
🔊To listen to this news in Tamil, Please select the text.
அழகுக்கலையில் கால் பதித்து தான் மட்டும் உயர வேண்டும் என்று எண்ணம் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் இந்தத் தொழிலைக் கற்று கொடுத்து இளைஞர்களும் இளைஞிகளும் பட்டயம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறார் ஒய்எஸ்ஏ அகாடெமியின் அழகுக்கலை நிபுணர் யோகேஸ்வரி ராஜேந்திரன்.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் 17 காலை 7 மணியிலிருந்து மறுநாள் காலை 9 மணி வரை 150 பெண்களுக்கு 24 மணிநேரம் இடைவிடாத இலவச ஹேர்கட் செய்த முதல் பெண்களில் ஒருவர் ஆவார். இவர் மலேசிய சாதனைப் புத்தக்கத்தில் இடம்பிடித்துள்ளார்.
அவர் பேசுகையில், 2005 முதல் அழகுக்கலையில் ஆர்வம் கொண்டு ஃப்ரெலென்ஸாக ஆரம்பித்தேன். 2014ஆம் ஆண்டு அகாடெமி திறந்து அதன் மூலம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதோடு நானும் இக்கலையை மேலும் கற்றுக் கொண்டு திறம்பட செயல்பட ஆரம்பித்தேன்.
இரண்டு அரசாங்க கல்லூரியில் வேலை புரிந்து கொண்டு அகாடெமியில் மாணவர்களுக்கு இத்துறை கற்று கொடுத்து வந்தேன். இன்று வரை அரசாங்கத்தில் மலேசியத் திறன் மேம்பாட்டுத் துறையில் பணி புரிகிறேன். இதற்கிடையில் தான், யோகேஸ் அறவாரியத்தின் தோற்றுநராகவும் இருக்கிறேன்.

2016ஆம் ஆண்டு சிலாங்கூர் பெண்கள் திறன்கள் சங்கம் தோற்றுவித்தேன். என்னால் முடிந்த வரை குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வருடத்திற்கு முடிந்த வரை பி40 மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்து வருகிறேன்.
அதுவும் குறிப்பாக பி40 பிரிவில் தனித்து வாழும் தாய்மார்கள், பகுதிநேர வேலை தேடுபவர்கள் என பலருக்கு இலவச வகுப்புகள் நடத்திக் கொடுத்து வருகிறேன்.
இலவச கல்லூரியாக மற்றவர்களுக்கு இத்துறையில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அவா. அதற்கான வேலைகள் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அடுத்த தலைமுறையினருக்கு சிகை அலங்காரம், முடி அலங்கார நிபுணர்களாக உருவாக்க வேண்டும். நம் இன மக்களுக்கும் இதனை கொண்டு வர வேண்டும்.
சிலர் 10 முதல் 20 வருடமாக முடி திருத்தும் கடை வைத்திருப்பார்கள், சிகை அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால், முறையான அரசாங்க சான்றிதழ்கள் இருக்காது. அவர்களுக்கு நாங்கள் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்றுக் கொடுத்து நிபுணராக பணிபுரிய இந்த அகாடெமியின் மூலம் இயங்கி கொண்டிருக்கிறேன்.
இக்கலைத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் 0166473318/0102133126 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டு யோகேஸ்வரியை அணுகலாம்.



