்டும்.

அதுபோக, சமூக-சமய இயக்கங்கள் இப்படி ஒருங்கிணைந்து பயணிப்பதைப் போல அரசியல் இயக்கமான மஇகா-வும் அதேப் பாணியில் செயல்படுவதால், மலேசிய இந்திய சமுதாயத்தில் அமைதி தவழ்கிறது.

இன்றைய மஇகா தேசியத் தலைவருக்கு தும்மல் வந்தால் துணைத் தலைவர் கைக்குட்டை எடுக்கிறார்.

அதைப்போல துணைத் தலைவருக்கு பசி எடுத்தால் தேசியத் தலைவர் சாப்பிடுகிறார்;

ஈருடல் ஓருயிர் காதலரை விஞ்சும் அளவிற்கு ஒத்த கருத்தினராக, ஒருமித்த பார்வையாளர்களாக டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனும் டத்தோஸ்ரீ மு.சரவணனும் திகழ்கின்றனர்.

அதனால், கட்சியில் அணியென்னும் பிணிக்கு அடியோடு வாய்ப்பில்லை.

அரசியல் அதிகாரத்தில் இல்லாத நிலையிலும் மஇகா இன்று எழுச்சியுடன் இருப்பதற்கு காரணம் என்ன?

ஒற்றுமை என்னும் ஒற்றைச் சொல்லும் பன்முக பண்புநலனும்தான் அதற்கான காரணம்.

10 ஆண்டுகளுக்கு முன் மஇகா இப்படியா இருந்தது?

மஇகா தலைமையகத்தில் காலையில் ஒரு தரப்பு பூட்டுபோடும்; அத்தரப்பு கலைந்துசென்ற நேரம்பார்த்து எதிர்த்தரப்பு முரட்டுக்குரட்டுடன் வந்து அப்பூட்டை வெட்டி எடுக்கும்.

ஊடகத்தினருக்கு ஒருகட்டத்தில் ஆர்வமும் மறுபொழுதில் சலிப்பும் மாறிமாறி ஏற்படும் அளவுக்கு அன்றாடம் செய்தியாளர்க் கூட்டம் மஇகா தேசியத் தலைமையகமான நேதாஜி மண்டபத்தில் இடம்பெறும்.

அரசியலில் அதிர்ஷ்டமும் அரசப் பொறுப்பும் ஒருசேர ஒட்டிக் கொண்டிருந்தது ஒருபுறம் என்றால் அந்நாளைய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ கோ.பழநிவேலுவின் ஏமாளித்ததனம் இன்னொருபுறம் என்ற நிலையில் தலைமைப் பொறுப்பில் அமர்ந்த டான்ஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், நெருக்கடியான நேரத்தில் மஇகா-வையும் இந்திய சமுதாயத்தையும் கைகவிட்டுவிட்டு அப்படியே ஒதுங்கிக் கொண்டார்.

மருத்துவத் தொழிலுக்கேத் திரும்ப வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்-கடவுளின் சித்தம்போலும் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

அதன்பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்ற விக்னேஸ்வரன், சரவணனை தேசியத் துணைத் தலைவராக இணைத்துக் கொண்டு மஇகா-வை வழிநடத்துகிறார்.

போதாக்குறைக்கு எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராகவும் பிரகடனம் செய்தார்.

அந்தப் பன்னாட்டு உயர்க்கல்வி நிறுவனத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா கடந்த மே மாதம் 25-ஆம் நாள் நடைபெற்றபோது, எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றின் முத்தாய்ப்பு நிகழ்வாக இது அமைந்தது.

தேசியத் தலைவராகவும் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று மஇகாவை வழிநடத்துவதைப்போல, வேந்தராகவும் இணைவேந்தராகவும் எய்ம்ஸ்ட் பல்கலைகழகத்திற்கு பொறுப்பேற்றுள்ள டான்ஸ்ரீ விக்னேசுவரன், டத்தோஸ்ரீ சரவணன் இருவருக்கும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அரசியல் களம் மிகவும் கரடுமுரடானது.

காரணம், மலேசிய அரசியலை வலச்சாரித்தன்மை வலிமையாக சூழ்ந்துவிட்டது.

மலேசியாவை மட்டுமல்ல; உலகின் பெரும்பாலான நாடுகளை இன்று, மதவாதம் ஆட்கொண்டுள்ளது.

ஜனநாயகத்தின் தொட்டில் என்று கருதப்பட்ட இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில்கூட மதவாத அரசியல் சிம்மாசனம் பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் 14 ஆண்டுகள் ஆட்சி நடத்திய கன்சர்வேட்டிவ் கட்சியை புறமுதுகுகாட்டி ஓடும்படி செய்து நேற்று ஆட்சியைப் பிடித்துள்ள தொழிலாளர் கட்சி சார்பில் பிரதமர் பொறுப்பேற்றுள்ள கியர் ஸ்டாமரும் வலச்சாரி சிந்தனைக் கொண்டவராகத் தெரிகிறார்.

இதைப்போல பிரான்ஸ் நாட்டுத் தேர்தலிலும் லே பென்னின் தீவிர வலதுசாரிக் கட்சி முன்னிலைப் பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், கடந்த ஞாயிற்றுக்கிழமை-ஜூன் 30இல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அமெரிக்காவைப் போல அதிபர் ஆட்சி முறையைக் கொண்ட பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கிற்கு இது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஜெர்மனி உள்ளிட்ட ஏராளமான நாடுகளை ஏற்கெனவே மதவாத அரசியல் பீடித்துள்ளது.

போதாக் குறைக்கு அமெரிக்காவில் மீண்டும் வலச்சாரி சிந்தனைகொண்ட டிரம்ப், குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் பிரதமர் ஆவாரென பன்னாட்டு அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால், வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளத் அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்குப் பதிலாக மாற்று வேட்பாளரை களம் இறக்க ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளது.

