27.9 C
Kuala Lumpur
Wednesday, July 22, 2026

Vetri

இந்துப் பெண்கள் பகடிவதையை அடியோடு தவிர்க்கவும்‘டிக்-டோக்’ பயனீட்டை மட்டுப்படுத்தவும்: -மகளிர் தலைவர் முனைவர் கலைவாணி

🔥 Views : 19
👁 Reading Now : 30

🔊To listen to this news in Tamil, Please select the text.

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 09:
மனதைக் கீறி, உடலை வதைத்து, உயிரையும் பறிக்கும் அளவுக்கு மனித மனங்களை ஈயக் கட்டியால் நிரப்பும் ‘பகடிவதை’ என்னும் கொடூரத்தை பெண்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, இந்துப் பெண்கள் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மலேசிய இந்து சங்க மகளிர்த் தலைவர் முனைவர் கலைவாணி சண்முகம் கேட்டுக் கொள்கிறார்.

தனி நபராகவோ குழுவாகவோ வாய்மொழிவழி மற்றவரை பகடியும் வதையும் செய்த காலம் மாறி, ‘டிக்-டோக்’ போன்ற இணைய செயலிமூலம் பகடிவதை செய்வது, தற்பொழுது எல்லை கடந்துவிட்டது. இத்தகைய போக்கினால், விலைமதிப்பற்ற மூன்று உயிர்களை இழந்துவிட்டோம். இந்த வகையில் வெகுஅண்மையில் பலியானவர், சமூக வலைத்தள பிரபலம், இராஜேசுவரி என்ற இஷா.

வாழவேண்டிய வயதில் வாழ்க்கையைத் தொலைக்கும் அளவிற்கு அவருக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் சமூக அவலத்தின் முகத்தையும் முகவரியையும் போன்றவர்கள்; மன்னிக்ககூடாதவர்கள்.

டிக்-டோக் மூலம் ஊடாடுவதையும் அச்செயலியைப் பயன்படுத்துவதையும் ஒருசிலர் பெருமையாகக் கருதுகின்றனர். கடந்த நூற்றாண்டின் பின்பகுதியில் மின்னஞ்சலைப் பயன்படுத்தினாலே, பெருமைக்குரியதாக இருந்தது; தொடர்ந்து முகநூல், புலனம், கீச்சகம் போன்றவை அறிமுகம் ஆனதும், இணையவழி தகவல் பரிமாற்றத்திற்கு மடைதிறந்த வெள்ளம் போன்ற வாய்ப்பு ஏற்பட்டது.

மேலும் ‘X’ தளம், டிக்-டோக் போன்ற செயலிகள் அறிமுகம் ஆக ஆக, அத்தனையையும் மக்கள் பயன்படுத்துகின்றனர். விவேக தொலைபேசியை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஊடகத்தாரைப் போன்று கருத்தையும் காட்சியையும் நினைத்த பொழுதில் நினைத்தில் இடத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

பள்ளி-கல்லூரி பெண்களைவிட நடுத்தர வயதுப் பெண்களிடம் இத்தகையப் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருவது, சமூகத்திற்கு நல்லதல்ல; பெண்களின் கையில் புத்தகத்தையோ நாளிதழையோப் பார்ப்பது அரிதாகி விட்டது. பெண்கள் படிக்கும் காட்சியைக் காண்பது அரிதினும் அரிதாகி விட்டது.

உண்மையில், தகவல் தொடர்பை எளிமைப்படுத்தும் விவேக தொலைபேசியும் அவற்றுக்கான செயலிகளும் தேவைதான்; ஆனால், அவற்றின் பாங்கறிந்து வகையாகப் பயன்படுத்தினால் எந்நாளும் துன்பமில்லை.

மாறாக, அடுத்தவரை ஏளனப்படுத்தவும், சிறுமைப்படுத்தி பகடிவதை புரியவும் பயன்படுத்தினால், இன்னும் எண்ணற்ற இஷா-க்களை சமூகம் இழக்க நேரிடும்.

நல்வாய்ப்பாக, சமூக ஆர்வலர்கள் இதில் தலையிட்டதும் காவல் துறையினர் நடவடிக்கையில் இறங்கியதும் ஆறுதலான விசயம்.

நிறைவாக, பகடிவதை என்னும் பொல்லாங்கு குணத்தை அடியோடு விட்டு-விடும்படி இந்தியப் பெண்களிடம், குறிப்பாக இந்துப் பெண்களிடம் மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதுடன் வாய்ப்பு கிடைக்கும்-பொழுதெல்லாம் குடும்ப அக்கறையுடன் பொருளாதாரம் குறித்து சிந்திக்கும் படியும் ஆன்மிக நூல்களைப் படித்து சமயம்-நன்னெறியில் தெளிவு பெறும்படியும் சமூக-சமய நடவடிக்கையில் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளும்படியும் கேட்டுக் கொள்வதாக முனைவர் ச.கலைவாணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles