
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், ஆக.17:
வங்கதேச இடைக்கால அரசின் தலைவரும் ஆலோசகருமான பேராசிரியர் முகமது யூனுஸ், அந்த நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 10% அளவிற்குள்ள அனைத்து சிறுபான்மை சமய மக்களும் பாதுகாக்கப் படுவார்கள் என்றும் இனி எந்தத் தரப்பினருக்கும் அச்சுறுத்தலோ மருட்டலோ ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்றும் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
குறிப்பாக, அதிக பாதிப்பிற்கு ஆளான இந்து சமய மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், வங்கதேச தலைநகரம் டாக்காவிற்கு அருகில் உள்ள இந்து வழிபாட்டுத் தலமான துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு வருகை மேற்கொண்டதை அந்த நாட்டின் அனைத்து இந்து மக்களும் நம்பிக்கையுடன் பார்க்கின்றனர்.
வங்கதேசத்தில் மாணவர் தரப்பு முன்னெடுக்கும் அரசியல் போராட்டம் மாதக் கணக்கில் தொடர்வதைப் பயன்படுத்திக் கொண்டு மதவெறியர்களும் சண்டியர்களும் அங்குள்ள சிறுபான்மை சமய மக்களைத் தாக்குவதுடன் அவர்களின் வீடுகளையும் கடைகளையும் சூரையாடி கொள்ளையடித்து வந்தனர். தங்க ஆபரணங்களைக் கவர்வது அவர்களின் முதல் இலக்காக இருக்கிறது.

இதில், கிறிஸ்துவர்கள், பௌத்தர்களைவிட இந்துக்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து, மலேசியாவில் முதன்முதலில் குரல் கொடுத்தவர் மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவரும் ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவருமான பொன்.வேதமூர்த்திதான்.
இதன் தொடர்பில் ஆகஸ்ட் 8-அம் நாள் தலைநகரில் மெழுகுவர்த்திச் சுடர் அணிதிரள்விற்கும் அவர் ஏற்பாடு செய்தார்.
அதைத் தொடர்ந்து பல தரப்பினரும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர். கோலாலம்பூர் அம்பாங் சாலையில் உள்ள வங்கதேச தூதரகத்தில் கண்டன மகஜரும் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், சமதரும சிந்தனையும் சமய இணக்கப்போக்கும் கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் அணிதிரண்டு அங்குள்ள சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
குண்டாந்தடிகளை எந்தியபடி, முறைவைத்து 24 மணி நேரமும் இந்து-கிறிஸ்துவ-பௌத்த சமய மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், தீவிரவாத கலகக்காரர்களிடம் இருந்து அந்த மக்களைத் தற்காத்தும் வருகின்றனர். இதை அறிந்த வங்கதேச காவல்துறையினர் இத்தகைய முற்போக்கு இளைஞர்களைப் பாராட்டி, பார்வையாளர்களாக கடந்து செல்கின்றனர்.

இதற்கிடையில், அந்த நாட்டின் இடைக்கால நிர்வாகக் குழுவிற்குப் பொறுப்பேற்றுள்ள பேராசிரியரும் பொருளாதார வல்லுநருமான முகமது யூனுஸ், அங்குள்ள பிரபலமான அம்மன் ஆலயத்திற்கு வருகை மேற்கொண்டு, அங்கு திரண்ட மக்களிடையே பாதுகாப்பு உறுதிமொழி அளித்திருப்பது வங்க தேசத்தின் சிறுபான்மை மக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
தவிர, முகமது யூனுசின் இந்த நடவடிக்கை, பன்னாட்டு கவனத்தையும் ஈர்த்துள்ளது.