இப்படி உலகம் முழுவதும் வலச்சாரி அரசியல் தலையெடுப்பதால், பன்னாட்டு ஜனநாயகம் பின்னோக்கிப் பயணிக்கிறது.

ஆசியாவில் ஏற்கெனவே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம், மியன்மார் போன்ற நாடுகளில் முழு மதவாதமும் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நேப்பாளம் போன்ற நாடுகளில் பாதி மதவாத அரசியலும் ஆக்கிரமித்துள்ளன.

இந்த நிலையில், மலேசியாவும் மதவாத அரசியலில் மூழ்கத் தொடங்கி உள்ளது.

2022 பொதுத் தேர்தலில் எழுந்த பசுமை அலை, பச்சையான மதவாதத்தை கைக்கொண்டது; அதை வீழ்த்த நினைக்கும் மடானி மலேசியப் பிரதமர் அன்வாரின் நடவடிக்கையிலும் ஜனநாயகக் கூறுகளைவிட மதவாத வெளிப்பாடு அதிகமாகத் தெரிகிறது.

காந்தியைக் கொன்ற சனாதனக் கொள்கையை பச்சையாக ஆதரிக்கும் சரசுவதி கந்தசாமியை கூடவே வைத்திருக்கிறார் பிரதமர் அன்வார். இப்படிப்பட்ட அன்வாரும் சரசுவதியும் அம்பேத்கர் புகழ்பாடுவது விந்தையானது; வினோதமானது; ஒரு வகையில் மோசடியானது.

இதே மஇகாவிற்கும் சனாதன வாடை கொஞ்சம் உண்டு;

இத்தகைய சூழலில், மஇகா முன்னெடுக்கப்போகும் அரசியலும் முன்பின்னாகவும் முரண்பாடாகவும் இருக்கும் என்பதை அவதானிக்க முடிகிறது.

எது எவ்வாறாக இருந்தாலும் 16-ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, மஇகாவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்தியில் மாற்றம் தேவை; புதிய ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதை கட்சியின் அடித்தட்டு உறுப்பினர்களும் தொண்டர்களும் எதிர்பார்க்கின்றனர்.

அத்தகைய மாற்றத்தின் அடையாளமாக தான் நிச்சயம் திகழ்வேன் என்று டத்தோ நெல்சன் ரெங்கநாதன் தெரிவிக்கிறார்.

கட்சியின் தேசியத் தலைவர்-துணைத் தலைவர் ஆகியோரின் திட்டங்களுக்கும் செயலாக்கத்திற்கும் உற்ற துணை நல்குவேன் என்பதை கட்சியினர் நன்கு அறிந்திருப்பதால் தான் பிரச்சாரத்திற்கு செல்லும் இடம் எல்லாம் அபரிமித ஆதரவை கட்சியினர் அளிக்கின்றனர். அதனால், மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராக தான் வெல்வது உறுதி என்கிறார் நெல்சன். நெல்சனுக்கு வாக்களிக்க வேண்டிய என் 3.

முடிவு, நாளை இந்நேரம் அறிவிக்கப்படலாம்.

களத்தில் இருக்கும் ஏனைய மூவர், ஏற்கெனவே உதவித் தலைவர்களாக இருந்த டத்தோ த. மோகன், டத்தோ த. முருகையா, தென்புலத்தைச் சேர்ந்த டத்தோ அசோகன்.

இதைப்போல, மத்திய செயலவைக்கு புதிதாக களம் இறங்கியுள்ள சிவசுப்பிரமணியமும் தான் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தேசியத் தலைவரின் வலக்கரமாகவும் இடக்கரமாகவும் விளங்கும் சிவசுப்பிரமணியன் மத்திய செயலவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியெனத்தான் தெரிகிறது.

இதுவரை பிரச்சாரத்திற்குச் சென்ற 60 இடங்களிலும் கட்சியினர் வெளிப்படுத்திய ஆதரவு அமோகம். என்கிறார் இவர்.

இதன் தொடர்பில் கட்சியின் தேர்தல் இயந்திரம், நாடு முழுவதும் 39 தேர்தல் மையங்களைத் திறந்துள்ளது.

மஇகா, தேசிய அளவில் 139 தொகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தொகுதி சார்பிலும் நான்கு பேராளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

அதைப்போல 3,500 கிளைகளைக் கொண்டுள்ளது இந்த மூத்தக் கட்சி.

ஒவ்வொரு கிளை சார்பிலும் கிளைத் தலைவர், கிளைச் செயலர், இளைஞர் பிரிவுத் தலைவர், மகளிர் பிரிவுத் தலைவர், புத்ரா பிரிவுத் தலைவர், புத்ரி பிரிவுத் தலைவர் என ஆறு பேர் வாக்களிக்க உள்ளனர்.

மொத்தத்தில், தொகுதிப் பேராளர்கள் 556பேர், கிளைப் பேராளர்கள் 21,000பேர் என 21,556 பேராளர்கள் இன்று பகல் 1:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை நடைபெறும் வாக்களிப்பில் கலந்துகொண்டு மஇகா-வின் அடுத்த மூன்றாண்டு தவணைக்கான 3 உதவித் தலைவர்களையும் 21பேர் கொண்ட புதிய மத்திய செயலவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

மத்திய செயலவைக்கு களம் இறங்கியுள்ள 45 பேரில், சிவசுப்பிரமணியனுக்கான எண் 20.

மஇகாவைத் தொற்றியுள்ள இந்த உட்கட்சித் தேர்தல் பரபரப்பும் முடிவும் நாளை இந்நேரம் சந்தைக்கு வந்த முற்றிய கத்தரிக்காயாக இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles